2010-01-25 14:31:25

திருத்தந்தையின் மூவேளை செப உரை.


சன.25,2010. திருச்சபை கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தை இத்திங்களன்று நிறைவு செய்யும் அதேவேளை, கிறிஸ்தவ சபைகளுக்கு இடையேயான ஐக்கியம் கிறிஸ்து வழியாக வருகின்றது என்று ஞாயிறு மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

வத்திக்கான் புனித பேதுரு சதுக்கத்தில் இஞ்ஞாயிறு நண்பகலில் கூடியிருந்த ஆயிரக்கணக்கானத் திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரையாற்றிய திருத்தந்தை, கிறிஸ்துவின் உடல் பற்றிய புனித பவுலின் திருமடலை மையமாக வைத்துப் பேசினார்.

திருச்சபை, உடலாகப் புரிந்து கொள்ளப்படுகிறது, இந்த உடலுக்குத் தலையாக இருக்கும் கிறிஸ்துவால் இது உருவாகிறது என்றும் கூறிய அவர், திருத்தூதரான பவுல், தூய ஆவியின் கொடைகளாகிய வரங்களின் பன்மைத்தன்மையில் ஒன்றிப்பை வெளிப்படுத்த விரும்புகிறார் என்று விளக்கினார்.

கிறிஸ்துவிலும் தூய ஆவியிலும் திருச்சபை ஒன்றாகவும் புனிதமானதாகவும் இருக்கின்றது, இந்த மிக ஆழமான ஐக்கியமானது மனிதத் திறமைகளைத் தாங்கிப் பிடிக்கின்றது என்றும் திருத்தந்தை தெரிவித்தார்.

வழக்கம்போல், புனித பவுல் மனம்மாறிய விழாவான இத்திங்களன்று புனித பவுல் பசிலிக்காவில் மாலையில் நடைபெறும் திருவழிபாட்டோடு இந்தக் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தை நிறைவடையச் செய்யவிருப்பதாகவும் திருத்தந்தை கூறினார்.

இத்திருவழிபாட்டில், பிற திருச்சபைகள் மற்றும் திருச்சபை சமூகங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்றும், கிறிஸ்துவின் சீடர்கள் அனைவரும் முழுமையான ஒன்றிப்பின் கொடையைப் பெறுவதற்கு இறைவனிடம் செபிக்கவிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

கிறிஸ்தவர்களிடேயேயான ஒன்றிப்பு, நற்செய்தியை இன்னும் சாரமுள்ளதாகவும் நம்பகத்தன்மை கொண்டதாகவும் அறிவிக்கச் செய்யும் என்பதில் தான் உறுதியாய் இருப்பதாகவும் திருத்தந்தை திருப்பணிகளிடம் கூறினார்.

திருச்சபையின் தாயாம் புனித கன்னிமரி இதற்கு உதவுவாளாக என்று மூவேளை செப உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.