2010-02-04 15:05:39

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் ஒரிஸ்ஸாவின் கந்தமால் பகுதியைப் பார்வையிட்டனர்


பிப்.04,2010 பல்வேறு தாமதங்களுக்குப் பிறகு, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் ஒரிஸ்ஸாவின் கந்தமால் பகுதியைப் பார்வையிட்டு உண்மைகளை நேரடியாக அறிந்துகொள்ள இச்செவ்வாய் முதல் நான்கு நாள் பயணமொன்றை மேற்கொண்டுள்ளனர். இவ்வெள்ளிக் கிழமை வரை நடைபெறும் இந்தப்  பயணத்தின் துவக்கத்தில் இந்தக் குழுவினர் கட்டக் புபனேஸ்வர் உயர்மறைமாவட்டத்தின் பேராயர் Raphael Cheenathஐச் சந்தித்தனர்.
இச்சந்திப்பின் போது, கந்தமால் வன்முறையில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கத்தோலிக்கர்கள் இன்னும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவில்லையென பேராயர் தெரிவித்தார். கத்தோலிக்க, கிறிஸ்தவ குழுக்களின் முயற்சிகளால் திரட்டப்பட்ட நிதியைக் கொண்டு 2000 வீடுகள் வரை கட்டப்பட்டுள்ளன என்றும், இன்னும் 3000க்கும் அதிகமான வீடுகள் தேவைப்படுகிறதென்றும் பேராயர் கூறினார். இக்குழுவின் பிரதிநிதிகள் கந்தமால் பகுதியில் நடந்த வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களின் கவலைகளை ஐரோப்பிய ஒன்றியத்திற்குத் தெரிவிப்பதாக உறுதி அளித்துள்ளனர்.ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்த வந்துள்ள இந்தக் குழுவினரின் பயணம் சனவரி மாதமே திட்டமிடப்பட்டிருந்தது. ஆயினும், அரசின் குறுக்கீடுகளாலும் பல்வேறு அடிப்படைவாதக் குழுக்களின் குறுக்கீடுகளாலும் இந்தப் பயணம் இதுநாள் வரை தாமதிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.