2010-01-21 15:14:32

ஆப்கானிஸ்தானில் பணிபுரியும் இயேசு சபையினர் அந்நாட்டிற்குத் தேவையான உதவிகளை எடுத்துக் கூறியுள்ளனர்


சன.21,2010 போரினால் பலவாறாகப் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் பணிபுரியும் இயேசு சபையினர் அந்நாட்டிற்கு வெளியிலிருந்துதான் உதவிகள் வரவேண்டுமெனக் கூறியுள்ளனர். இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும் அருட்தந்தை Stan Fernandes இப்புதனன்று டெல்லியில் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டி அளித்த போது இவ்வாறு கூறியுள்ளார். பல ஆண்டுகளாகப் போரின் கோரப்பிடியில் சிக்கியுள்ள ஆப்கானிஸ்தானை மீண்டும் கட்டியெழுப்ப அங்கு கல்வி அதிகம் தேவைப்படுகிறது. இந்தப் பணியைச் செய்வதற்கு ஆட்பலமும், பணபலமும் தேவைப்படுகின்றன, சிறப்பாக இங்கு குடியிருக்கக் கொடுக்கப்படும் வாடகை மிக அதிகமாக உள்ளது, மேலும் இங்கு பயணங்கள் மேற்கொள்ளும் போது, சாலை வழிச் செல்வது மிக ஆபத்தாக உள்ளதால், விமானத்தில் மட்டுமே செல்ல முடியும் எனவே பயணங்களுக்கும் அதிகம் செலவு செய்ய வேண்டியுள்ளதென தங்கள் நிலையை விளக்கினார் அருட்தந்தை Fernandes. 2002ஆம் ஆண்டு இயேசு சபையினரால் ஆப்கானிஸ்தானில் ஆரம்பிக்கப்பட்ட பணிகள், அங்கு நிலவிய பயங்கரமானச் சூழலால் விரைவில் கைவிடப்பட்டதெனவும், மீண்டும் அந்தப் பணி 2005ஆம் ஆண்டு தொடரப்பட்டு, பல்வேறு ஆபத்துகளுக்குமிடையே நடந்து வருவதாகவும் செய்திக் குறிப்பு ஒன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.