2010-02-15 15:29:37

திருடப்பட்ட குழந்தைப் பருவம்


பிப்.15,2010 ஜெப்ரி. இவனது உண்மையான பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவனுக்கு இப்போது வயது 20. ஆயினும் இவன் 16 வயதை எட்டு முன்னரே பாலியல் பலாத்காரம், சகமனிதரின் உறுப்புக்களை வெட்டி முடமாக்குதல், கொலை செய்தல் எனப் பல வன்முறைச் செயல்களில் பழக்கப்பட்டவன். இல்லை, இச்செயல்களைச் செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டவன். ஆனால் ஜெப்ரி இன்று திருந்தி வாழும் வாலிபன். ஆயினும் இப்பொழுது நினைத்தாலும் பயமுறுத்துகின்ற அந்த வன்முறைச் செயல்களில் ஈடுபட்டிருந்த தனது கடந்த கால நான்கு வருட வாழ்க்கை பற்றி ஒரு நிருபரிடம் முதல் முறையாக வாய் திறந்தான். இவன் ஆப்ரிக்காவின் உகாண்டா நாட்டைச் சேர்ந்தவன். இவனது சொந்த ஊர் Gulu நகருக்கு அருகிலுள்ளது. ஒரு நாள் இவனது கிராமத்திற்குத் திடீரென ஆயுதங்களோடு வந்த உகாண்டா நாட்டுப் புரட்சிப் படையின் ஒருசிலர் இவனைத் துப்பாக்கிமுனையில் மிரட்டி வலுக்கட்டாயமாக அவர்கள் முகாமிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு இவனையொத்த 12வயது, 10 வயது, எட்டு வயதுச் சிறார்கள் எனப் பலச் சிறார் ஒருவித மிரட்சியுடன் ஒருவரையொருவர் அங்குமிங்கும் தரதரவென இழுத்து அலைகழித்துக் கொண்டிருந்ததைக் கண்டான். அங்கிருந்து தப்பிக்க முயற்சித்தால் அவனது குடும்பத்தையேக் கொன்று விடுவதாக இவன் அச்சுறுத்தப்பட்டான். ஆயுததாரிகள் முதலில் அவனிடம் ஒரு வெட்டுக்கத்தியைக் கொடுத்து காறையெலும்பிலும் தோள்பட்டையிலும் கீறல் செய்யச் சொல்லி பின்னர் அக்கத்தியை எல்லார் முன்னிலையிலும் துண்டு துண்டாகப் பிரிக்கச் சொன்னார்கள். இவ்வாறு பலவகையான ஆயுதப் பயிற்சிகள் கடும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இரண்டு மாதங்கள் கொடுக்கப்பட்டன. பின்னர் நடந்ததை ஜெப்ரி மேலும் விவரிக்கிறான்.

அந்தப் புரட்சிப் படைக்கு அடிமையாகவும் உளவாளியாகவும் வேலையில் அமர்த்தப்பட்டேன். அப்பகுதியில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த அரசுப் படைகளின் முகாம்களுக்குச் சென்று படைவீரர்களுடன் பழகி அவர்களுக்கு மதுபானங்களை நான் விற்க வேண்டும். அந்த வீரர்கள் குடிமயக்கத்தில் இருக்கும் நேரத்தை அறிந்து அதனை இந்தப் புரட்சிப் படைக்கு அறிவிக்க வேண்டும். புரட்சிப்படைத் தலைவன் அவர்களைத் தாக்க வேண்டுமா அல்லது தாக்க வேண்டாமா என்று தீர்மானிப்பான். என்னோடு நட்போடு பழகியவர்களை நான் காட்டிக் கொடுக்க வேண்டியிருந்தது. மனைவிகள் தங்கள் கணவன்களை இழக்கவும் பிள்ளைகள் தங்கள் தந்தையரை இழக்கவும் காரணமாக இருந்தேன். என்னையொத்த வயதுடைய சிறார் ஒரு வராத்திற்கு இருபது படைவீரர் வீதம் கொன்று குவித்தோம். சிறுவர்களாகிய நாங்கள் ஒவ்வொருவருமே அங்கிருந்து தப்பிக்க விரும்பினோம். ஆனால் அவ்வாறு தப்பிக்க முயற்சித்தால் சாவு எங்களுக்கு உறுதி என்பதை அறிந்திருந்தோம்.

அன்பர்களே, ஜெப்ரி என்ற இந்த சிறார் படைவீரன், இன்று புரட்சிப் படையினின்று மீட்கப்பட்டு ஐக்கிய நாடுகள் நிறுவனம் நடத்தும் மறுவாழ்வு மையத்தில் வாழ்கிறான். ஆயினும் இன்று உலகின் பல பகுதிகளில் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட சிறார் படைவீரர்கள் ஆயுதம் தாங்கிய மோதல்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று அரசுசாரா அமைப்பு ஒன்றின் புள்ளி விபரம் கூறுகிறது. இவ்வாறு கட்டாயமாகப் படைப்பிரிவில் சேர்க்கப்பட்ட இவர்கள், தங்களைத் தீயவர்களாகவும், கொடியவர்களாகவும், மன்னிக்க முடியாத, மறக்க முடியாத தவறுகளைச் செய்திருப்பவர்களாகவும் உணர்கின்றனர், இவர்கள் மனஉளைச்சலுக்கும் உள்ளாகி மனரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இன்னும் மீட்டெடுக்கப்படாத எண்ணற்ற சிறார் பலநாடுகளின் போர்க்களங்களில் அமர்த்தப்பட்டுள்ளனர். துள்ளித் திரியும் பாலப் பருவத்தை போர்க்களத்தில் தொலைத்து வரும் இந்தச் சிறார் படைவீரர் குறித்த விழிப்புணர்வை உலகினருக்கு உணர்த்த விரும்பிய ஐ.நா.நிறுவனம் பிப்ரவரி 12ம் தேதியை, சிறார் படைப்பிரிவில் சேர்க்கப்படுவது மற்றும் பயன்படுத்தப்படுவதற்கு எதிரான உலக தினமாக 2002ம் ஆண்டில் அறிவித்து அதை ஆண்டுதோறும் அனுசரித்தும் வருகிறது. சர்வதேச சிறார் உரிமை சாசனத்தின்படி 18 வயதுக்கு உட்பட்டவர்கள் படையில் சேர்க்கப்படக் கூடாது. ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட்ட இவ்வுலக தினத்தன்று யூனிசெப் என்ற ஐ.நா.வின் குழந்தைநல நிதி அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், உலகில் ஐம்பதுக்கும் அதிகமான நாடுகளில் 18 வயதுக்கு உட்பட்ட இரண்டு இலட்சம் முதல் மூன்று இலட்சம் வரையிலான சிறார் படைவீரர்கள் உள்ளனர், இவர்களில் சிலர் ஏழு வயதுக்கு உட்பட்டவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

ஆப்ரிக்காவின் காங்கோ ஜனநாயகக் குடியரசில், இவர்கள் போராளிகளாக, தொழிலாளிகளாக, பாலியல் அடிமைகளாக, பலமாத வன்முறைகளுக்குப் பலியானவர்களாக, கற்பழிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். தாக்குதல்கள் இடம் பெறும் அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் சிறார்கள் படையில் சேர்க்கப்படக் கூடாது என்ற விண்ணப்பங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. அந்நாட்டில் 2004ம் ஆண்டிலிருந்து 36 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறார் படைவீரர்கள், அந்நாட்டு இராணுவம் மற்றும் புரட்சிப் படையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும் யூனிசெப் கூறியது. இதற்கிடையே, மோதல்கள் நடைபெறும் நாடுகளில் பல சிறார், படைப்பிரிவில் சேருவதற்குத் தாங்களே முன்வருகின்றனர் என்றும் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. எடுத்துக்காட்டுக்கு, வடகிழக்கு இந்தியாவில் புரட்சிப் படையில் சேர்ந்த ஒரு சிறுவன் சொன்னான் - இந்த இரகசியப் படையில் சேருவதற்காக அவனும் அவனது நண்பனும் காடு வழியாக ஓடினார்களாம். 14 வயதில் துப்பாக்கியை தூக்கிவிட்டானாம். படிப்பதற்கு ஆசைப்பட்டாலும் குடும்ப வறுமை இந்த நிலைக்கு ஆளாக்கியது என்று.

இவ்வாறு ஆயுதம் ஏந்திய குழுக்களில் தாங்களாகவே விரும்பிச் சேருவதற்கு வீட்டின் பொருளாதார, சமூக, இன மற்றும் குடும்ப அமைப்புகளே காரணங்கள் என்று ஆய்வுகள் சொல்லுகின்றன. இத்தகைய சிறாரில் பெரும்பாலானவர்கள் 14க்கும் 18 வயதுக்கும் உட்பட்டவர்கள். மேலும், தாங்கள் படையில் சேராவிட்டால் தங்களது உறவினர்கள் கொல்லப்படுவதையும் போரினால் ஏற்படும் பிற வன்முறைகளையும் தவிர்க்கவும் சேருவதாகப் பல சிறார் சொல்லியிருக்கின்றனர். ஒருசிறுமிப் போராளி சொல்கிறாள்

நான் வாழ்ந்த பகுதியில் வீட்டுக்கு ஒருவர் போராளிப் படையில் சேர வேண்டும். இல்லாவிட்டால் குடும்பத்தினர் அனைவருக்கும் பிரச்சனை வரும். எனவேதான் நான் இயக்கத்தில் சேர்ந்தேன் என்று. சூடான் நாட்டு இம்மானுவேல் ஜால் என்ற முன்னாள் படைச் சிறுவன் சொல்கிறான் - எனக்குப் போர் என்பது அன்றாட வாழ்க்கை நிகழ்வாக மாறி இருந்தது. எரியும் மனிதச்சதைகளின் வாடையை சுவாசித்துக் கொண்டு, தரையில் கிடக்கும் இறந்த உடல்களின் நினைவுகளில் வாழ்நத போது சாத்தான் என்னைத் துரத்துவது போல் இருக்கும். நான் திறமையான போராளியாக மாறி இருந்தேன். நான் ஏழு வயதாக இருக்கும் போதே வீடுகள் அழிக்கப்படுவதையும் எனது தாயும் தந்தையும் கொல்லப்பட்டதையும் பார்த்தேன் என்று.

சியெரா லியோன் நாட்டில் நடந்த பத்தாண்டு கால உள்நாட்டுச் சண்டையின் போது அபு பாக்கர் பான்குரு என்ற சிறுவனைக் கடத்திச் சென்ற புரட்சி குழுவினர் அவனைப் பலமுறை அடித்து அங்குமிங்கும் இழுத்துள்ளனர். வன்செயல்களைச் செய்யக் கட்டாயப்படுத்தி இருக்கின்றனர். தனது முந்தைய வாழ்வைப் பகிரிந்து கொண்ட அவன், “நான் பயத்திலே வாழ்ந்தேன். போரில் கொடுஞ்செயல்கள் செய்வதைத் தவிர்த்து வந்தேன். அதனால்தான் கடவுள் என்னைக் காப்பாற்றி இருக்கிறார்” என்று விவரித்தான்.

மற்றொரு சிறுவன் சொல்கிறான் – புரட்சிப் படைவீரர்கள் எனது கிராமத்திற்கு வந்து எனது அண்ணனைப் படையில் சேரும்படிக் கேட்டனர். அப்போது அவனுக்கு வயது 17. அவன் சேரமாட்டேன் என்று சொன்னதும் அந்த இடத்திலேயே அவனைச் சுட்டுக் கொன்றார்கள். நான் சாக விரும்பாததால், அந்த பயத்தில் நான் படையில் சேர்ந்தேன். எனக்கு அப்போது வயது 13. நான் அவர்களின் இடத்திற்குச் சென்றவுடன் சீருடை ஒன்றைக் கொடுத்து என் பெயரையும் மாற்றினார்கள். நாங்கள் வாகனங்களில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் எடுத்துச் செல்லப்பட்டோம். அங்கும் இந்தக் கட்டப்பட்ட நிலையிலே மிருகங்களைப் போல் தரையில் நகர்ந்து செல்ல கட்டாயப்படுத்தப்பட்டோம். அடி உதைகள் வாங்கினோம்.

இவ்வாறு ஒவ்வொரு நாட்டின் சிறார் படைவீரரும் தங்களது முன்னாள் நிலையை விளக்குவதை வலைத்தளங்களில் பார்க்கும் போது நம் நெஞ்சை பிழிகின்றது. நான் என் கண்களை மூடிக்கொண்டு எனது சகப் போராளியைச் சுட்டேன். இப்படி, கதை கதையாய் இச்சிறார்கள் தங்களது முந்தைய நிலையை விளக்குகிறார்கள். மேற்கு மற்றும் மத்திய ஆப்ரிக்காவில் போர்களுக்கு நிதியுதவி செய்த உலகளாவிய வைர வியாபாரத்தைச் சித்தரிக்கும் Blood Diamonds என்ற திரைப்படத்தில் இந்தச் சிறார் படைவீரர் நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்கள். 2006ம் ஆண்டு டிசம்பரில் வெளியான இப்படம் ஐந்து பெரும் விருதுகளை வென்றது. படையில் சேர்க்கப்பட்ட மகனே தனது தந்தையைத் தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அங்கே மூளைச்சலவை அவலங்கள் அரங்கேற்றி இருக்கின்றன.

சிலரது ஆதிக்க, அதிகாரப் பேராசையைத் தக்க வைக்க பிஞ்சுகளின் குழந்தைப் பருவம் துப்பாக்கி முனையில் திருடப்படுகின்றது. திருடப்பட்ட இவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவராய், பெற்றோரையும் உறவுகளையும் இழந்து செல்லும் இடம் தெரியாமல் அநாதரவாக இருக்கின்றனர். இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. பொதுவாக, குழந்தைப் பருவத்தில் அச்சம், அழுக்காறு, ஏமாற்றம், வன்மம் போன்ற குணங்கள் நிரந்தரமாகக் குடியேறுவதில்லை. ஆனால் இந்தச் சிறார் படைவீரர்களில் இக்குணங்கள் கட்டாயமாக புகுத்தப்படுகின்றன.

அருளாளர் அன்னை தெரேசா சொன்னார் - இக்காலத்திய பெரும் நோய்கள், தொழுநோயோ காசநோயோ அல்ல, மாறாக, விரும்பப்படாதவனாக, கவனிக்கப்படாதவனாக, அனைவராலும் கைவிடப்பட்டவனாக உணரும் நிலையே பெரும் நோய்களாகும். உண்மையான அன்பும் பிறரன்பும் இல்லாதிருத்தலும் சாலையோரத்தில் வாழும் அயலானையும் துர்ப்பிரயோகம், ஊழல், ஏழ்மை மற்றும் நோயால் தாக்கப்பட்டுள்ளவர்களைக் கண்டு கொள்ளாததும் இக்காலத்திய பெரும் தீமைகள் என்று.

அன்பர்களே, பிறரின் உரிமைகளைத் திருடுகிறவர்களாக, பிறரை வெறுப்பவர்களாக இல்லாமல், நம் அன்புச் செயல்களால் பிறரைக் குணமாக்குபவராக வாழ்வோம். ஏனெனில் இந்த முன்னாள் சிறார்ப் படைவீரர்களுக்குத் தேவையானது குணப்படுத்தும் அன்பு ஒன்றே.














All the contents on this site are copyrighted ©.