2010-02-18 15:07:56

திருநீற்றுப் புதன் மாலை திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை


பிப்.18,2010 மனிதர்களாகிய நாம் மண்ணாய் இருந்தாலும், கடவுளால் அன்பு செய்யப்படும் மண்ணாய் இருக்கிறோம் என்று திருத்தந்தை கூறினார். இத்திருநீற்றுப் புதனன்று மாலை புனித சபீனா பசிலிக்காவில் திருப்பலி நிகழ்த்திய திருத்தந்தை, ஒவ்வொரு கிறிஸ்தவனும் பாலை நில அனுபவத்தில் பங்கு கொள்வதன் மூலம் கிறிஸ்துவின் உயிர்ப்பில் பங்கு பெற முடியும் என்று தன் மறையுரையில் கூறினார்.
மனிதரின் மையமான உள்ளத்தில் இருக்கும் தீமைகளை உணர்வதே மீட்புக்கான முதல் படி என்று கூறிய திருத்தந்தை, மன்னிப்பையும் அதன் வழியாக இறைவன் நம்மை வாழவைப்பதையும் எடுத்துரைத்தார். உபவாசம், கண்ணீர், புலம்பல் ஆகிய பாவ பரிகாரம் தேடும் முயற்சிகள் அனைத்தும், தீமைகள் குடி கொண்டுள்ள நம் உள்ளத்தைப் புரிந்து ஏற்றுக் கொண்டால்தான் பலன் தரும் முயற்சிகளாக மாறும் என்று கூறினார் திருத்தந்தை. மற்றவர்கள் மீது மதிப்பு கொள்வதும், நம் அன்புக்கு உகந்தவர்கள் இல்லை என்று நாம் உணரும் பிறர் மீது அன்பு கொள்வதுமே கடவுளின் அன்புக்கு ஈடாக நாம் செய்யக்கூடிய நற்செயல்கள் என்றுரைத்தார் பாப்பிறை 16ஆம் பெனெடிக்ட்.ஒவ்வொரு ஆண்டும் திருநீற்றுப் புதனன்று மாலை ரோமை நகரில் உள்ள புனித ஆன்சல்ம் பசிலிக்காவிலிருந்து தவக்கால நடை பயணத்தை மக்களோடு மேற்கொண்டு இறுதியில் புனித சபீனா பசிலிக்காவில் திருப்பலியுடன் திருநீற்றுப் புதன் நிகழ்ச்சிகளை நிறைவு செய்யும் திருத்தந்தை இவ்வாண்டும் கார்மேகமும், தூரலுமாய் இருந்த இப்புதன் மாலை தவக்கால பயணத்தையும், திருப்பலியையும் நிறைவேற்றினார்.







All the contents on this site are copyrighted ©.