2010-02-10 15:59:10

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய்களுக்கு இந்தியாவில் அனுமதி மறுப்பு


பிப்.10,2010 மரபணு மாற்றம் செய்யப்பட்ட தொழில்நுட்பத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பி.டி.கத்தரிக்காய்கள், பொதுமக்களின் உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்காது என்பது உறுதி செய்யப்படும் வரை, அந்தக் கத்தரிக்காய்களை வர்த்தக ரீதியாக இந்தியாவில் அனுமதிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக இந்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் செவ்வாய்கிழமை மாலை செய்தியாளர்களிடம் பேசும்போது அறிவித்துள்ளார். ஆளும் காங்கிரஸ் கட்சியிலிருந்தும், மாநில அரசுகள், விவசாயிகள் மற்றும் தன்னார்வ அமைப்புக்களிடம் இருந்தும் கடும் எதிர்ப்புக் கிளம்பியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என செய்திகள் கூறுகின்றன.
பி.டி. கத்தரிக்காயை அனுமதிக்கலாமா என்பது குறித்து, நாடு முழுவதும் ஏழு நகரங்களில் சுமார் 8 ஆயிரம் பேரிடம் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், சிறப்பாக, வேளாண்மைத் துறையில் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுடன் நீண்ட ஆலோசனை நடத்திய பிறகே தான் இந்த முடிவை எடுத்ததாக அமைச்சர் தெரிவித்தார் என செய்திக்குறிப்பொன்று கூறுகின்றது.தமிழ்நாடு உள்பட பத்துக்கும் மேற்பட்ட மாநில அரசுகள், பி.டி. கத்தரிக்காய்க்கு அனுமதியளிக்க முடியாது என திட்டவட்டமாக அறிவித்துவிட்டன என ஊடகங்கள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.