2010-02-01 15:35:48

புற்று நோய்க்குச் சிறந்த மருந்து(பிப்ரவரி 4 உலக புற்று நோய் தினம்)


பிப்.01,2010 மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மாலைப் பொழுது. வேலை முடிந்து வீடு திரும்பினேன். அப்போது தொலைபேசி மணி ஒலித்தது. அதைக் கையில் எடுத்த போது அடுத்த முனையிலிருந்து ஓர் அதிர்ச்சிச் செய்தி கேட்டது. நான், உன் உடன்பிறவா அக்கா ஜெமி பேசுகிறேன். இன்று எனது இரத்தப் பரிசோதனை முடிவுகள் வந்தன. பலநாட்கள் கடும் காய்ச்சலுக்கான காரணம் இன்று விளங்கி விட்டது. எனக்கு இரத்தப் புற்று நோய் இருப்பது இன்று உறுதியாகி விட்டது. எனது வாழ்வின் இறுதி நாட்கள் எண்ணப்பட்டு விட்டன என்று டாக்டர் ஒரு தாதியிடம் என்னைப் பற்றிச் சொன்னதைக் கேட்டேன் என்றார்கள். சிறிது நேர அமைதிக்குப் பின்னர் மீண்டும் சொன்னார்கள் - இந்த நாட்களை நான் மகிழ்ச்சியாகக் கழிக்க விரும்புகிறேன். 55 ஆண்டுகள் உலகில் பல நல்ல உறவுகளோடு வாழ வைத்த கடவுளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். உனக்கு எதுவும் வருத்தம் கொடுத்திருந்தால் மன்னித்துக்கொள் என்றார்கள். அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த என்னிடம், நான் பரிசோதனைக்காகச் சென்ற மருத்துவமனையில் ஒரு கவிதை வாசித்தேன். அது என்னவெனில், “வாழ்க்கை மிகவும் குறுகியது. அதனால் ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்காதே. ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியோடு அனுபவி. அந்த நாளில் சந்திக்கும் ஒவ்வொருவரையும் மகிழ்ச்சிப்படுத்து. நாளை என்பது வரும். ஆனால் அது உனது கடைசி நாளாகக்கூட இருக்கலாம். எனவே இன்றைய நாளை மிக நன்றாகச் செலவழி. ஏனெனில் வாழ்க்கை வெகு வேகமாகக் கடந்து செல்வது”. என்னம்மா! எப்படி? சரியான நேரத்தில் சரியான கவிதையை வாசித்தேன் என்று நினைக்கின்றாயா என்று சொல்லி தொலைபேசியை துண்டித்து விட்டார்கள். இன்று ஜெமி அக்கா உயிரோடு இல்லை. ஆனால் இவர்களைப் போல் வேறுபல புற்று நோய்களால் துனபுற்று இறந்த சிலரது வாழ்க்கை, அதுவும் அவர்களின் கடைசி கட்ட வாழ்க்கை நல்ல பாடங்களைச் சொல்லித் தந்துள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை.

வானொலி நேயர்களே, புற்று நோய் தாக்கியுள்ளது என்று கேட்டவுடன் அது அனைவரிலும் ஒருவகையான அச்சத்தையும் அநாதவரான நிலையையும் ஏற்படுத்துகின்றது. வயது வரம்பு, ஏழை பணக்காரர், ஆண் பெண் என்ற வேறுபாடின்றி எல்லாரையும் இது தாக்குகின்றது. வேலை செய்யும் இடங்களில் ஏற்படும் பாதிப்புக்களால் உலகில் ஒவ்வோர் ஆண்டும் இந்நோய்களால் குறைந்தது இரண்டு இலட்சம் பேர் இறக்கின்றனர். அமெரிக்க ஐக்கிய நாட்டில் மட்டும் ஒவ்வோர் ஆண்டும் சுமார் இருபதாயிரம் பேர் இந்நோயால் இறக்கின்றனர் மற்றும் நாற்பதாயிரம் பேர் புதிதாகத் தாக்கப்படுகின்றனர். உலகில், குறிப்பாக வளரும் நாடுகளில் இடம்பெறும் இறப்புகளுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இந்நோய் இருக்கின்றது என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

கடந்த சில ஆண்டுகளாகவே புற்று நோய் ஓர் உலகளாவிய பிரச்சனையாக நோக்கப்படுகின்றது. கடந்த 2009ம் ஆண்டில் மட்டும் உலகில் ஒரு கோடியே இருபத்தொன்பது இலட்சம் பேர் புற்றுநோயால் புதிதாகப் பாதிக்கப்பட்டனர். 2005க்கும் 2015ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் எட்டு கோடியே நாற்பது இலட்சம் பேர் இந்நோயால் இறப்பார்கள் என்று உலக நலவாழ்வு நிறுவனம் எச்சரித்துள்ளது. அதேசமயம், இவ்விறப்புக்களில் முப்பது விழுக்காட்டுக்கு அதிகமானவைகளைத் தடுக்க முடியும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்க ஐக்கிய நாட்டு தேசிய புற்று நோய் நிறுவன இயக்குனர் John E. Niederhuber ம், இதனைத் தடுப்பதற்கு நாடுகள் உடனடியான மற்றும் வலுவான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், 2030ம் ஆண்டுக்குள், இந்த எண்ணிக்கை மேலும் இரண்டு கோடியே எழுபது இலட்சமாக உயரக்கூடும் என்று எச்சரித்துள்ளார். இவர் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளாக இந்நோய் குறித்த ஆராய்ச்சிகளிலும் சிகிச்சைகளிலும் ஈடுபட்டிருப்பவர்.

UICC என்ற பன்னாட்டு புற்றுநோய்க் கட்டுப்பாட்டு அமைப்பு, இரண்டாயிரமாம் ஆண்டு, பிப்ரவரி 3,4 தேதிகளில் பாரிசில் சர்வதேச மாநாடு ஒன்றை நடத்தி இந்நோய்த் தடுப்பு குறித்த சாசனம் ஒன்றை வெளியிட்டது. பிப்ரவரி நான்காம் தேதியை உலக புற்று நோய் தினமாகக் கடைபிடிக்கவும் பரிந்துரைத்தது. இதன் அடிப்படையில், இந்த உலக அமைப்பு, 2005ம் ஆண்டில் உலக அளவில் புற்று நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியது. 2006ம் ஆண்டிலிருந்து இந்த உலக தினம் கடைபிடிக்கப்பட்டும் வருகிறது. இதற்கு, உலக நலவாழ்வு நிறுவனம், சர்வதேச அணுசக்தி நிறுவனம் மற்றும் பிற சர்வதேச அமைப்புக்கள், அவற்றின் உறுப்பினர்கள், பங்குதாரர் போன்றோர் ஆதரவு வழங்கி வருகின்றனர். நல்ல, ஆரோக்யமான நடத்தைகள் மூலம் 43 விழுக்காட்டு புற்று நோய்களைத் தடுத்து நிறுத்த முடியும் என்றும் இவ்வுலக நாளில் வலியுறுத்தப்படுகின்றது. இவ்வாண்டின் இந்த உலக புற்று நோய் தினம், “புற்று நோய்க்குக் காரணமாகும் நூண்கிருமிகளுக்கு எதிரான ஊசி மருந்துகள் பற்றி அறிதல்” என்ற தலைப்பில் இவ்வியாழனன்று கடைபிடிக்கப்படுகிறது. இதில் 90க்கும் மேற்பட்ட நாடுகளின் 280க்கும் மேற்பட்ட புற்று நோய்க் கட்டுப்பாட்டு நிறுவனங்கள் பங்கு கொள்கின்றன.

புற்று நோய்க்கு நீண்டதொரு வரலாறு இருப்பதாக இணையதளத்தில் வாசித்தோம். கார்சினோமா (Carcinoma) என்ற கிரேக்கச் சொல்லே இதற்கான மருத்துவப் பெயராகும். செல்சஸ் (Celsus) என்பவர் கார்சினோஸ் என்ற சொல்லை இலத்தீன் மொழியில் Cancer என்று மொழி பெயர்த்தார். எகிப்தில் ஏறத்தாழ கி.மு.1600ம் ஆண்டில் இந்நோய்க்கான அறுவை சிகிச்சைகளும் விளக்கமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 1020ம் ஆண்டுகளில் அவிசென்னா (Avicenna) என்பவர், தி கேனன் ஆப் மெடிசினில் (The Canon of Medicine) புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை பற்றி விவரித்துள்ளார். 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மேரி க்யூரி(Marie curie) மற்றும் பியெர் க்யூரி (Pierre Curie), கதிர் இயக்கத்தை கண்டுபிடித்த போது, அவர்கள் புற்றுநோய்க்கு அறுவைசிகிச்சை அல்லாத முறையை முதன் முதலாக வழிவகுத்தார்கள்.

புற்றுநோய்த் தாக்கியுள்ளது என்பதைப் சில அடையாளங்களால் புரிந்து கொள்ளலாம். அவற்றில் சிலவற்றைக் குறிப்பிடுகிறோம். மார்பு அல்லது மற்ற பகுதிகளில் தடிப்பு அல்லது வீக்கம், புதிய மச்சம் அல்லது ஏற்கெனவே உள்ள மச்சத்தில் கண்கூடாக காணக்கூடிய அளவுக்கு மாற்றங்கள். குணப்படாத புண்கள். கொடுமையான ஓயாத இருமல் அல்லது கரகரப்பான கம்மிய குரல். மலம் மற்றும் சிறுநீரகம் கழிக்கும் பழக்கத்தில் மாற்றம். தொடர்ந்து அஜீரணத்தன்மை அல்லது விழுங்குவதில் பிரச்சினை. விவரிக்கமுடியாத விதத்தில உடல் எடையில் மாற்றம். இயல்புக்கு மாறாக இரத்தப்போக்கு மற்றும் இரத்த கசிவு. பாதிக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்த வலி. மேலும்,

புற்றுநோய் எப்பொழுதும் வலியை ஏற்படுத்தும் என்று அர்த்தமல்ல. புற்றுநோயின் வகை, நோயின் அதிகரிப்புதன்மை மற்றும் நோயாளி வலியைப் பொறுத்துக் கொள்ளும் தன்மையைப் பொறுத்து அந்தவலி இருக்கும். பெரும்பாலும் புற்று நோய் வளர்ந்து, எலும்புகள், உறுப்புகள் அல்லது நரம்புகளை அழுத்தும் போது வலி ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

ஒருவருக்கு புற்று நோய் இருக்கின்றது என்றால் அவருக்குப் பலவிதமான ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளது என அர்த்தம். இதற்கு மரபு, சுற்றுச்சூழல், உணவு மற்றும் வாழ்க்கைமுறை காரணிகளாக அமைகின்றன. ஆதலால் இந்நோயால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு உலக நலவாழ்வு நிறுவனம் பத்து பரிந்துரைகளை முன் வைக்கின்றது. இதோ அவற்றில் சில.

புகையிலை பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் புகையிலை தொடர்புடைய புற்று நோயால் ஒவ்வோர் ஆண்டும் 18 இலட்சம் பேர் இறக்கின்றனர்.

எடையை அதிகரிக்கும் கொழுப்பான உணவுகள் மற்றும் பானங்களை குறைத்தல், அதிகளவு காய்கறிகள் பழங்கள் மற்றும் முழுதானிய வகைகளை உட்கொள்ளுதல். முறையான உடற்பயிற்சி செய்தல். ஏனெனில் அதிக எடை, உடல்ரீதியாக சுறுசுறுப்பாக இல்லாதிருத்தல் போன்றவற்றால் ஆண்டுக்கு 2,74,000 பேர் வீதம் இறக்கின்றனர்.

கெடுதியை ஏற்படுத்தும் மதுபானங்கள் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் இதனால் ஆண்டுக்கு 3,51,000 பேர் வீதம் இறக்கின்றனர்.

உணவில் உப்பை குறைத்து உட்கொள்வது. மேலும் காளானால் பாதித்த உணவுத் தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை தவிர்ப்பது.

மேலும், உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும் போது புற்று நோய்க்கானச் செல் அழிக்கப்படுகின்றது, அது பெருக்கம் அடைவதற்கான வாய்ப்பும் தடுக்கப்படுகின்றது.

அன்பர்களே, புற்று நோயைக் குணப்படுத்த முடியும் என்ற வலுவான எண்ணம் இக்காலத்தில் நிலவி வருகிறது. ஏனெனில் இந்நோய், உடல், மனம், ஆன்மா ஆகியவை சார்ந்தது என்று Johns Hopkins என்பவர் சொல்கிறார். கோபம், பகையுணர்வு, வன்மம், மன்னிக்கும் மனமின்மை போன்ற எதிர்மறையான எண்ணங்கள் மன அழுத்தத்தையும் உடலின் அமிலத் தன்மையையும் அதிகரிப்பதால், இவை இந்த புற்றுநோய் செல்கள் மேலும் பரவ உதவுகின்றன. இவை, ஆன்மீக வாழ்வையும் அரித்து விடுகின்றன. அதேசமயம், ஆரோக்யமான நல்லெண்ணங்கள் இந்த நோயை எதிர்த்துப் போராட சக்தி தருகின்றன. மேலும், தியானம், உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி, யோகாசனம் போன்றவைகளைத் தினமும் செய்தால் அவை நல்லெண்ணங்கள் நாளும் வளர உதவுகின்றன. அத்துடன் இந்தப் பயிற்சிகளால் உடலின் செல்களுக்கு நிறைய பிராணவாயுவும் கிடைக்கின்றன. பிராணவாயு நிறைந்த சூழலில் இந்நோய்க் கிருமிகள் பரவ வாய்ப்பில்லை. எனவே அனைவருமே தன்னில் மன்னிப்பு, அன்பு, மனஅமைதி, மகிழ்ச்சி போன்ற நற்பண்புகளை வளர்த்துக் கொள்வது நோயற்ற வாழ்வுக்கு வழி அமைக்கும்.

இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் திருத்தந்தை 16ம் பெனடிக்டும், புனித பவுலின் அன்பு பற்றிய பாடலை விளக்கி, பிறரன்பே மிகச்சிறந்த கொடை, ஏனெனில் அது நிறைவாழ்வுக்கான பாதை, அது உண்மையிலும் பிறரின் நலனிலும் மகிழ்ச்சியடையும் என்று கூறினார்.

எனவே அன்பர்களே, புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல அனைவருமே எப்போதுமே ஆரோக்யமான நல்லெண்ணங்களோடும் நல் உணர்வுகளோடும் வாழும் போது நோய்கள் தீண்டாத வாழ்வு வாழ இயலும். பகை கொண்ட நெஞ்சம் துயரத்தின் இல்லம் என்பார்கள். எனவே பாசத்தால் பகையை வென்று அனைத்து உயிர்களிடத்தும் அன்புடன் நடந்து கொள்வோம். உலகம் முழுவதும் உங்களை வெறுத்தாலும் நீங்கள் உங்களையே வெறுக்காமல் இருப்பதில் கவனமாக இருங்கள். காரணம் நாம் நம்மிடம் காட்டும் அன்பும், நம்மைப் பற்றி நாம் கொண்டுள்ள நல்லெண்ணமுமே அடுத்தவரிடமும் பிரதிபலிக்கும். இந்த நல்ல எண்ணங்கள்தான் நாமும் பிறரும் நோய்களின்றி நலமுடன் வாழ வழி அமைக்கும்.








All the contents on this site are copyrighted ©.