2010-01-20 15:54:14

திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம்


ஜனவரி 20, 2010. உலகமெங்கும் தற்போது கிறிஸ்தவ ஒன்றிப்பு ஜெப வாரம் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் சனவரி 18 முதல் 25ஆம் தேதி வரை சிறப்பிக்கப்படும் இவ்வாரம், ரோம் நகரில் மிக முக்கியத்துவம் நிறைந்த ஒன்றாக இருக்கும். இச்செப வாரத்தின் இறுதி நாளான 25ஆம் தேதியன்று, அதாவது, புனித பவுலின் மனந்திரும்பல் திருவிழாவான அன்று ரோம் நகரின் புனித பவுல் பேராலயத்தில் ஏனைய கிறிஸ்தவ சபைகளுடன் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வார் திருத்தந்தை. இப்புதனன்றும் திருத்தந்தை 16ஆம் பெனெடிக்ட், தன் பொது மறைபோதகத்தில் இக்கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரம் குறித்தே எடுத்துரைத்தார்.

RealAudioMP3

வத்திக்கானில் உள்ள திருத்தந்தை 6ஆம் சின்னப்பர் மண்டபத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களை நோக்கி, "எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக... இதனால் உலகம் நம்பும்." (யோவான் 17: 21) என்ற வார்த்தைகளுடன் பிரிவினையின் துயரம் குறித்து சிந்திக்கவும், இணைந்து செபிக்கவும் இயேசு தன் சீடர்களுக்கு விடுத்த அழைப்பை நினைவூட்டினார் திருத்தந்தை.

இவ்வாண்டின் ஜெபவாரத்திற்கென எடுக்கப்பட்டுள்ள தலைப்பான 'நீங்களே இதற்கு சாட்சிகள்' (லூக்கா 24: 48) என்பது கிறிஸ்தவ ஐக்கியத்திற்கும் நற்செய்தி அறிவித்தலுக்கும் இடையேயான நெருங்கிய பிணைப்பைக் காட்டி நிற்கின்றது.

நூறு ஆண்டுகளுக்கு முன்னால் துவக்கப்பட்ட இந்நவீன காலத்தின் கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சிக்கான நடவடிக்கையாக இருந்த Edinburg கருத்தரங்கின் முக்கிய அக்கறையாக இத்தலைப்புதான், இந்நோக்கம்தான் இருந்தது. கடவுளைவிட்டு விலகிப் போகத் துடித்து, உலகப் போக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இன்றைய சமூகத்திற்கு, நம் பொது விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்ட ஒன்றிணைந்த சாட்சியம் அவசரமாகத் தேவைப்படுகிறது. மேலும், பிரிந்துள்ள கிறிஸ்தவர்களுக்கிடையேயான சகோதரத்துவ ஒத்துழைப்பு, பேச்சு வார்த்தைகள், தொடரும் பிரிவினைகள் குறித்த ஆழ்ந்த சிந்தனைகள் போன்றவையும் தேவைப்படுகின்றன. கடந்த ஆண்டின் கிறிஸ்தவ ஒன்றிப்பு முன்னேற்ற நடவடிக்கைகளுக்கு இறைவனுக்கு நன்றி கூறும் அதே வேளை, இன்றைய கிறிஸ்தவர்கள் மேலும் ஐக்கியத்தில் மேன்மையடைந்து, உயிர்த்த கிறிஸ்துவின் மேலும் பலம் பொருந்திய சாட்சிகளாக விளங்குமாறு, என்னுடன் இணைந்து செபிக்குமாறு உங்களை வேண்டுகிறேன் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனெடிக்ட்.



இவ்வாறு தன் மறைபோதகத்தை வழங்கியத் திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசிரையும் அளித்தார்.

RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.