2010-01-29 15:29:56

இந்திய தேசிய புகையிலை கட்டுப்பாடு திட்டத்திற்கு அரசு ஒப்புதல்


சன.29,2010 இந்தியாவில் புகையிலை கட்டுப்பாட்டுச் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தும் வகையிலும், புகையிலையால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் துவக்கப்பட உள்ள தேசிய புகையிலை கட்டுப்பாடு திட்டத்துக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

டில்லியில் இவ்வியாழனன்று நடந்து முடிந்துள்ள பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில், 11வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில், 182 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட உள்ள இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ், புகையிலை பயன்பாட்டால் விளையும் தீமைகள் பற்றி பத்திரிகை மற்றும் இதர ஊடகங்கள் மூலம் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமின்றி, புகையிலைத் தயாரிப்புகளைப் பரிசோதிக்கச் சோதனைக்கூடங்களும் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும், 21 மாநிலங்களில் உள்ள 42 மாவட்டங்களில், இத்திட்டம் முன்னோடித் திட்டமாகச் செயல்படுத்தப்படும் எனவும் அக்கூட்டத்தில் கூறப்பட்டது.

இந்தியாவில் புகையிலை தொடர்புடைய வியாதிகளால் ஆண்டுதோறும் ஏறத்தாழ ஒன்பது இலட்சம் பேர் இறக்கின்றனர். அந்நாட்டில் ஏற்படும் புற்று நோய்களில் சுமார் முப்பது விழுக்காடு புகையிலை தொடர்புடையவை. மேலும், நாட்டின் வடகிழக்குப் பகுதியில் புற்று நோயால் பாதிக்கப்படும் ஆண்களில் 50 விழுக்காட்டினரும் பெண்களில் 24 விழுக்காட்டினரும் புகையிலையைப் பயன்படுத்துவதே அந்நோய்க்கான காரணமாகச் சொல்லப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.