2010-02-13 15:37:16

திருத்தந்தை : ஒவ்வொரு மனிதனின் மாண்பும் தவிர்க்கப்பட முடியாத உரிமை என்பதை ஒவ்வொரு சட்ட அமைப்பும் அங்கீகரிக்க வேண்டும்


பிப்.13,2010 மனித வாழ்வு அதன் தொடக்க முதல் இறுதிவரை கொண்டிருக்கின்ற மறுக்க முடியாத மாண்பு பாதுகாக்கப்படுவதற்கு, உயிரியல்நன்னெறிகளும் இயற்கையான அறநெறிச் சட்டமும் தேவையானவை என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இச்சனிக்கிழமை கூறினார்.

உயிரியல்நன்னெறிகளும் இயற்கை அறநெறிச் சட்டமும் என்ற தலைப்பில் திருப்பீட வாழ்வுக் கழகம் நடத்திய மூன்று நாள் கருத்தரங்கில் கலந்து கொண்ட சுமார் 120 பிரதிநிதிகளை இச்சனிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

மனித மாண்புக்கு உத்தரவாதம் அளிக்கும் இந்த உரிமைகள் இன்றையச் சூழல்களில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றன என்றும், எனவே சமுதாயம், கலாச்சாரம் எனப் பல்வேறு நிலைகளில் இவை காக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை இவை உணர்த்துகின்றன என்றும் கூறினார் பாப்பிறை.

உண்மையில், மனித மாண்பை தவிர்க்கப்பட முடியாத உரிமையாக அங்கீகரிப்பது கடவுளால் மனித இதயத்தில் எழுதப்பட்ட முதல் சட்டத்தில் தனது அஸ்திவாரத்தைக் கொண்டுள்ளது என்று கூறிய திருத்தந்தை, ஒவ்வொரு மனிதனின் மாண்பும் தவிர்க்கப்பட முடியாத உரிமை என்பதை ஒவ்வொரு சட்ட அமைப்பும் அங்கீகரிக்க வேண்டும் என்றார்.

அங்கீகரிப்பதோடு அதனை ஊக்குவிக்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.

இத்திருப்பீட கழகத்தினரின் மனித வாழ்வைப் பாதுகாக்கும் முயற்சிகளை இன்றைய உலகின் சூழல்கள் கடினமானதாக்கிவரும்வேளை, அவர்களின் இந்த முக்கியமான வாழ்வுக்கானப் பணி, இன்னும் மிகுந்த ஆர்வத்தோடு வருங்காலத் தலைமுறையினர்க்குச் செய்யப்பட தனது ஆதரவை அளிப்பதாகவும் கூறினார் திருத்தந்தை.

திருப்பீட வாழ்வுக் கழகம் நடத்திய மூன்று நாள் கருத்தரங்கு இச்சனிக்கிழமை நிறைவடைந்தது.








All the contents on this site are copyrighted ©.