2010-01-22 15:22:45

நைஜீரிய அண்மை வன்முறைகளுக்கு சமயம் காரணம் அல்ல-அந்நாட்டுப் பேராயர்


சன.22,2010 மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில், முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்குமிடையே அண்மையில் இடம் பெற்ற வன்முறைகளுக்கான காரணம், சமயம் சார்ந்தது அல்ல, மாறாக இன மற்றும் அரசியல் ரீதியானது என்று அந்நாட்டுப் பேராயர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.
நைஜீரியாவின் மத்திய பகுதியிலுள்ள ஜோஸ் நகரில் இம்மாதம் 17ம் தேதி முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே தொடங்கிய வன்முறையில் 400க்கும் அதிகமானோர் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 2008ம் ஆண்டில் இடம் பெற்ற இதேமாதிரியான வன்முறையில் ஏறத்தாழ 300 பேர் இறந்தனர்.
கடந்த ஞாயிறன்று தொடங்கிய வன்முறைகளுக்கான மூலகாரணம் பற்றிப் பேசிய ஜோஸ் நகரத்தின் பேராயர் இக்னேஷியுஸ் கைய்காமா, ஹவுசா இன முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த நகரை யார் ஆட்சி செய்வது என்ற விவகாரமே இத்தகைய வன்முறைக்கான காரணம் என்று விளக்கினார்.
முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்குமிடையேயான மதம் சார்ந்த பிரச்சனையே இதற்குக் காரணம் என்ற ஊடகங்களின் கணிப்பு தவறானது என்றும் பேராயர் கூறினார்.
 இசுலாம் மற்றும் கிறிஸ்தவம் இணைந்த குழுவானது, வருகிற திங்கட்கிழமையன்று கூடி, இத்தகைய வன்முறைகள் இனிமேலும் இடம் பெறாதிருக்கும் யுக்திகளை வகுக்கவிருப்பதாகவும் பேராயர் கைய்காமா தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.