2010-02-03 15:23:03

துறவறத்தாருக்குத் திருத்தந்தை மறையுரை, துறவற சகோதரர்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கும் ஏடு


பிப்.03,2010 கடவுளின் அன்புக்கு ஈடாக எதையும் வழங்குதல் தகும் என்ற எண்ணம் கொள்வதாலேயே கத்தோலிக்கர்கள் துறவற சபைகளில் நுழைந்து தங்களையே முழுவதும் அர்ப்பணித்துக் கொள்கின்றனர் என்று திருத்தந்தை 16ஆம் பெனெடிக்ட் கூறினார்.
இச்செவ்வாய் மாலை ரோமை நகரின் புனித பேதுரு பேராலயத்தில் நடைபெற்ற மாலை வழிபாடு, நற்கருணை ஆராதனையின்  போது அங்கு ஆயிரக்கணக்கில் கூடியிருந்த துறவறத்தார், மக்கள் இவர்களுக்கு மறையுரை ஆற்றுகையில் திருத்தந்தை இதைக் கூறினார். துறவறத்தை மேற்கொள்ளும் அனைவரும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டாலும், அவர்களது அர்ப்பண வாழ்வே பிரதான சாட்சியமாக அமைய வேண்டும் என திருத்தந்தை மேலும் கூறினார். துறவறத்தார் மேற்கொள்ளும் பணிவாழ்வுக்குத் தகுந்தபடி அவர்களுக்கு மக்கள் நன்றியறிதலை வெளிப்படுத்தாவிடினும், அவர்கள் தொடர்ந்து பணியாற்ற தான் அவர்களை ஊக்குவிப்பதாகவும், நோய் மற்றும் முதிர்ந்த வயது காரணமாக துன்புறும் துறவறத்தாருக்குத் தான் சிறப்பாக செபிப்பதாகவும் பாப்பிறை கூறினார்.
மேலும், இறைவழிபாடு, அருட்சாதனங்கள், செப வாழ்வு ஆகியவை குறித்தும், திருச்சபையில் துறவற சகோதரர்களின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கும் ஏடு ஒன்றைத் திருச்சபை தயாரித்து வருவதாக அர்ப்பண வாழ்வு, மற்றும் பணி வாழ்வுக்கான ஆணையத்தின் பொறுப்பாளரான கர்தினால் Franc Rode வத்திக்கான் வானொலிக்கு இச்செவ்வாயன்று அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இயேசு கோவிலில் காணிக்கையாக ஒப்புகொடுக்கப்பட்ட திருவிழாவை பிப்ரவரி 2ஆம் தேதி கொண்டாடும் திருச்சபை, இந்த விழாவை அர்ப்பண வாழ்வை மேற்கொள்ளும் அனைவருக்கான சிறப்பு நாளாக கொண்டாடிவருவது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.