2010-02-08 16:23:24

ஒன்றிணைந்த மற்றும் நிலையான குடும்பங்களில் பிள்ளைகள் வளர்வதற்கு நம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டியது முக்கியம்- திருத்தந்தை


பிப்.08,2010 ஒன்றிணைந்த மற்றும் நிலையான குடும்பங்களில் பிள்ளைகள் வளர்வதற்கு நம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டியது மிகவும் முக்கியமானது என்று இத்திங்களன்று கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

திருப்பீட குடும்ப அவை வத்திக்கானில் இத்திங்களன்று தொடங்கியுள்ள மூன்று நாள் சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொள்ளும் 150 பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, திருமணமான தம்பதியரும் எந்தக் காரணங்களுக்காகவும் நம்பிக்கையை இழக்காது திருமணத்தின் திருவருட்சாதனப் பண்பில் உறுதியாய் இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.

1989ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி ஐ.நா.நிறுவனம் சிறார் உரிமைகள் குறித்த சாசனம் வெளியிட்டதன் இருபதாம் ஆண்டை நினைவுகூரும் விதமாக, சிறாரின் உரிமைகள் என்ற தலைப்பில் இக்கருத்தரங்கு நடைபெறுவதையும் குறிப்பிட்டார் திருத்தந்தை.

கத்தோலிக்கத் திருச்சபையும் இச்சாசனத்திற்கு ஆதரவளிக்கின்றது என்றும் உரைத்த அவர், ஒரு குடும்பத்தின் உறுப்பினர்களின், குறிப்பாக சிறாரின் வளர்ச்சிக்கும் நலவாழ்வுக்கும் இயற்கையான சூழலை அமைப்பதாக குடும்பம் இருக்கின்றது என்று அச்சாசனத்தில் கூறப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டுப் பேசினார்.

2009ம் ஆண்டில் மெக்சிகோ நகரில் ஆறாவது உலகக் குடும்ப மாநாட்டை நடத்திய இத்திருப்பீட அவை, மிலானில் 2012ம் ஆண்டில் நடைபெறவிருக்கின்ற ஏழாவது உலகக் குடும்ப மாநாட்டிற்குத் தயாரித்து வருகின்றது, திருச்சபையின் வாழ்வில் குடும்பங்களின் அடிப்படைத் தேவையை வலியுறுத்த இவ்வவை எடுத்து வரும் பல்வேறு முயற்சிகளையும் பாராட்டினார் திருத்தந்தை.







All the contents on this site are copyrighted ©.