2010-02-03 15:39:21

திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம் – புனித தொமினிக்


பிப்.03,2010 ஐரோப்பிய நகர்கள் எங்கும் குளிர் தன் ஆதிக்கத்தைக் கொண்டிருக்கும் இக்காலக் கட்டத்தில் பிற நகர்களோடு ஒப்பிடும் போது உரோமை நகரில் குளிர் இதமாகவே இருப்பதாகவே சொல்ல வேண்டியிருக்கிறது. அதிலும் இப்புதன் காலை குளிரின் தீவிரம் குறைவுபட்டு சூரியனின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்தது எனக் கூறலாம். இதமான ஒருகாலநிலை இருந்ததால் திருப்பயணிகளின் கூட்டமும் இன்று உரோம் நகரில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இருந்தது என உரைக்கலாம். மத்திய காலத்தில் திருச்சபையின் புதுப்பித்தலுக்கு பங்காற்றியவர்கள் குறித்துத் தன் புதன் பொது மறைபோதகத்தில் எடுத்துரைத்து வரும் நம் திருத்தந்தை 16 ம் பெனெடிக்ட், இப்புதனன்று திருச்சபையின் புதுப்பித்தலுக்கான புனித தொமினிக்கின் பங்களிப்பு பற்றி எடுத்துரைத்தார்.

RealAudioMP3 ஸ்பெயினின் ஓஸ்மா மறைமாவட்டத்தின் குருவாக இருந்த புனித தொமினிக், ஐரோப்பா முழுவதும் மறைபரப்புப்பணிக்கென அனுப்பப்பட்ட போது மக்களுக்கு நற்செய்தியை எடுத்துரைக்கவல்ல உறுதிப்பாடுடைய தீவிர ஆர்வமுடைய போதகர்களின் தேவை குறித்து உணர்ந்தார். கிறிஸ்துவின் மனுவுரு, உடலின் உயிர்ப்பு, திருமணத்தின் மற்றும் திருவருட்சாதனங்களின் மதிப்பு ஆகியவைகளை ஏற்க மறுத்த அல்பிஜென்சியர்களின் தப்பறைகளை எதிர்த்து போதிக்கும் பணி புனித தொமினிக் வசம் ஒப்படைக்கப்பட்டது. ஏழ்மை வாழ்வை கைக்கொண்ட புனித தொமினிக் தன்னையே நற்செய்தியைப் போதிக்கும் பணிக்கென அர்ப்பணித்தார். தன்னைப் பின்பற்றியவர்களைக் கொண்டு போதகர் சபையை நிறுவினார். அதுவே தொமினிக்கன் துறவிகள் சபையானது. அப்போஸ்தலிக்க வாழ்வுக்குத் தேவையான புனித அகுஸ்தீனாரின் சட்டத்தை எடுத்துக் கொண்ட புனித தொமினிக், தன் துறவிகளுக்கான இறையியல் கல்வி, செபம் மற்றும் குழும வாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். இவ்வாறு பலப்படுத்தப்பட்ட துறவிகளை, “அலைந்து திரிந்து இரந்துண்ணும் போதகர்களாக” மறைப்பணிக்கென அனுப்பப்படத் தயாரித்தார். இவ்வாறு, “தியானயோகத்தின் கனிகளை மற்றவர்க்கு வழங்குவது” என்பது தொமினிக்கன் சபையின் நோக்கமானது. தன் மகனாம் இயேசுவின் வாழ்வு, மரணம் மற்றும் உயிர்ப்பில் வெளிப்படுத்தப்பட்ட உண்மையை, அன்னைமரியின் கண்கள் வழி நோக்கி தியானிப்பதற்கானச் சிறந்த வழியான ஜெபமாலை செபித்தலை ஊக்குவித்தது, தொமினிக்கன் துறவியர் தங்கள் வேதபோதகப் பணியில் கைக்கொண்ட வழிகளுள் முக்கியமானதாகும்.

RealAudioMP3 இவ்வாறு புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை 16 ம் பெனெடிக்ட், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.