2010-02-19 14:28:22

இலங்கையில் சட்டம் ஒழுங்கு காக்கப்படுமாறு துறவு சபைகளின் தலைவர்கள் அழைப்பு


பிப்.19,2010 இலங்கையில் சரத் ஃபொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளதையடுத்து இடம் பெற்று வரும் நிகழ்வுகள் கவலைதரும் அதேவேளை, நாட்டில் சட்டம் ஒழுங்கு காக்கப்படுமாறு அந்நாட்டு துறவு சபைகளின் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

நாட்டில் அடிப்படை மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும், ஒப்புரவு, மன்னிப்பு, பத்திரிகை சுதந்திரம், பேச்சு சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் ஆகிய கொள்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும் எனவும் அத்தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

CMRS என்ற இலங்கை துறவு சபைகளின் தலைவர்கள் அமைப்பு இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தவறு செய்பவர்கள் பாதுகாக்கப்படுவது, ஜனநாயக அமைப்பிலும் நீதியான அரசிலும் நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகின்றது என்று கூறப்பட்டுள்ளது.

இப்புதனன்று வெளியிடப்பட்டுள்ள இவ்வறிக்கைக் குறித்து கருத்து தெரிவித்த அந்த அமைப்பின் தலைவர் அருள்திரு ரோகன் டாமினிக், சரத் ஃபொன்சேகாவின் கைது, மனித மாண்பையும் சட்டம்-ஒழுங்கையும் மதிக்கும் அனைத்து இலங்கை மக்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது என்று கூறினார்.

வருகிற ஏப்ரல் 8ம் தேதி நடைபெறுவதாய் அறிவிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் இடம் பெறுவதற்கு உதவுவதற்கென, இந்த CMRS அமைப்பு, சிறப்புக் குழு ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டு இருப்பதாகவும் அருள்திரு ரோகன் தெரிவித்தார்








All the contents on this site are copyrighted ©.