2010-02-05 16:09:53

திருத்தந்தை : விசுவாசிகள் திருச்சபையின் அதிகாரப்பூர்வப் போதனைகளுக்கு முழுவதும் பிரமாணிக்கமாக இருப்பதில் கவனம் செலுத்த வேண்டியது மேய்ப்பர்களின் கடமை


பிப்.05,2010 சமுதாயத்தில் திருச்சபை தனது நம்பிக்கைக்கு ஏற்ப சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமையைக் கொண்டிருப்பதைப் பாதுகாக்கும் அதேவேளை, விசுவாசிகள் திருச்சபையின் அதிகாரப்பூர்வப் போதனைகளுக்கு முழுவதும் பிரமாணிக்கமாக இருப்பதில் கவனம் செலுத்த வேண்டியது மேய்ப்பர்களின் கடமை என்று கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

திருச்சபையின் போதனைகள் நம்பிக்கையின் செய்தியாக இருக்கின்றன என்பதை விசுவாசிகளுக்கு ஏற்ற முறையில் அவற்றை ஆயர்கள் வழங்க வேண்டுமென்றும் திருத்தந்தை கேட்டுக் கொண்டார்.

ஆயர்கள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை வத்திக்கானில் பாப்பிறையைச் சந்திக்கும் ad Limina வை முன்னிட்டு ஸ்காட்லாண்டின் பத்து ஆயர்களை இவ்வெள்ளியன்று சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, அந்நாட்டில் அதிகரித்து வரும் உலகப் போக்கு குறித்துப் பேசினார்.

காருண்யக் கொலைக்கான ஆதரவு நடவடிக்கைகள், மனித வாழ்வின் மாண்பு குறித்த கிறிஸ்தவப் புரிந்து கொள்ளுதலுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன என்றுரைத்த அவர், மருத்துவ அறநெறிகளிலும் மனிதத் திசுக்கள் குறித்தச் செயல்களிலும் ஏற்பட்டுள்ள நவீன வளர்ச்சிகள் கவலை தருவதாக இருக்கின்றன என்றும் தெரிவித்தார்.

மனித வாழ்வு, திருமணத்தின் அழகு, பெற்றோராய் இருப்பதில் மகிழ்ச்சி போன்றவை பற்றிய திருச்சபையின் போதனைகள், நற்தூண்டுதல் வழங்கும் கண்ணோட்டத்தை வழங்குகின்றன என்றும் திருத்தந்தை ஆயர்களிடம் கூறினார்.

ஸ்காட்லாண்ட் கத்தோலிக்கப் பள்ளிகள் ஆற்றிவரும் சேவைகளையும் பாராட்டிய திருத்தந்தை, ஊடகத்துறை, நீதித்துறை, அரசியல், பல்கலைகழகங்கள், தொழில்துறை எனப் பல நிலைகளில் கத்தோலிக்கரின் இருப்பு வலுவாக இருப்பது தேசிய வாழ்வை வளப்படுத்த உதவும் என்றும் கூறினார்.

ஸ்காட்லாண்டின் மறைசாட்சியான புனித ஜான் ஒகில்வி குருவாகத் திருநிலைபடுத்தப்பட்டதன் 400ம் ஆண்டு சிறப்பிக்கப்பட்டு வரும் இந்தக் குருக்கள் ஆண்டில், அந்நாட்டு குருக்கள் இப்புனிதரைத் தங்கள் மாதிரிகையாகக் கொண்டு வாழுமாறு பரிந்துரைத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.