2010-02-10 15:55:03

தவக்காலத்திற்கான சிந்தனைகளை இணையதளத்தின் மூலம் வெளியிடும் முயற்சியில் ஆஸ்திரேலிய ஆயர் பேரவை, Westminster மறைமாவட்டம்


பிப்.10,2010 தவக்காலங்களில் எதையாவது விட்டுக் கொடுப்பது, அல்லது தியாகம் செய்வது என்பதற்கு பதிலாக, வருகிற தவக்காலத்தில் எதையாவது மேற்கொள்வது பயனுள்ள முயற்சியாகும் என்று ஆஸ்திரேலிய ஆயர் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.
வரும் பிப்ரவரி 14 அன்று ஆரம்பமாகவிருக்கும் தவக்காலத்திற்கான சிந்தனைகளை இணையதளத்தின் மூலம் வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலிய ஆயர் பேரவையின் அருட்பணி விசுவாச வளர்ச்சிக்கான ஆணையத்தின் தலைவர் பேராயர் John  Bathersby ஆயர்கள் சார்பாக இம்முயற்சி பற்றி எடுத்துரைத்தார். சிந்தனை என்று பொருள்படும் "The Reflection" என்ற இந்த இணையதள முயற்சியின் வழியாக, 20,000 பேருக்கு மேல் கலந்து கொண்ட e-conference பற்றி கூறிய பேராயர், இந்த ஆண்டு விசுவாசிகள் தங்கள் குடும்பங்களோடு செலவு செய்யக்கூடிய நல்ல பல நேரங்களில் விவிலியத்தைக் குறித்த பகிர்வுகள் குடும்பங்களில் நிகழ்வதை இந்த இணையதள முயற்சி ஊக்குவிக்கும் என்று கூறினார்.
இதற்கிடையே, இங்கிலாந்தின் Westminster மறைமாவட்டத்திலும்  தவக்காலத்திற்கான இது போன்ற இணையதள முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாக செய்திக்குறிப்பு ஒன்று கூறுகிறது. ஒன்றாக வாழ்வோம் என்ற பொருள்படும் "Living as One" என்ற இந்த இணையதள முயற்சியின் வழியாக பல நாடுகளிலும் உள்ள கத்தோலிக்கர், இன்னும் கிறிஸ்துவில் விசுவாசம் கொண்ட அனைவருமே பயன் பெறுவார் என்று இம்மறைமாவட்ட அருட்பணி மையத்தின் இயக்குனர் அருட்தந்தை Michael O’Boy கூறினார்.இவ்விணையதளம் குறித்த தகவல்கள் அடங்கிய சிறு ஏடு இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, Wales பகுதிகளில் உள்ள மறைமாவட்டங்களிலுள்ள அனைத்து கத்தோலிக்கருக்கும் வழங்கப்படும் என்று இச்செய்திகுறிப்பு மேலும் கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.