2010-01-19 16:23:10

விவிலியத் தேடல்:


RealAudioMP3
ஒரு சில விவிலியப் பகுதிகள் அள்ள, அள்ளக் குறையாத அமுதசுரபியைப் போன்றவை. வைரங்களைப் போல பல்வேறு கோணங்களில் பல்வேறு ஒளியில் பல்வேறு அழகுடன் இப்பகுதிகள் மின்னும். கானாவூர் திருமணப் பகுதியும் இப்படி ஒரு வைரம். இந்த வைரத்தின் இரு பகுதிகளை இதுவரைச் சிந்தித்தோம். இன்று கானாவூர் திருமணம் - பாகம் மூன்று.
திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது என்று ஆரம்பித்து, மரியன்னையும் இயேசுவும் கூறியவைகளை சென்ற ஞாயிறு சிந்தனையில் பகிர்ந்துகொண்டோம். இன்று இந்தப் புதுமையின் மையப்பகுதியான தண்ணீர் திராட்சை இரசமாய் மாறிய நிகழ்வைச் சிந்திப்போம். இந்தப் புதுமை எப்போது, எப்படி நிகழ்ந்தது?
மரியா பணியாளர்களிடம் "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்." என்று சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு அகன்றார். பணியாளர்களுக்குக் குழப்பம்.
மரியன்னை 'அவர்' என்று குறிப்பிட்டுச் சொன்ன அந்தப் புது மனிதரை அவர்கள் இதுவரைப் பார்த்ததில்லை. அந்தப் புதிய இளைஞனைப் பார்த்தால், இந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைப்பவர் போல் அவர்களுக்குத் தெரியவில்லை. இருந்தாலும், கடந்து மூன்று அல்லது நான்கு நாட்களாய் தங்களுடன் சேர்ந்து அதிகம் வேலைகள் செய்தவர் மரியன்னை என்பதால், அவர் மட்டில் அதிக மதிப்பு அவர்களுக்கு இருந்தது. அதுவும் அந்த அன்னை இதுவரை பல தேவைகளைப் பூர்த்தி செய்து, பல பிரச்சனைகளைத் தீர்த்தத்தைக் கண்கூடாகப் பார்த்தவர்கள் அவர்கள். எனவே, அந்த அன்னை சொன்னால், அதில் ஏதாவதொரு அர்த்தம் இருக்கும் என்று அவர்கள் நம்பினர். மேலும், இந்த இளைஞன் அந்த அம்மாவுடைய மகன் என்றும் கேள்விப்பட்டதால், அவர் சொல்வதைக் கேட்பதற்கு அவர்கள் மனம் ஓரளவு பக்குவப்பட்டிருந்தது.
இவர்கள் இப்படி சிந்தித்துக்கொண்டிருந்த போது, இயேசு தன்னைச் சுற்றிலும் பார்த்தார். அவர்கள் நின்றுகொண்டிருந்த  முற்றத்தில் கை, கால் கழுவுவதற்கென தொட்டிகள் இருந்தன. “யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர்கொள்ளும்.” இது யோவான் நற்செய்தியில் நாம் வாசிக்கும் வரிகள்.
இயேசு பணியாளரிடம், "இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்" என்றார். இயேசு இப்படிச் சொன்னதும், பணியாளர்கள் மனதில் ஓடிய எண்ணங்களைக் கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்போம். இந்தக் காட்சியை நாம் வாழும் காலத்திற்கு ஏற்றது போல் சொல்லவேண்டுமெனில், ஒரு கிராமத்தில், அல்லது சிறு ஊரில் நடக்கும் திருமண வைபவத்தைக் கற்பனை செய்து கொள்வோம். கை, கால் கழுவ குழாய் வசதி இல்லாத இடங்களில், பெரிய பாத்திரங்களில், அல்லது பிளாஸ்டிக் வாளிகளில் வெளியே தண்ணீர் வைத்திருப்போம். அந்தப் பாத்திரங்களுக்குப் பதில் ஒரு சில இடங்களில் சிமென்ட் தொட்டிகளிலும் தண்ணீர் இருக்கும். அந்தத் தண்ணீரை எடுத்து யாரும் குடிப்பதில்லை, இல்லையா? அந்தப் பாத்திரங்களில், அல்லது தொட்டிகளில் தண்ணீரை நிரப்பச் சொன்னார் இயேசு.
தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப இயேசு சொன்னதும், பணியாளர்களுக்கு ஆச்சரியம், அதிர்ச்சி, கொஞ்சம் எரிச்சலும் இருந்திருக்கும். பந்தியில் பரிமாற திராட்சை இரசம் இல்லையென்று அலைமோதிக் கொண்டிருக்கும் போது, இப்படி ஒரு கட்டளையை இயேசு தருவார் என்று அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. விருந்தினர்கள் எல்லாரும் கை, கால் கழுவிவிட்டு பந்தியில் அமர்ந்து விட்டதால், அந்தத் தொட்டிகளில் தண்ணீர் ஏறக்குறைய காலியாகி விட்டது. அவற்றில் மீண்டும் நீர் நிரப்ப வேண்டியது பணியாளர்களின் கடமை. அந்தக் கடமையை அவர்கள் சரிவரச் செய்யவில்லை என்பதை இயேசு சொல்லாமல் சொல்கிறாரோ என்று அவர் மீது எரிச்சல். தொட்டிகளில் தண்ணீர் நிரப்புவதற்கும், திராட்சை இரசம் கிடைப்பதற்கும் என்ன சம்பந்தம்? இப்படி பல எண்ணங்கள் பணியாளர்களின் மனங்களில் ஓடிக்கொண்டிருந்தன.
திருமண நேரங்களில் பணியாளர்களின் பாடு மிகவும் கடினமான ஒன்று. பலரும் கட்டளை இடுவார்கள். பல பக்கங்களிலிருந்தும் ஏச்சும் பேச்சும் அவர்கள் கேட்க வேண்டியிருக்கும். யார் சொல்வதையும் தட்டிக் கழிக்க முடியாது. யாரையும் பகைத்துக் கொள்ள முடியாது. யார் முக்கியம், முக்கியமில்லை என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. எனவே, எல்லாருடைய போக்குப்படியும் நடக்க வேண்டும். அதுதான் பாதுகாப்பான வழி. கானாவூர் பணியாளருக்கும் இதேநிலை. அந்த இளைஞன் சொன்னதை பேசாமல் செய்து விடுவது நல்லது என்று நினைத்தனர். அவர்கள் அந்த நேரத்தில் மரியன்னையை பற்றியும் நினைத்துப் பார்த்திருப்பார்கள். அந்த அம்மா  "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்." என்று சொல்லிச் சென்ற சொற்கள் அவர்கள் உள்ளத்தில் இன்னும் ஒலித்துக்கொண்டிருந்தன. மேலும், தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள் என்று அந்த இளைஞன் சொன்னபோது, அந்தக் கட்டளையில் ஒலித்த ஒரு தனிப்பட்ட அதிகாரம் அவர்கள் மனதில் எழுந்த பல குழப்பங்களைத் தீர்த்தது போல் உணர்ந்தனர். தாயின் தாலாட்டுக் குரலில் கட்டுண்டு நம்பிக்கையோடு கண்ணுறங்கும் குழந்தையைப் போல் இயேசுவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அவர்கள் தொட்டிகளை நிரப்ப ஆரம்பித்தனர். அங்கு நடந்ததைக் கூறும் யோவான் நற்செய்தி இதோ:

யோவான் நற்செய்தி, 2: 5-9
இயேசுவின் தாய் பணியாளரிடம், “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” என்றார். யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர்கொள்ளும். இயேசு அவர்களிடம், “இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்” என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள். பின்பு அவர், “இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்” என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள். பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது.

பணியாளர்கள் தொட்டியில் ஊற்றியது தண்ணீர். ஆனால், அதை அவர்கள் மொண்டு எடுத்துச் சென்றபோது, அது இரசமாக மாறியிருந்தது. எப்போது, எப்படி இந்த புதுமை நடந்தது?
வழக்கமாக, இயேசுவின் புதுமைகளில் அவர் சொல்லும் ஒரு சொல்லோ, அல்லது அவரது ஒரு செயலோ புதுமைகளை நிகழ்த்தும். ஆனால், இந்தப் புதுமை நடந்த போது, அப்படி தனிப்பட்ட வகையில் இயேசு எதையும் சொல்லவில்லை. செய்யவுமில்லை.
"தண்ணீர் நிரப்புங்கள்" என்றார். "இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொடுங்கள்" என்றார். இவ்விரு கூற்றுகளுக்குமிடையே, அவர் நீர் நிரப்பப்பட்ட தொட்டிகள் மீது கைகளை நீட்டியதாகவோ, வேறு எதுவும் சொன்னதாகவோ நற்செய்தியில் ஒன்றும் குறிப்பிடப்படவில்லை.
ஆனால், இயேசுவின் இந்த இரு கூற்றுகளுக்குமிடையே, யோவான் ஒரு அழகிய வாக்கியத்தைக் கூறியுள்ளார். 'தண்ணீர் நிரப்புங்கள்' என்று இயேசு சொன்னதும், அவர்கள் அத்தொட்டிகளை விளிம்பு வரை நிரப்பினார்கள். இதுதான் அந்த வாக்கியம். மிகவும் பொருள்நிறைந்த வாக்கியம். என்னைப் பொறுத்தவரை, எப்போது அந்தப் பணியாளர்கள் விளிம்பு வரை, தொட்டிகள் நிறைந்து வழியும் வரை நீர் நிரப்பினார்களோ, அப்போது அந்தத் தண்ணீர் திராட்சை இரசமாக மாறிய புதுமை நிகழ்ந்தது.
இயேசு சொல்லியதைக் கேட்டு குழப்பம் கோபம் இவைகளையே மனதில் தாஙகி, அந்தப் பணியாளர்கள் செயல்பட்டிருந்தால், அந்தத் தொட்டிகள் அரைகுறையாய் நிரப்பப்பட்டிருக்கும். ஆனால், யோவான் தெளிவாகக் கூறியுள்ளார்: அவர்கள் அத்தொட்டிகளை விளிம்பு வரை நிரப்பினார்கள் என்று. அப்படியெனில் அந்த பணியாளர்களின் உள்ளத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. இந்த உள்ள மாற்றம்  தான் தண்ணீர் இரசமாக மாறிய அந்த மாற்றத்தையும் உருவாக்கியது. தங்கள் அதிர்ச்சி, தயக்கம், எரிச்சல் எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு, அவர்கள் செய்யும் செயலை முழுமையாகச் செய்த அந்த நேரத்திலேயே, அவர்கள் ஊற்றிய தண்ணீர் திராட்சை இரசமாக மாறியது. முழுமையான ஈடுபாட்டுடன் செய்யும் ஒவ்வொரு செயலும் மன நிறைவைத் தருவதோடு வாழ்வில் மாற்றங்கள் பலவற்றையும் உருவாக்கும்.
இறுதியாக ஒரு சிந்தனை. புதுமையாய்த் தோன்றிய இந்த இரசம் எங்கிருந்து வந்ததென பந்தி மேற்பார்வையாளனுக்குத் தெரியவில்லை. மண மகனைக் கூப்பிட்டு கேட்கிறார். அவருக்கும் தெரியவில்லை. ஆனால், பணியாளருக்குத் தெரிந்திருந்தது. இன்றைய நற்செய்தியில் நாம் கேட்ட இறுதி வாக்கியங்கள் இவை.
“பணியாளருக்குத் தெரிந்திருந்தது” என்ற யோவானின் இந்தக் கூற்றை நான் இப்படி பார்க்க விழைகிறேன். மையங்கள் ஓரமாவதையும், ஓரங்கள் மையமாவதையும் யோவான் இந்த வாக்கியத்தில் சொல்கிறார். இதைப் புரிந்து கொள்ள முயல்வோம்.
திருமண வைபவங்களில் பல பொருட்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால், எல்லாப்பொருட்களும் முக்கியத்துவம் பெறுவதில்லை. மணமகன், மணமகள் இவர்கள் அமரும் நாற்காலிகள் புகழ் பெறலாம், எல்லா புகைப்படங்களிலும் இடம் பெறலாம். கை, கால்களைக் கழுவும் தொட்டிகள் பொதுவாகப் புகழ் அடைவதில்லை. புகைப் படங்களில் இடம் பெறுவதில்லை. அதே போல், இந்த வைபவங்களில் முழு நேரமும் பணிகள் செய்யும் பணியாளர்களைப் பற்றி யாரும் பெரிதாக நினைப்பதில்லை. திருமணப் புகைப்படங்கள் அடங்கிய எந்த ஒரு ஆல்பத்தையும் திறந்து பாருங்கள். அங்கு பணியாளர்களின் படங்கள் எல்லாமே, ஏதாவதொரு பணியை அவர்கள் செய்வதுபோல் இருக்குமே ஒழிய, அவர்களை மையப்படுத்தி இருக்காது. இயேசுவின் இந்தப் புதுமை வழியாக, அந்தத் திருமணத்தில் மையமான புள்ளிகள் எல்லாமே மறைந்து விட்டனர். ஓரத்தில் இருந்த பணியாளர்கள் இயேசுவுடன் சேர்ந்து, புதுமையின் நாயகர்களாயினர். யாருடைய கவனத்தையும் ஈர்க்காத நீர்த்தொட்டிகள் இறைமகனுடைய கவனத்தை ஈர்த்தன. அவரது புதுமைக்கு மையமாயின. நம் வாழ்விலும், எதை எதை மையப்படுத்துகிறோம். அல்லது ஓரத்தில் ஒதுக்கி வைக்கிறோம் என்பதையெல்லாம் புத்தாண்டின் துவக்கத்தில் நினைத்துப் பார்ப்பது நல்லது. மையங்களும், ஓரங்களும் மாறவேண்டுமெனில், துணிவுடன், முழு மனதுடன் மாற்றங்களைச் செய்ய அந்த இறைவன் துணையை நாடுவோம்.







All the contents on this site are copyrighted ©.