2010-02-04 15:05:13

திருத்தந்தை : தீமையின் கனியாகிய அநீதி, மனித இதயத்தில் தனது மூலத்தைக் கொண்டிருக்கின்றது


பிப்.04,2010 தீமையின் கனியாகிய அநீதி, வெளிப்புறத்தில் அதன் வேர்களைக் கொண்டிருக்கவில்லை, மாறாக மனித இதயத்தில் தனது மூலத்தைக் கொண்டிருக்கின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இம்மாதம் 17ம் தேதி திருநீற்றுப் புதனன்று தொடங்கும் தவக்காலத்திற்கான தனது செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை, மனிதனில் எப்பொழுதும் இருந்து வரும் சோதனைக்கு எதிரான கூறுகள் பற்றி விளக்கியுள்ளார்.
அநீதிகள் மனிதனுக்கு வெளியேயிருந்து வருவதால், நீதி மோலோங்குவதற்குத் தடையாக இருக்கும் வெளிக்காரணங்களை அகற்றினால் மட்டும் போதுமானது என்று பல நவீன கருத்துக் கோட்பாடுகள் நிலவுகின்றன, ஆனால் இத்தகைய எண்ணப் போக்குகள் நேர்மையற்றவை மற்றும் குறுகிய பார்வை கொண்டவை என்று இயேசு எச்சரிக்கிறார் என்றும் திருத்தந்தை அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பிறருடனான ஒன்றிப்பில் வாழ்வதற்கான அவனது திறமையை காயப்படுத்தும் ஆழமான தாக்கங்களால் உண்மையில் மனிதன் பலவீனமடைகிறான் என்ற அவர், மனிதன் தன்னியல்பிலே சுதந்திரமாகப் பகிர்வதற்குத் திறந்த உள்ளம் கொண்டவன், எனினும் அவன் பிறருக்கு எதிராகச் செயல்படுவதற்கு தன்னலம் என்ற சக்தியினால் ஈர்க்கப்படுகிறான் எனறும் கூறியுள்ளார்.
உலகின் வளங்கள் சமமாகப் பகிரப்படுவதும் நீதியான சமூகத்தைக் கட்டி எழுப்புவதும் கிறிஸ்தவர்க்கு மிகவும் முக்கியமானது, எனினும் இது மட்டும் போதாது, நீதியான பகிர்வு என்பது ஒவ்வொருவருக்கும் அவரவருக்குரியதைக் கொடுப்பதாகும் என்பதையும் அச்செய்தியில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை. “கடவுளின் நீதி இயேசு கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தின் வழியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது” என்ற தலைப்பிலான திருத்தந்தையின் இவ்வாண்டுக்கானத் தவக்கால செய்தியை, Cor Unum என்ற திருப்பீட பிறரன்பு அவைத் தலைவர் கர்தினால் Paul Josef Cordes தலைமையிலான குழு இவ்வியாழனன்று நிருபர் கூட்டத்தில் வெளியிட்டது.







All the contents on this site are copyrighted ©.