2010-01-22 15:23:21

ஹைய்ட்டியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் இந்திய திருச்சபை தனது ஒருமைப்பாட்டுணர்வை வெளிப்படுத்தியுள்ளது


சன.22,2010 ஹைய்ட்டியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் தங்களது ஒருமைப்பாட்டுணர்வை வெளிப்படுத்தும் விதமாக டெல்லி உயர்மறைமாவட்டம் பல்சமய செபவழிபாடு ஒன்றை நடத்தியுள்ளது.
இந்தப் பல்சமய செபவழிபாடு பற்றி யூக்கா செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த டெல்லி உயர்மறைமாவட்டப் பேச்சாளர் அருள்திரு டாமினிக் இம்மானுவேல், ஹைய்ட்டிக்கு நேரிடையாகச் செல்ல முடியாவிட்டாலும் அங்கு நல்லதொரு நிலைமை ஏற்படுவதற்கு செபத்தால் உதவ முடியும் என்று கூறினார்.
இயேசுவின் திருஇருதயப் பேராலயத்தில் நடைபெற்ற இச்செப வழிபாட்டில் இந்து, சமணம் மற்றும் சீக்கிய மதங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
கரீபியன் தீவு நாடான ஹைய்ட்டியில் சனவரி 12ம் தேதி இடம் பெற்ற கடும் நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை எட்டக்கூடும் எனவும், இன்னும் அதிகமான மருத்துவ உதவிகள் விரைவில் வந்துசேரவில்லையெனில், மேலும் ஆயிரக்கணக்கானோர் இறக்கக்கூடும் எனவும் உதவி நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.அமெரிக்க செஞ்சிலுவை சங்கத்தின் கணிப்புப்படி, இந்த நிலநடுக்கத்தால் ஏறத்தாழ முப்பது இலட்சம் பேர்வரைப் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிகிறது.







All the contents on this site are copyrighted ©.