2010-02-02 15:22:09

விவிலியத் தேடல்:


RealAudioMP3
யோவான் நற்செய்தி 9ம் அதிகாரத்தில் பார்வையற்ற ஒருவரை இயேசு குணமாக்கிய புதுமை ஓர் இறையியல் பாடம் என்று சென்ற விவிலியத்தேடலில் குறிப்பிட்டிருந்தேன். அந்தப் புதுமை நிகழ்ந்ததை 7 வசனங்களில் குறிப்பிடும் யோவான் தொடரும் 34 இறை வசனங்கள் வழியே கூறும் இறையியல் பாடத்தை இந்த விவிலியத்தேடலில் ஓரளவு புரிந்து கொள்ள முயல்வோம். அகக் கண்களில் பார்வை பெறுவது, அல்லது பார்வை இழப்பது இவைகளே யோவானின் முக்கிய எண்ணங்கள். இயேசு உமிழ் நீரால் சேறு உண்டாக்கி, பார்வையற்றவர் கண்களில் பூசினார். சிலோவாம் குளத்தில் கண்களைக் கழுவச் சொன்னார். அவரும் போய் கழுவினார். பார்வை பெற்றார்.
பார்வை பெற்றவர் தன் வழியே போயிருந்தால், புதுமை முடிந்திருக்கும், சுபம் போட்டிருக்கலாம். புகழை விரும்பாத இயேசுவுக்கும் அது மிகவும் பிடித்த செயலாக இருந்திருக்கும். ஆனால், நடந்தது வேறு. யோவான் நற்செய்தி 9/7ல் சொல்லப்பட்டுள்ளது இது: "அவரும் போய்க் கழுவிப் பார்வை பெற்றுத் திரும்பி வந்தார்."
அவர் திரும்பி வந்ததால், பிரச்சனைகள் ஆரம்பமாயின. இந்தப் பிரச்சனையின் போது எழுந்த வாக்குவாதங்களை யோவான் நுணுக்கமாக, விவரமாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கூற்றுகளை ஆழ்ந்து யோசித்தால், யோவான் கூற விழையும் இறையியல் பாடங்களை நாம் புரிந்து கொள்வோம்.
பார்வை பெற்றவர் கோவில் வாசலில் அமர்ந்து பிச்சை எடுத்தவர். அவர் திரும்பி வந்ததற்கு என்ன காரணம்? தனக்கு இந்தப் புதுமையை, பெரும் நன்மையைச் செய்தவர் யார் என்பதைத் தெரிந்து கொள்ள, அவருக்கு தன் நன்றியைக் கூற அவர் திரும்பி வந்திருக்க வேண்டும். உடல் குறைகளால் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள தன் நண்பர்கள் மத்தியில் தனக்கு நடந்ததை எடுத்துச் சொல்லி, மகிழ்வைப் பகிர்ந்து கொள்ளவும், முடிந்தால் அவர்களையும் புதுமை செய்யும் அந்த மகானிடம் அழைத்துச் செல்லவும் அவர் திரும்பி வந்திருக்க வேண்டும். இத்தனை நல்ல எண்ணங்களுடன் வந்தவர், தான் பெரியதொரு பிரச்சனையில் சிக்கிக் கொள்வோம் என்று கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க மாட்டார். புதுமை நடந்தது ஓர் ஒய்வு நாள் என்பதுதான் பிரச்சனை.
வாழ்க்கையில் மலை போல் குவிந்து வரும் பிரச்சனைகளில் தினமும் வாழ்ந்தவர்கள் அந்தப் பிச்சைக்காரர்கள். அவர்களுக்கு, நல்ல நாள், பெரிய நாள், ஒய்வு நாள் என்றெல்லாம் பாகுபாடுகள் இருந்ததில்லை. எனவே, கண் பார்வை பெற்றவருக்கு அது ஒய்வு நாள் என்பதே தெரிந்திருக்க நியாயமில்லை.
அதுவரை அவரது குறையைப் பார்த்து, தர்மம் செய்து வந்த பலர் அவர் குணமான பின் அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் சந்தேகப்பட்டனர். இவர் அவரல்ல, அவரைப் போல் இருக்கிறார் என்ற பல சந்தேகங்களை எழுப்பினர்.
உள்ளத்தில் ஏற்படும் மாற்றத்தால், உடலில், முக்கியமாக, முகத்தில் ஏற்படும் மாற்றங்களை நாம் பார்த்திருக்கிறோம். உணர்ந்தும் இருக்கிறோம். உருமாற்றத்தைப் பற்றி முன்பு ஒரு முறை விவிலியத்தேடலில் நாம் சிந்தித்த போது, Leonardo da Vinci வரைந்த இறுதி இரவுணவு ஓவியத்திற்கு எப்படி ஒரே இளைஞன் இயேசுவாகவும் ஒரு சில மாதங்களுக்கு பின் யூதாசாகவும் அமர்ந்தான் என்ற கதையைக் கேட்டது நினைவிருக்கலாம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது அனைவரும் அறிந்த பழமொழி. பார்வையிழந்து, பரிதாபமாய் அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர் இயேசுவின் தொடுதலால் அடையாளம் தெரியாத அளவு மாறியிருந்தார்.

இயேசுவின் தொடுதலால் பார்வை பெற்றவர் சந்தேகத்தோடு தன்னைப் பார்த்தவர்களிடம் "நான்தான் அவன்." என்று பெருமையோடு, பூரிப்போடு சொன்னார். 'நான்தான் அவன்' என்று அவர் கூறிய அந்த நேரத்திலிருந்து இறைவனின் கருணைக்கு, புதுமைக்கு தான் ஒரு சாட்சி என்று புதிய வாழ்வை ஆரம்பித்தார். அவரது சாட்சிய வாழ்வு பிரச்சனையோடு ஆரம்பித்தது. பிரச்சனை என்ன? பரிசேயர்கள் தான். ஒன்றுமே இல்லாத இடங்களில் பிரச்னையை உண்டாக்கும் திறமை படைத்தவர்கள் பரிசேயர்கள். இந்தப் புதுமை ஒய்வு நாளில் நடந்து விட்டது. சும்மா இருப்பார்களா?
பரிசேயர் முன்பு அவர் கூட்டிச் செல்லப்பட்டார். அவர்கள் கேள்வி கேட்டனர். பதில் சொன்னார். பரிசேயர்கள் அவரது பெற்றோரை வரவழைத்து விசாரித்தனர். அவர்கள் பயத்தில் இந்த விவகாரத்திலிருந்து நழுவப் பார்த்தனர். பார்வையற்ற மகனை ஏற்றுக்கொண்ட அந்த பெற்றோர், இறைவனின் புதுமையை உடலில் தாங்கி ஒரு சாட்சியாக நின்ற மகனை ஏற்றுக்கொள்வதற்குத் தயங்கினர். பரிசேயரின் சட்ட திட்டங்கள் அவ்வளவு தூரம் அவர்களைப் பயமுறுத்தி பார்வை இழக்கச் செய்திருந்தது. அந்த பார்வையற்றவர் பிறந்தது முதல் தன் பெற்றோரையோ, பரிசேயர்களையோ பார்த்ததில்லை. இன்றுதான் முதல் முறையாக தன் பெற்றோரை, அந்த பரிசேயரைப் பார்க்கிறார். தன் பெற்றோரது பயத்தைக் கண்டு பரிதாபப்பட்டிருப்பார். அதற்கு மேலாக, அவருடைய பரிதாபத்தை அதிகம் பெற்றவர்கள் அந்த பரிசேயர்கள். கடவுளுக்கு, ஆலயத்திற்கு இவ்வளவு நெருங்கி வாழ்பவர்கள் இப்படி கடவுளை அறியாத குருடர்களாய் இருக்கிறார்களே என்று அவர் வேதனை பட்டிருப்பார்.
தன் ஊனக் கண்ணால் இன்னும் பார்க்காத இயேசுவை அவர் அகக் கண்களால் பார்த்துவிட்டதால், பரிசேயர்கள் கேட்ட கேள்விகள் அவரை பயமுறுத்தவில்லை.  மாறாக, அவரது சாட்சியம் இன்னும் தீவிரமாக, ஆழமாக ஒலித்தது. அதைக் கண்டு, அவரைக் கோவிலிலிருந்து, யூத சமூகத்திலிருந்து வெளியேற்றினர் பரிசேயர்கள்.
அதுவரை ஒதுங்கி இருந்த இயேசு இப்போது அவரைச் சந்தித்தார். அந்த சந்திப்பில் அம்மனிதரின் சாட்சியம் இன்னும் ஆழப்பட்டது. முழுமை அடைந்தது. இயேசுவைப் பற்றி அவர் சொன்ன கூற்றுகளைஎல்லாம் தொகுத்து பார்த்தால், அவரது அகக்கண்கள் படிப்படியாய் இயேசுவைக் கண்ட புதுமையை உணரலாம்.
9/11 - இயேசு எனப்படும் மனிதர் சேறு உண்டாக்கி ஏன் கண்களில் பூசினார். இப்படிதான் அவரது சாட்சியம் ஆரம்பமாகிறது. இயேசு என்ற மனிதர்...
9/15 - இயேசு என் கண்களில் சேறு பூசினார். என்று பரிசேயர்கள் முன் கூறுகிறார். மூன்றாம் மனிதராக, தூரமாய் இருந்த இயேசு நெருங்கி வந்ததைப் போல் அவர் உணர்ந்ததால், இயேசு என்று மட்டும் கூறுகிறார்.
9/17 - அவர் ஒரு இறைவாக்கினர் என்று கூறுகிறார்.
படிப்படியாக வாதங்களில் முன்னேறி, 9/33ல் இவர் கடவுளிடமிருந்து வராதவர் என்றால், இவரால் எதுவுமே செய்திருக்க முடியாது என்று ஆணித்தரமாய் சாட்சியம் கூறுகிறார்.. இவ்வாறு படிப்படியாக அக ஒளி பெற்ற அவர் இறுதியில் இயேசுவைச் சந்தித்த போது, அவரது அகம் முழுவதும் இயேசுவின் ஒளியால் நிறைந்தது. அப்பகுதியைக் கூறும் நற்செய்தி இதோ:

நற்செய்தி யோவான் 9/ 35-38 
யூதர்கள் அவரை வெளியே தள்ளிவிட்டதைப்பற்றி இயேசு கேள்விப்பட்டார்; பின் அவரைக் கண்டபோது, “மானிடமகனிடம் நீர் நம்பிக்கை கொள்கிறீரா?” என்று கேட்டார். அவர் மறுமொழியாக, “ஐயா, அவர் யார்? சொல்லும். அப்போது நானும் அவரிடம் நம்பிக்கை கொள்வேன்” என்றார். இயேசு அவரிடம், “நீர் அவரைப் பார்த்திருக்கிறீர்! உம்மோடு பேசிக்கொண்டிருப்பவரே அவர்” என்றார். அவர், “ஆண்டவரே, நம்பிக்கைகொள்கிறேன்” என்று கூறி அவரை வணங்கினார்.

இயேசு என்ற மனிதர், என்று ஆரம்பித்த இம்மனிதரின் சாட்சியம், கடவுளிடமிருந்து வந்தவர் என்ற அளவு தெளிவு பெற்று, இறுதியில் இயேசுவின் முன் "ஆண்டவரே, நம்பிக்கை கொள்கிறேன்" என்று முழுமை அடைந்தது.

பார்வையற்ற அந்த ஏழைக்கு நேர் மாறாக, பரிசேயர்கள் படிப்படியாக பார்வை இழக்கின்றனர். அவர்கள் பார்வைக்குத் திரையிட்டது ஒரே ஒரு பிரச்சனை. இந்தப் புதுமை ஒய்வு நாளன்று நடந்தது.  9/16  "ஒய்வு நாள் சட்டத்தை கடைபிடிக்காத இந்த ஆள் கடவுளிடமிருந்து வந்திருக்க முடியாது." என்று ஆரம்பிக்கும் அவர்களது எண்ண ஓட்டத்தை யோவான் கொஞ்சம் கொஞ்சமாய் வெளிக் கொணர்கிறார்.
ஒய்வு நாள் என்ற பூட்டினால் இறுக்கமாக மூடி வைக்கப்பட்ட அவர்களது மனதில் ஒளி நுழைவதற்கு வாய்ப்பு இல்லாமல் போனது. தங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர முயன்ற அந்தப் பார்வையற்ற மனிதரைக் கண்டு பயப்பட ஆரம்பித்தனர். இருளுக்கு பழகி விட்ட கண்களுக்குபார்வையற்றவர் கொண்டு வந்த ஒளி எரிச்சலை உண்டாக்கியது. அவர்களது எரிச்சல்  கோப வெறியாக மாறவே, அவர்கள் இயேசுவின் அந்த சாட்சியை வெளியே தள்ளினர். யோவான் இந்த அதிகாரத்தின் இறுதியில் பரிசேயர்களுக்கும், இயேசுவுக்கும் நடந்த உரையாடலைக் கூறுகிறார்.

நற்செய்தி யோவான் 9/ 39-41
அப்போது இயேசு, “தீர்ப்பு அளிக்கவே நான் இவ்வுலகிற்கு வந்தேன்; பார்வையற்றோர் பார்வை பெறவும் பார்வையுடையோர் பார்வையற்றோர் ஆகவுமே வந்தேன்” என்றார். அவரோடு இருந்த பரிசேயர் இதைக் கேட்டபோது, “நாங்களுமா பார்வையற்றோர்?” என்று கேட்டனர். இயேசு அவர்களிடம், “நீங்கள் பார்வையற்றோராய் இருந்திருந்தால், உங்களிடம் பாவம் இராது. ஆனால் நீங்கள் ‘எங்களுக்குக் கண் தெரிகிறது’ என்கிறீர்கள். எனவே நீங்கள் பாவிகளாகவே இருக்கிறீர்கள்” என்றார்.

பார்வையற்றவாய், பிறரது பரிதாபத்தையும், தர்மத்தையும் நம்பி இருந்தவர், உடலளவில் முதலில் பார்வை பெற்றார். பின்னர் உள்ளத்தில் ஆழமான தெளிவு பெற்றார். ஆனால், உடலளவில் பார்வைத் திறன் பெற்ற பரிசேயரோ உள்ளத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் பார்வை இழந்தனர்.

உள்ளத்தில் ஏற்படும், உணர்வுகளால், உள்ளத்தில் ஏற்படும் மாற்றங்களால் நாம் எப்படி பார்வை இழக்கிறோம் என்பதை பலவாறாக நாம் கூறுவோம். "Love is blind" என்ற ஆங்கில சொற்றொடருக்கு இணையாக 'கண்மூடித்தனமான காதல்' என்று சொல்கிறோம். காதல் வயப்பட்டவர்களுக்கு பல்வேறு விஷயங்கள் கண்களில் படுவதில்லை. பொதுவாக, எந்த ஒரு உணர்ச்சியுமே ஒரு எல்லையைத் தாண்டும் போது, அந்த உணர்ச்சி நம்மைக் குருடாக்கி விடுவதாகத் தான் அடிக்கடி கூறுகிறோம்.
"தலை கால் தெரியாமல்" ஒருவர் மகிழ்ந்திருப்பதாகக் கூறுகிறோம். கோபத்திலோ, வேறு உணர்ச்சிகளின் கொந்தளிப்பிலோ செயபடுபவர்களை "கண்ணு மண்ணு தெரியாமல்" செயல்படுவதாகக் கூறுகிறோம்.
ஆத்திரம் கண்களை மறைக்கிறது... எனக்குக் கோபம் வந்தா என்ன நடக்கும்னு எனக்கேத் தெரியாது... சந்தேகக் கண்ணோடு பார்க்காதே... இப்படி எத்தனை விதமான வாக்கியங்கள் நம் பேச்சு வழக்கில் உள்ளன.
இவ்வாறு, உள்ள உணர்வுகளுக்கும், கண்களுக்கும் நெருங்கிய உறவு உண்டு. எனவே தான், ‘ஆன்மாவின் சன்னல்கள் நம் கண்கள்’ என்று சொல்வார்கள். இதையே, இயேசு தன் மலைப்பொழிவில் அழகாய் கூறியுள்ளார்.

மத்தேயு 6 : 22 - கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும்.
 உடலளவில் பார்வை பெற்றால் போதாது, அகத்திலும் பார்வை பெற வேண்டும் என்ற பாடத்தை பரிசேயர் வழியே இறைவன் நம் அனைவருக்கும் சொல்லித்தருகிறார். அக ஒளி பெறுவோம். அகிலத்திற்கு ஒளியாவோம். பார்வைத் திறன் குறைந்தோரை எண்ணி அவர்கள் வாழ்வில் இறைவன் விளக்கேற்ற வேண்டுவோம்.







All the contents on this site are copyrighted ©.