2010-01-30 15:09:29

பலவகை இயற்கை பேரழிவுகளில், நிலநடுக்கத்தினால் மட்டும் உயிரிழந்தவர்கள் 60 விழுக்காடு-ஐ.நா.


சன.30,2010 கடந்த பத்தாண்டுகளில் நிகழ்ந்த பலவகை இயற்கை பேரழிவுகளில், நிலநடுக்கத்தினால் மட்டும் உயிரிழந்தவர்கள் 60 விழுக்காடு என ஐ.நா.வின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2000 ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டு முடிவுவரையிலான 10 ஆண்டுகளில், 3852 இயற்கை அழிவுகள் நிகழ்ந்துள்ளன என்றும் இவற்றில் 7 லட்சத்து 80,000 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர் என்றும் கூறும் இவ்வறிக்கையில், 22 விழுக்காட்டினர் புயல், பெருவெள்ளம் இவற்றாலும், 11 விழுக்காட்டினர் அளவுகடந்த வெப்பத்தாலும் இறந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தப் பேரழிவுகளில் உயிரிழந்தோரில் 85 விழுக்காட்டினர் ஆசியாவைச் சார்ந்தவர்கள் என்றும், இந்த கடந்த பத்தாண்டுக்கான அழிவுகளில் 2004 ஆம் ஆண்டு ஆசியாவைத் தாக்கிய சுனாமிதான் அதிக பாதிப்பை ஏற்படுத்திய அழிவு என்றும், இந்த சுனாமியில் இறந்தோர் 2,20,000க்கும் அதிகமானோர் எனவும் இவ்வறிக்கை கூறுகிறது.

ஹெயிட்டியின் Port-au-Prince நகரில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இரண்டு லட்சம் பேருக்கு மேல் இறந்திருக்கக்கூடும் என்று கூறும் இந்த அறிக்கை, நிலநடுக்கம் ஏற்படும் ஆபத்திற்கு உள்ளாகும் வகையில் அமைந்துள்ள பேரு நகரங்களில் டோக்யோ, மெக்சிகோ பெருநகரம், மும்பை ஆகியவை அடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.