2010-01-21 15:13:38

ஹெயிட்டி நிலநடுக்கத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட 53 அனாதைக் குழந்தைகள் அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரை அடைந்தனர்


சன.21,2010 ஹெயிட்டி நிலநடுக்கத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு அனாதை இல்லத்திலிருந்து மீட்கப்பட்ட 53 குழந்தைகள் அமெரிக்க குடும்பங்களில் உள்ளவர்களால் தத்தெடுக்கப்படுவதற்காகஅண்மையில் அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரை அடைந்தனர். இந்நகரிலிருந்து சென்று, கடந்த இரு ஆண்டுகளாய் ஹெயிட்டியின் அனாதை இல்லத்தில் பணிபுரிந்து வந்த இரு அருட்சகோதரிகளின் முயற்சியால், இந்தக் குழந்தைகள் பிட்ஸ்பர்க் நகருக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
மேலும், ஹெயிட்டியில் இப்புதனன்று தலைநகர் Port au Princeக்கு 35 மைல்கள் தூரத்தில் 6.1 ரிக்டர் அளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இதனால், கட்டிடங்களுக்கும், மனித உயிர்களுக்கும் அதிக பாதிப்பில்லை எனவும், இந்த நிலநடுக்கத்தில் திருப்பீடத்தூதுவர் பேராயர் Bernardito Auzaவின் இல்லம் அதிர்வடைந்தாலும், அவரும் அவரைச் சார்ந்தவர்களும் பத்திரமாக இருப்பதாக பேராயர் Auza மின்னஞ்சலில் தகவல் அனுப்பியுள்ளார். இதற்கிடையே, சீனாவிலும், தைவானிலும் உள்ள கத்தோலிக்கர்கள் தங்கள் நாட்டில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் பாதிப்புகளை நினைவுகூர்ந்து, ஹெயிட்டி மக்களுக்கு உதவும் வகையில், சிறப்பாக அங்குள்ள குழந்தைகளின் கல்விக்காக, தங்களால் இயன்ற உதவிகளைச் செய்யப் போவதாகக் கூறியுள்ளனர். தைவானில் 1999ஆம் ஆண்டு 7.6 ரிக்டர் அளவிலும், சீனாவில் 2008ஆம் ஆண்டு 7.9 ரிக்டர் அளவிலும் நில நடுக்கங்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.