2010-02-01 15:56:24

இங்கிலாந்து மற்றும் Wales ஆயர்களை வத்திக்கானில் சந்தித்தார் திருத்தந்தை


பிப்.01,2010 நவீன காலத்தின் பெருமளவிலான அழுத்தங்களின் மத்தியிலும் இங்கிலாந்து மற்றும் Wales கத்தோலிக்கர்கள் உயிர்துடிப்புடைய விசுவாசத்தைக் கொண்டிருப்பதாகவும், வரவுள்ள தன் திருப்பயணத்தின் போது இதனை நேரடியாகக் காண ஆவலுடன் இருப்பதாகவும் கூறினார் திருத்தந்தை 16ம் பெனெடிக்ட்.
5 ஆண்டிற்கு ஒரு முறை இடம்பெறும் Ad Limina சந்திப்பையொட்டி ரோம் நகர் வந்திருந்த பாப்பிறை, அண்மையில் இங்கிலாந்திற்குக் கொண்டுவரப்பட்ட புனித குழந்தை தெரசாவின் புனிதப் பொருட்கள் மீது காட்டப்பட்ட ஆர்வம், கர்தினால் Newman ன் முத்திபேறுபெற்ற அறிவிற்புக்கான முயற்சிகளில் ஈடுபாடு, உலக இளையோர் தினங்களில் இங்கிலாந்து இளையோரின் பங்கேற்பு போன்றவை உயிர் துடிப்புடைய விசுவாச எடுத்துக்காட்டுகளாக உள்ளன என்றார்.
சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் சம உரிமையுடன் கூடிய வாய்ப்புகளுக்கான இங்கிலாந்தின் அர்ப்பணத்தைப் பாராட்டிய திருத்தந்தை, இத்தகைய முயற்சிகளில் மத சுதந்திரத்தின் மீது அநீதியான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கான முயற்சிகள் இடம் பெறுவதையும் சுட்டிக்காட்டி தன் கவலையை வெளியிட்டார்.கிறிஸ்துவின் மீட்புச்செய்தி நம்பகத்தன்மையுடன் கூடியதாய் இருப்பதற்கு, அனைத்து கத்தோலிக்கர்களும் ஒன்றிணைந்து ஒரே குரலில் அதனை எடுத்துரைக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார் பாப்பிறை.







All the contents on this site are copyrighted ©.