2010-01-30 15:08:25

இலங்கை இனப்பிரச்சினை தீர்வுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவேண்டும் : கிறிஸ்தவ அமைப்பு


சன.30,2010 இலங்கையின் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வைக் கொண்டு வருவதற்கு அந்நாட்டு அரசுக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று, மனித உரிமைகளுக்கான கிறிஸ்தவ அமைப்பு விண்ணப்பித்துள்ளது.
இலங்கையில் குடியரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ச தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ள நிலையில் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ள அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இயேசு சபை அருள்தந்தை ஜெபமாலை ராஜா, இலங்கையின் நடவடிக்கைகளை இந்தியா கவனித்து வருமாறு கேட்டுள்ளார்.
அண்மைத் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு சிங்கள மக்களின் ஆதரவு கிடைத்துள்ள நிலையில், தற்போது இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்னெடுப்பதன் மூலம், இந்தியாவிலுள்ள அகதிகள் நாடு திரும்பவும், இலங்கையில் இடம்பெயர்ந்துள்ள அகதிகள் தமது சொந்த இடங்களுக்கு திரும்பவும் வழியேற்படும் எனவும் அவர் கூறினார்.
இலங்கையின் அண்மைக் குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து ஆசிய செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த அருள்தந்தை ஜெபமாலை ராஜா, இலங்கையில் போரின் போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டிருந்தன, தற்சமயம் சுமார் 400 பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட வேண்டியிருக்கின்றன என்பதைக் குறிப்பிட்டார்.
மேலும், இலங்கையில் குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவடைந்து இரண்டு நாட்களுக்குள் ஊடகவியலாளர்களை துன்புறுத்தும், கைதுசெய்யும் மற்றும் செய்தித்தணிக்கை நடவடிக்கைகள் மீண்டும் மேற்கொள்ளப்படுவதாக ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.
லங்கா இ நியூஸ் இணையத்தளத்தின் அலுவலகம் முற்றுகையிடப்படடமை, எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கிய லங்கா இ நியூஸின் செய்தியாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை போன்ற சம்பவங்களை அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளை நிறுத்துமாறும் அந்த அமைப்பு அரசுத் தலைவர் ராஜபக்சவிடம் கோரியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.