2010-02-15 15:23:44

மனிதனின் நீதிக்கானத் தாகத்திற்கு, அரசியல் புரட்சியினால் அல்ல, மாறாக, தமது இறையன்பு மூலம் இயேசு திருப்தி அளிக்கிறார்-திருத்தந்தை


பிப்.15,2010 இயேசு, மனிதனின் நீதிக்கானத் தாகத்திற்கு, அரசியல் புரட்சியினால் அல்ல, மாறாக, தமது இறையன்பு மூலம் திருப்தி அளிக்கிறார் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகமான இயேசுவின் மலைப்பொழிவை மையப்படுத்தி ஞாயிறு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, இயேசுவின் மலைப்பொழிவுப் போதனையில் இடம் பெற்றுள்ள பேறுகள், இறைநீதியின் இருப்பை அடிப்படையாகக் கொண்டவை, அவை, தவறாகக் தாழ்த்தப்படுவோரை உயர்த்தும், உயர்த்தப்படுவோரைத் தாழ்த்தும் என்றார்.

இந்த நீதியும், இந்தப் பேறுகளும் கடவுளின் அரசில் உண்மையாக்கப்படும், இவ்வரசு காலத்தின் முடிவில் நிறைவேற்றப்படும், எனினும் ஏற்கனவே இது வரலாற்றில் பிரசன்னமாக இருக்கின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.

ஏழைகள் ஆறுதல் அடையும் இடத்திலும் அவர்கள் வாழ்வின் விருந்துக்கு அனுமதிக்கப்படும் இடத்திலும் கடவுளின் நீதி வெளிப்படுத்தப்படுகின்றது என்றும், இயேசுவின் சீடர்கள் இன்றைய சமுதாயத்திலும் இப்பணியைச் செய்யவே அழைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்று திருத்தந்தை மேலும் கூறினார்.

உரோம் காரித்தாஸ் நிறுவனம் நடத்தும் வீடற்றோர் உதவி மையத்திற்கு இஞ்ஞாயிறு காலை தான் சென்றதை நினைவுகூர்ந்த திருத்தந்தை, உலகெங்கும் இத்தகைய தகுதியான நிறுவனங்களில், நீதி மற்றும் அன்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் தனது இதயத்தின் ஆழத்திலிருந்து ஊக்கப்படுத்துவதாக்க் கூறினார்.

திருநீற்றுப் புதன் என்று அழைக்கப்படும் வருகிற புதனன்று தொடங்கும் இந்த ஆண்டு தவக்காலத்திற்கானச் செய்திக்கு நீதியையே மையப்பொருளாக எடுத்திருப்பதாகக் கூறிய திருத்தந்தை, அச்செய்தியை அனைவரும் வாசித்துத் தியானிக்க அழைப்புவிடுக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

கிறிஸ்துவின் நற்செய்தி மனிதனின் நீதிக்கானத் தாகத்திற்கு நேர்மறையானப் பதிலைக் கொண்டுள்ளது, எனினும் அது எதிர்பாராத மற்றும் வியப்புமிக்க வழியில் அமைந்துள்ளது என்றார் அவர்.

நீதி, அன்பு மற்றும் அமைதியின் இறையரசில் நாம் நுழைவதற்கு இத்தவக்காலத்தில் அன்னைமரியா நம்மை வழிநடத்துவாளாக என்றும் அவர் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.