2010-02-09 16:26:04

விவிலியத் தேடல்:


RealAudioMP3
இயேசு ஆற்றிய புதுமைகளிலேயே மிகப் புகழ்பெற்ற புதுமையாகக் கருதப்படுவது இயேசு இலாசரை உயிர்ப்பிக்கும் புதுமை. இறந்தவர்கள் பலரை இயேசு உயிர்ப்பித்திருக்கிறார் என்பது நமக்குத் தெரியும். நயீன் நகர விதவையின் மகன், யாயீர் என்ற தொழுகைக் கூடத்தலைவனின் மகள் என்று பலரை உயிர்ப்பித்திருக்கிறார். ஆனால், இலாசரை உயிர்ப்பித்ததில் ஒரு தனி சிறப்பு உண்டு. மற்றவர்கள் இறந்த உடனேயே இயேசு அங்கு பிரசன்னமாகி அவர்களை சாவினின்று மீட்டார். இலாசரையோ நான்காம் நாள் உயிர்ப்பித்தார்.
இறந்த ஒருவரின் ஆன்மா அவருடன் கல்லறையில் மூன்று நாட்கள் இருக்கும், மூன்றாம் நாள் அந்த ஆன்மா உடலிலிருந்து நிரந்தரமாக பிரிந்து விடும், அதன் பின்னர் அந்த உடல் அழுகிப் போக, அழிந்து போக ஆரம்பிக்கும்... இதுவே யூதர்கள் மத்தியில் நிலவி வந்த நம்பிக்கை. இலாசர் இறந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டன. எனவே அவரது உடல் அழிய ஆரம்பித்திருக்கும். அந்த நேரத்தில் இயேசு அங்கு வந்து சேர்ந்தார்.
தாமதமாக வந்த இயேசுவைக் கண்டு மார்த்தா மரியா என்ற இரு சகோதரிகளும் ஒருவகையில் ஆறுதல் அடைந்தாலும், தங்கள் ஆதங்கத்தையும், ஏக்கத்தையும் சொல்கின்றனர். இருவரும் ஒரே கருத்தை இயேசுவிடம் தனித்தனியே சொல்கின்றனர்: "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்." (யோவான் 11/21,32)
வாழ்வின் இக்கட்டான சூழ்நிலைகளில் இறைவன் தாமதிப்பதாக எத்தனை முறை நாம் உணர்ந்திருக்கிறோம். எதிர்பார்க்கும் நேரத்தில், எதிர்பார்க்கும் விதத்தில், எதிர்பார்க்கும் இடத்தில் கடவுள் வருவதில்லை. இது பல சமயங்களில் நமக்கு கலக்கத்தை ஏற்படுத்தினாலும், எதிர்பாராத நேரத்தில், இடத்தில், விதத்தில், உருவத்தில் வருவதுதான் கடவுளின் அழகு. தாமதமாய் வந்த இயேசுவிடம் தன் ஆதங்கத்தைக் கூறிய மார்த்தா, உடனே, இயேசுவின் மீது தான் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையையும் எடுத்துரைத்தார்.
யோவான் நற்செய்தி 11 21-22 மார்த்தா இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போது கூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும்” என்றார்.

மார்த்தாவின் இந்த நம்பிக்கை அவருக்குப் பின் வந்த பலருக்கு வழி காட்டியது.
ஆதி கிறிஸ்தவர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை நாம் அறிவோம். அடுத்த நாள், அடுத்த மணி நேரம் உயிருடன் இருப்போமா என்ற கேள்வி இவர்கள் கழுத்தைச் சுற்றிக் கொண்ட ஒரு கரு நாகத்தைப் போல் எப்போதும் இவர்களை நெருக்கிக் கொண்டே இருந்தது. ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைத்த இவர்களது நம்பிக்கையை வளர்ப்பதற்கு பெரிதும் உதவியது இயேசு இலாசரைக் கல்லறையிலிருந்து எழுப்பிய இந்தப் புதுமை என்று விவிலிய ஆய்வாளர்களும், திருச்சபை வரலாற்று அறிஞர்களும் சொல்கின்றனர். இறந்து, புதையுண்டு, அழிந்து போன தங்களையும், தங்கள் திருச்சபையையும் இறைவன் கல்லறைகளை விட்டு உயிருடன் வெளியே கொண்டுவருவார் என்ற நம்பிக்கையை வளர்க்க இலாசர் புதுமை உதவியது. இந்தப் புதுமையின் இறுதிப் பகுதியை நற்செய்தியிலிருந்து கேட்போம்.
யோவான் நற்செய்தி 11 38-44
இயேசு மீண்டும் உள்ளம் குமுறியவராய்க் கல்லறைக்கு அருகில் சென்றார். அது ஒரு குகை. அதை ஒரு கல் மூடியிருந்தது. “கல்லை அகற்றி விடுங்கள்” என்றார் இயேசு. இறந்து போனவரின் சகோதரியான மார்த்தா அவரிடம், “ஆண்டவரே, நான்கு நாள் ஆயிற்று; நாற்றம் அடிக்குமே!” என்றார். இயேசு அவரிடம், “நீ நம்பினால் கடவுளின் மாட்சிமையைக் காண்பாய் என நான் உன்னிடம் கூறவில்லையா?” என்று கேட்டார். அப்போது அவர்கள் கல்லை அகற்றினார்கள். இயேசு அண்ணாந்து பார்த்து, “தந்தையே, நீர் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். நீர் எப்போதும் என் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கிறீர் என்பது எனக்குத் தெரியும். எனினும் நீரே என்னை அனுப்பினீர் என்று சூழ்ந்து நிற்கும் இக்கூட்டம் நம்பும் பொருட்டே இப்படிச் சொன்னேன்” என்று கூறினார். இவ்வாறு சொன்ன பின் இயேசு உரத்த குரலில், “இலாசரே, வெளியே வா” என்று கூப்பிட்டார். இறந்தவர் உயிரோடு வெளியே வந்தார். அவருடைய கால்களும் கைகளும் துணியால் சுற்றப்பட்டிருந்தன. முகத்தில் துணி சுற்றப்பட்டிருந்தது. “கட்டுகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்” என்று இயேசு அவர்களிடம் கூறினார்.

உயிரற்ற பிணமோ, உருவும், உணர்வுமற்ற களிமண்ணோ, கடவுள் கைபட்டால் புதுமைகளாய் மாறும். ஆனால், இந்தப் புதுமை நிகழ்வதற்கு கடவுள் இருந்தால் மட்டும் போதாது. நாமும் அவரோடு ஒத்துழைக்க வேண்டும் என இறைவன் விரும்புகிறார். மார்த்தா ஏற்கனவே கூறிய இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும் என்ற அந்த நம்பிக்கை வரிகளில் இந்த ஒத்துழைப்பு ஆரம்பமானது. இயேசு இதே நம்பிக்கையை, ஒத்துழைப்பை சூழ இருந்தவர்களிடமும் உருவாக்க நினைத்தார். எனவே, மூன்று கட்டளைகள் இடுகிறார். முதல் கட்டளை அங்கிருந்த யூதர்களுக்கு.
"கல்லறை வாயிலை மூடியிருக்கும் கல்லை அகற்றுங்கள்." இது இயேசு வழங்கிய முதல் கட்டளை.
"கல்லே அகன்று போ." என்று இயேசு சொல்லியிருந்தால், ஏன் நினைத்திருந்தாலே போதும்.. அந்தக் கல் அகன்று போயிருக்கும். அவரது உயிர்ப்பின் போது இயேசுவின் கல்லறையைத் தேடி வந்த பெண்கள் அந்தக் கல்லை யார் நமக்கு அகற்றுவார்கள் என்று பேசிக் கொண்டு, சிந்தித்துக்கொண்டு வந்த போது, (மாற்கு நற்செய்தி 16/3) ஏற்கனவே கல் அகற்றப்பட்டிருந்ததல்லவா? அதே போல் இயேசு இங்கும் தன் வல்லமையால் கல்லறையின் கல்லை அகற்றியிருந்தால், சூழ நின்றிருந்தவர்கள் அவரை இன்னும் அதிகம் நம்பியிருப்பார்களே. இந்தப் புதுமைக்கு இன்னும் அதிக மெருகு கூடியிருக்குமே. இயேசுவின் எண்ணங்களுக்கும், நமது எண்ணங்களுக்கும் அதுதான் வேறுபாடு. இயேசு புதுமைகள் செய்தது தன் வலிமையை, கடவுள் தன்மையைக் காட்சிப் பொருளாக்க அல்ல. அந்தப் புதுமை வழியே அந்த மக்களின் மனதில், வாழ்வில் மாற்றங்களை உண்டாக்க. அந்தக் கல்லறையைச் சுற்றி நின்றவர்கள் நான்காம் நாளில் ஒன்றும் நடக்காது என்ற அவநம்பிக்கையுடன் அஙகு வந்தவர்கள். இயேசு அவர்களது அந்த அவநம்பிக்கையை உடைத்து, நான்கு நாட்கள் என்ன, நாலாயிரம் வருடங்கள் ஆனாலும் கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை என்பதை அவர்களுக்கு உணர்த்த விரும்பினார்.
கல்லறையிலிருந்து இலாசரை உயிரோடு எழுப்ப அந்த மக்களுக்கு சக்தி இல்லாமல் இருக்கலாம். ஆனால், அந்தக் கல்லறைக் கல்லை அகற்றும் சக்தி அவர்களுக்கு உண்டு என்று இயேசுவுக்குத் தெரியும். எனவே, மனிதர்களால் முடிந்தவைகளை மனிதர்களே செய்யட்டும் என்று இயேசு இந்தக் கட்டளையைத் தருகிறார். நம்மால் முடிந்ததை நாமே செய்வதைத்தான் இறைவன் விரும்புகிறார்.
நம் வீடுகளில் நடக்கும் ஒரு அழகான நிகழ்ச்சியை உங்களுக்கு இங்கு நினைவுறுத்த விரும்புகிறேன். நாலு காலில் தவழும் குழந்தைகள் முதல் முறையாகத் தட்டுத் தடுமாறி எழுந்து நடக்கும் அனுபவம் நம் குடும்பங்களில் மகிழ்வான ஒரு நிகழ்வு. இந்த மகிழ்வின் ஒரு பகுதி குழந்தை கீழே விழுந்து அழுவதும். கீழே விழும் குழந்தையைத் தூக்கி விட்டு, மீண்டும் அக்குழந்தையை நடக்கச் சொல்லி பெற்றோர் தூண்டுவார்கள். அதற்கு பதில், குழந்தை விழுந்துவிட்டதென பரிதாபப்பட்டு, தாயோ, தந்தையோ, குழந்தையைத் தூக்கிச் சுமந்தால், குழந்தை நடை பழகவே பழகாது. அதுபோலத்தான் கடவுளும். நம்மால் இயன்றதை நாம் செய்யவேண்டும் என்று விரும்புகிறார்.
நமக்கு நன்கு தெரிந்த ஒரு கதை.
ஊருக்குள் வெள்ளம் வந்தது. மக்களெல்லாம் வெள்ளத்திலிருந்து தப்பிக்க வழிகளைத் தேடிக்கொண்டிருந்தனர். ஒருவர் மட்டும் தன் வீட்டுக் கூரை மேல் ஏறி நின்று, கடவுளிடம் தன்னை அந்த வெள்ளத்திலிருந்து காப்பாற்றும்படி வேண்ட ஆரம்பித்தார். நீச்சல் தெரிந்தவர்கள் நீச்சல் தெரியாதவர்களுக்கு உதவினர். அவர்களிடமிருந்த பிளாஸ்டிக் பொருட்கள், கட்டுமரம் என்று பல பொருட்களைப் பயன்படுத்தி, வெளியேறிக் கொண்டிருந்தனர். கடவுளுக்காக காத்துக்கொண்டிருந்தவரையும் தங்களுடன் வரும்படி அழைத்தனர். அவர் கிளம்பவில்லை. அரசாங்கம் விரைவில் ஆட்களை அனுப்பி, மக்களை வெளியேற்றும் முயற்சிகளை மேற்கொண்டது. இவர் மட்டும் எந்த உதவியையும் பெறாமல், கடவுள் வருவார் என காத்துக்கொண்டிருந்தார். வெள்ளம் கூரையைத் தொட்டது. இறுதியில் Helicopter வழியாக கூரை மீது நின்று கொண்டிருந்தவரைக் காப்பாற்ற முயற்சிகள் நடந்தன. கடவுள் காப்பாற்றுவார் என்று கூறி அவர் அந்த உதவிகளைப் பெற மறுத்தார். இறுதியில் வெள்ளத்தில் மூழ்கி இறந்தார். மறு உலகில் கடவுளைச் சந்தித்த போது, “கடவுளே, ஏன் என்னைக் காப்பாற்ற வரவில்லை?” என்று அவர் முறையிட்டபோது, கடவுள் “நான் அனுப்பிய அத்தனை உதவிகளையும் மறுத்துவிட்டாய். உன்னை என்னால் எப்படி காப்பாற்ற முடியும்?” என்று கடவுள் கேட்டார்.
முன்பு ஒரு முறை பார்த்த ஒரு அழகிய கூற்று இது: “Lord, I ask you not to lift my burden, but to strengthen my shoulders.” இறைவா, நான் சுமக்கும் பாரங்களை நீக்குவதற்காக நான் வேண்டவில்லை. மாறாக, பாரங்களைச் சுமக்கவல்ல தோள்களைத் தாருமென்று வேண்டுகிறேன்.
நான் வாசித்த மற்றொரு அழகான பழமொழி. “God could not be present everywhere, so he created mothers.” கடவுள் எல்லா இடங்களிலும் பிரசன்னமாக முடியாது என்பதால் அன்னையரைப் படைத்தார்.
கடவுள் நீக்கமற எங்கும் நிறைந்திருப்பவர் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இருந்தாலும் அன்னையரின் அன்பை அழுத்தந்திருத்தமாய் சொல்வதற்கு மிகைப்படுத்தி சொல்லப்பட்டுள்ள ஒரு Yiddish பழமொழி இது. இந்தக் கூற்று உண்மையல்ல என்றாலும், ஒரு கோணத்தில் அழகானதொரு பொருளை இது கூறுகிறது. அன்னையர்களால், பொதுவாகவே, மனிதர்களால் செய்யக்கூடியவைகளில் கடவுள் தலையிடுவதில்லை.
யூத கல்லறைகள் மேல் வைக்கப்படும் கல் மிகவும் கனமானது. பலர் சேர்ந்து உருட்டினால்தான் நகரும். இயேசு அங்கிருந்தவர்களிடம் கல்லை அகற்றச் சொன்னார். கல்லை நகர்த்துவதில் மற்றொரு பிரச்சனை இருந்தது. அதை மார்த்தா நேரடியாகவே இயேசுவிடம் கூறுகிறார். நான்கு நாட்கள் ஆகிவிட்டன. நாற்றம் எடுக்குமே.
மார்த்தா இறந்த காலத்தில் வாழ்ந்தார். இயேசு அவரை நிகழ் காலத்திற்கு, எதிர் காலத்திற்கு அழைத்தார். இறந்த காலம் அழிந்து, அழுகி நாற்றம் எடுக்கும். அங்கேயே இருப்பது நல்லதல்ல. அந்த இறந்த காலத்தை மூடியிருப்பது பெரும் கல்லானாலும், மலையே ஆனாலும், அதை அகற்றி, அடுத்த அடி எடுத்துவைக்க இயேசு அழைக்கிறார்.
இயேசு கொடுத்த இரண்டாவது கட்டளை லாசருக்கு: "இலாசரே, வெளியே வா." இயேசுவின் குரல் கேட்டு இறந்த பிணமாய், கட்டுண்டு கிடந்த இலாசர் கட்டுகளோடு வெளியே தட்டுத் தடுமாறி வந்தார். எல்லாம் முடிந்து விட்டது, அழிந்து விட்டது என்று புதைக்கப்பட்டுள்ள நம் கனவுகளும் கடவுளின் குரல் கேட்டால் மீண்டும் உயிர் பெறும். இறைவனின் குரல் கேட்டும் கல்லறைகளில் தங்களையே மூடிக் கொள்ளும் பலரை இப்போது நினைத்து பார்க்கலாம்.
வெளியே வரும் லாசரைக் கண்டதும் இயேசு மீண்டும் மக்களுக்குத் தரும் மூன்றாவது கட்டளை: "கட்டுகளை அவிழ்த்து அவனைப் போக விடுங்கள்." உயிர் பெற்று வந்துள்ள இலாசரால் தன் கட்டுகளை தானே அவிழ்த்துக் கொள்ள முடியாது. அந்த நல்ல காரியத்தை அவரைச் சுற்றி இருப்பவர்களே செய்யமுடியும். நடை பிணங்களாக வாழும் பலரை நாம் பார்த்திருக்கிறோம். ஒருவேளை, அந்த நிலையில் நாமும் அவ்வப்போது இருந்திருக்கிறோம். அந்த நேரங்களில் இந்த நடை பிணங்களைக் கட்டியிருக்கும் கட்டுகளை அவிழ்க்க இறைவன் நமக்கு கட்டளைகள் இடுகிறார். நாம் வாழும் சமுதாயத்தில் கட்டுகளை அவிழ்ப்பதற்கு பதில், மேலும் மேலும் மக்களைப் பலவகைகளில் கட்டிப்போடும் மனசாட்சி அற்றவர்களின் மனங்களில் இறைவன் உயிர் கொடுக்க வேண்டுவோம்.இலாசரை இயேசு உயிர் பெறச் செய்த இந்தப் புதுமை கல்லறை, கல்லறையை மூடிய கல், கட்டுகள் என்று பல கோணங்களில் நம் சிந்தனைகளைத் தூண்டியுள்ளது. கல்லறை, கல், கட்டுகள் இவைகளையெல்லாம் தாண்டி இறைவனின் கட்டளை, இறைவனின் குரல் நம் கனவுகளுக்கு மீண்டும் மீண்டும் உயிர் கொடுக்க வேண்டுவோம்.







All the contents on this site are copyrighted ©.