2010-02-06 15:25:38

ஒவ்வொருவரும் தனக்குத் தேவையான உணவைப் பெறுவதற்கு அடிப்படை உரிமையைக் கொண்டுள்ளார் - திருத்தந்தை


பிப்.06,2010 வெப்பநிலை மாற்றங்களால் கடும் வறுமையையும் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையையும் எதிர்நோக்கும் குவாத்தமாலா மக்களுடனான தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

குவாத்தமாலா நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பஞ்சத்தையொட்டி அந்நாட்டு அரசு அண்மையில் தேசிய நெருக்கடி நிலையை அறிவித்துள்ளதைக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, ஏழ்மையை அகற்றவும் ஒவ்வொரு மனிதனும் மாண்புடன் வாழவும் புதிய மற்றும் படைப்பாற்றலுடன்கூடிய நடவடிக்கைகளுக்குக் கத்தோலிக்கத் திருச்சபை தனது ஒத்துழைப்பை வழங்க எப்பொழுதும் தயாராக இருக்கின்றது என்றும் உறுதி கூறினார்.

திருப்பீடத்துக்கான குவாத்தமாலா நாட்டின் புதிய தூதுவர் அல்போன்சோ ஆல்பெர்த்தோ மாத்தாபாஹ்செனிடமிருந்து இச்சனிக்கிழமை நம்பிக்கைச் சான்றிதழைப் பெற்று உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார் திருத்தந்தை.

ஒவ்வொருவரும் தனக்குத் தேவையான உணவைப் பெறுவதற்கு அடிப்படை உரிமையைக் கொண்டுள்ளார் என்றும், போதுமான உணவின்றி உடல் மற்றும் மனநல வளர்ச்சி பாதிக்கப்படும் சிறார் உட்பட சமூகத்தில் அனைவரும் மாண்புடன் வாழ்வதற்கான வழிமுறைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.

மனிதன் பிறப்பு முதல் இயற்கையான மரணம் அடையும் வரை அவனது வாழ்வைப் பாதுகாப்பதாக நாட்டின் சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் திருத்தந்தை கேட்டுக் கொண்டார்.

மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவில் திருப்பீடத் தூதரகம் செயல்படத் தொடங்கியதன் 75ம் ஆண்டு, 2011ம் ஆண்டில் இடம்பெறவிருப்பதையும் சுட்டிக்காட்டிய அவர், இந்நிகழ்வு, இருநாடுகளுக்குமிடையே ஏற்கனவே நிலவி வரும் ஒத்துழைப்புக்கு மேலும் உந்துதல் அளிக்கும் என்ற தனது நம்பிக்கையையும் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.