2010-02-12 17:01:10

மரங்களை பாதுகாக்க ஆம்புலன்ஸ்: டில்லி மாநகராட்சி கலக்கல் திட்டம்


பிப்.12,2010 இந்தியத் தலைநகர் டில்லியை பசுமை மயமாக்கும் முயற்சியில் மரங்களைப் பேணி பாதுகாப்பதற்கு வசதியாக பசுமை ஆம்புலன்ஸ்(அவசர உதவி வாகனம் ) திட்டம் ஒன்றை டில்லி மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது

ஒரு காலத்தில் அடர்ந்து வளர்ந்த மரங்களோடு, பசுமையாகக் காட்சி அளித்த டில்லி மாநகரம், தற்போது ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டு ஒரே கான்கிரீட் மயமாகக் காணப்படுவதால் ஏற்படும் பிரச்னைகளை நன்கு உணர்ந்துள்ள டில்லி மாநகராட்சி அதிரடியாக களத்தில் இறங்கியுள்ளதாகச் சொல்லப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி பச்சை நிறம் கொண்ட ஆம்புலன்ஸ் ஒன்று, டில்லி மாநகராட்சியில் தயார் நிலையில் உள்ளது என்றும், இதில், இரண்டு தண்ணீர் டாங்குகள், சோப்பு நுரை, ஸ்பிரேயர் உள்ளிட்டவை உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

வறட்சியால் மரங்கள் காய்ந்த நிலையில் இருந்தாலோ, இலைகள் உதிர்ந்த நிலையில் இருந்தாலோ, அல்லது சாயும் நிலையில் இருந்தாலோ இதுகுறித்து உடனடியாக, பொதுமக்கள் மாநகராட்சிக்கு தகவல் கொடுக்கலாம். உடனடியாக சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் வண்டியில் ஊழியர்கள் வந்து, மரத்துக்கு என்ன பாதிப்பு உள்ளதோ, அதை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுப்பர் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

அதிவேகமாக உலகம் வெப்பமயமாகி வருகிறது. இதனால், காலம் தவறி மழை பெய்வது, கடல் நீர் மட்டம் அதிகரிப்பது போன்ற பல்வேறு இயற்கை பிரச்னைகள் உருவாகின்றன. மரங்கள் வெட்டப்படுவது, உலகம் வெப்பமயமாவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இதனால், சர்வதேச நாடுகள் அனைத்தும் தங்களால் முடிந்த அளவுக்கு மரங்களை வளர்க்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.








All the contents on this site are copyrighted ©.