2010-01-26 13:39:37

நற்செய்தி அறிவிப்புக்கு கிறிஸ்தவர்கள் மத்தியில் ஐக்கியம் அவசியம் - திருத்தந்தை


சன.26,2010 கிறிஸ்தவ சபைகளிடையேயான முழுமையான ஒன்றிப்பு இன்னும் கிட்டவில்லையெனினும், கிறிஸ்தவர்கள் அனைவரும் பொதுவான சாட்சிய வாழ்வுக்கான முயற்சிகளை உடனடியாகத் தொடங்க வேண்டுமென்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கேட்டுக் கொண்டார்.

புனித பவுல் மனம்மாறிய விழாவான இத்திங்கள் மாலை உரோம் புனித பவுல் பசிலிக்காவில் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தை நிறைவு செய்யும் திருவழிபாட்டை நிகழ்த்திய போது இவ்வாறு உலகக் கிறிஸ்தவர்களுக்கு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நன்மைத்தனம் மற்றும் அமைதியை ஊக்குவித்தல், மனிதனை மையப்படுத்தும் செயல்பாடுகள், பசி, எழுத்தறிவின்மை, வளங்கள் சமமாகப் பங்கிடப்படாமை, வறுமை போன்ற இக்காலத்திய துன்பங்களை அகற்றுதல் போன்றவற்றில் கிறிஸ்தவர்கள் அனைவரும் பொதுவில் சாட்சியம் பகருமாறும் திருத்தந்தை வலியுறுத்தினார்.

உலகப்போக்கு, பாராமுகம், தான் என்ற கோட்பாடு, வாழ்வின் தொடக்கமுதல் இறுதிவரை அதைக்காப்பதில் ஏற்படும் அறநெறிப் பிரச்சனைகள், அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத்தின் வரையறைகள், பிற மதங்களுடன் உரையாடல் போன்றவை முன்வைக்கும் சவால்கள் பற்றியும் அவர் சுட்டிக் காட்டினார்.

கிறிஸ்தவர்கள் மத்தியில் முழுமையான ஒன்றிப்பு ஏற்படுவதற்கு ஒவ்வொரு கிறிஸ்தவ சபையும் முயற்சிக்குமாறும் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.

கிறிஸ்தவ சபைகளைப் பிரிக்கும் கூறுகளை ஏற்கும் அதேவேளை, செபம் மற்றும் உரையாடல் மூலம் இந்த வேறுபாடுகளை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கிறிஸ்தவர்கள் தங்களுக்கிடையே பிளவுபட்டிருந்தால் நற்செய்தி அறிவிப்பை நம்பமாகச் செய்ய முடியாது என்றுரைத்த, 1910ம் ஆண்டில் கூடிய கிறிஸ்தவ ஒன்றிப்பு கூட்டத்தை நினைவுபடுத்திய திருத்தந்தை, அக்கூட்டத்தின் நூறாவது ஆண்டு ஸ்காட்லாண்டின் எடின்பர்கில் நடைபெறவிருப்பதையும் குறிப்பிட்டுப் பேசினார்.

புனித பவுல் தமஸ்கு செல்லும் சாலையில் உயிர்த்த கிறிஸ்துவைச் சந்தித்தது, கிறிஸ்தவ ஒன்றிப்புக்கும் பணிக்கும் தூண்டுதலாக இருக்கின்றது என்றும் தமது மறையுரையில் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.