2010-02-12 16:48:45

ரொமேனியாவில் ஒப்புரவும் ஒருமைப்பாடும் நிறைந்த சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதற்குத் திருச்சபை தனது பங்கை அளிக்கத் தயாராக இருக்கின்றது- திருத்தந்தை


பிப்.12,2010 உலகாயுதப்போக்கு நடவடிக்கைகள் முன்வைக்கும் கடும் சவால்களை எதிர்நோக்கி வரும் ரொமேனியாவில் ஒப்புரவும் ஒருமைப்பாடும் நிறைந்த சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதற்குத் திருச்சபை தனது பங்கை அளிக்கத் தயாராக இருக்கின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

ஆயர்கள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை திருத்தந்தையை சந்திக்கும் ad limina வை முன்னிட்டு ரொமேனியா நாட்டின் 17 ஆயர்களை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, தற்போதைய தொழில் மற்றும் வேளாண் அமைப்பு முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம், பொருளாதார நெருக்கடி, நாட்டின் குடியேற்றதாரர் போன்ற விவகாரங்கள் அந்நாட்டின் பாரம்பரிய மதிப்பீடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன என்பதைச் சுட்டிக் காட்டினார்.

இந்தப் பாரம்பரிய மதிப்பீடுகள் காக்கப்படுவதற்கு, அந்நாட்டின் கத்தோலிக்கர் மற்றும் ஆர்த்தாடாக்ஸ் சபையினரிடையே சகோதரத்துவ சாட்சிய வாழ்வு அவசியம் என்றும் இவ்விரு சபைகளுக்கிடையே இடம் பெறும் ஆக்கப்பூர்வமான உரையாடல், அந்நாட்டின் ஒன்றிப்புக்கும் நல்லிணக்கத்திற்கும் மட்டுமின்றி ஐரோப்பா முழுவதன் ஐக்கியத்திற்கும் உதவும் என்றும் திருத்தந்தை கூறினார்.

குருத்துவ மற்றும் துறவற அழைத்தல்கள், கிறிஸ்தவக் குடும்பங்களின் நல்ல அறநெறி மற்றும் ஆன்மீக வாழ்க்கைமுறையையே சார்ந்து இருக்கின்றன என்றுரைத்த திருத்தந்தை, கருக்கலைப்பு, இலஞ்ச ஊழல், குடிபோதை, போதைப் பொருள்பயன்பாடு, மனித மாண்புக்கு முரணான குடும்பக்கட்டுபாடு நடவடிக்கைகள் போன்றவை கத்தோலிக்கக் குடும்பங்களையும் பாதித்துள்ளன என்று கூறினார்.

இந்தச் சவால்களை எதிர்நோக்கும் குடும்பங்களுக்குப் பங்கு ஆலோசனை அவைகள் மூலம் அவைகளைத் திருமணம் மற்றும் குடும்ப வாழ்வுக்குத் தயாரிக்குமாறும் திருத்தந்தை கேட்டுக் கொண்டார்.

இந்தச் சர்வதேச அருட்பணியாளர்கள் ஆண்டில் ஆயர்கள் குருக்களுக்கு உண்மையான தந்தையர்களாக இருந்து அவர்களுடனான உறவை மேம்படுத்துமாறும் திருத்தந்தை வலியுறுத்தினார்.

சவால் நிறைந்த ஆயர் பணியில் விசுவாசிகள் திருமறை நூலை நன்கு புரிந்து கொள்ளவும், மறைக்கல்வி, திருவருட்சாதனங்களுக்கானத் தயாரிப்பு போன்றவை மூலம் அவர்களின் கிறிஸ்தவ விசுவாசத்தை ஆழப்படுத்தவும் வேண்டுமென்றும் திருத்தந்தை, ரொமானிய ஆயர்களிடம் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.