2010-01-22 15:22:33

மனித வாழ்வை ஆதரிக்கும் நடவடிக்கைகளில் இளையோரின் பங்கேற்பு அதிகமாக இருப்பது குறித்து அமெரிக்க கர்தினால் மகிழ்ச்சி


சன.22,2010 அமெரிக்க ஐக்கிய நாட்டில் மனித வாழ்வை ஆதரிக்கும் நடவடிக்கைகளில் இளையோரின் பங்கேற்பு அதிகமாக இருப்பது குறித்து தனது பாராட்டைத் தெரிவித்துள்ளார் அந்நாட்டு கர்தினால் டானியேல் தினார்தோ.
அமெரிக்க ஐக்கிய நாட்டு உச்சநீதிமன்றம், கருக்கலைப்பைச் சட்டப்பூர்வமாக அங்கீகரித்து இவ்வெள்ளிக்கிழமையோடு 37 ஆண்டுகள் நிறைவுறுகின்றன. இதை முன்னிட்டு, வாழ்வுக்கு ஆதரவாகத் தொடங்கப்பட்ட இரண்டு நாள் நடவடிக்கையை இவ்வியாழனன்று திருப்பலியோடு தொடங்கி வைத்த கால்வெஸ்ட்டன்-ஹவுஸ்டன் பேராயர் கர்தினால் தினார்தோ, புதிய தலைமுறைகளின் எழுச்சியைப் புகழ்ந்து பேசினார்.
மேலும், வாழ்வுக் கலாச்சாரத்தை ஆதரித்து ஆண்டுதோறும் நடத்தப்படும் நடவடிக்கைகள் குறித்து நிருபர் கூட்டத்தில் பேசிய அமெரிக்க ஐக்கிய நாட்டு தேசிய இயக்குனர் டேவிட் ரெரெய்ட், இவ்வாண்டில் வாழ்வுக்கு ஆதரவாக 40 நாள் நடவடிக்கை இடம் பெறவிருப்பதாகத் தெரிவித்தார்.
வருகின்ற பிப்ரவரி 17 முதல் மார்ச் 28 வரை இடம் பெறவிருக்கும் இந்நடவடிக்கையில் அமெரிக்க ஐக்கிய நாடு, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் 156 நகரங்கள் பங்குபெற இசைவு தெரிவித்திருப்பதாக அவர் மேலும் கூறினார்.2007ம் ஆண்டிலிருந்து இதுவரை 280 நகரங்களில் மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் மத்தியில் வாழ்வுக் கலாச்சாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியிருப்பதாகவும் பெரெய்ட் தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.