2010-01-16 13:16:44

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் உரோம் யூதமதத் தொழுகைக்கூடத்திற்குச் செல்வது ஓர் இறையியல்ரீதியான கடமை - ஆயர் வின்சென்சோ பாலியா


சன.16,2010 இஞ்ஞாயிறன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட், உரோம் யூதமதத் தொழுகைக்கூடத்திற்குச் செல்வது, கிறிஸ்தவர்களுக்கும் யூதர்களுக்கும் இடையான ஒத்துழைப்பிற்குத் தெளிவான சான்றாக இருக்கின்றது என்று இத்தாலிய ஆயர் பேரவையின் கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும் பல்சமய உரையாடல் ஆணையத் தலைவர் ஆயர் வின்சென்சோ பாலியா Vincenzo Paglia கூறினார்.
கத்தோலிக்கருக்கும் யூதருக்குமிடையேயான உரையாடலை ஆழப்படுத்துவதற்கான 21வது உலக தினம் கடைபிடிக்கப்படும் இஞ்ஞாயிறன்று திருத்தந்தையின் இத்திருப்பயணம் இடம் பெறுவதை சுட்டிக் காட்டிய ஆயர் பாலியா, இது ஓர் இறையியல்ரீதியான கடமையாகவும் இருக்கின்றது என்று கூறினார்.
இவ்விரு மதத்தவருக்கும் இடையே இருக்கும் சகோதரத்துவம், இம்மதத்தவரின் விசுவாசத்தின் ஒருங்கிணைந்த அங்கமாக இருக்கின்றது என்றும் ஆயர் தெரிவித்தார்.
1986ம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் இந்த உரோம் யூதமதச் தொழுகைக்கூடத்திற்குச் சென்றார். இஞ்ஞாயிறன்று இடம் பெறும் திருத்தந்தை 16ம் பெனடிக்டின் இப்பயணம், இந்த தொழுகைக்கூடத்திற்கு இரண்டாவது முறையாக ஒரு திருத்தந்தை மேற்கொள்ளும் பயணமாக அமைகின்றது.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட், ஏற்கனவே 2005ம் வருடம் ஜெர்மனியின் கொலோன் யூதத் தொழுகைக்கூடத்திற்கும், 2008ம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியுயார்க் யூதத் தொழுகைக்கூடத்திற்கும் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சனவரி 17, இஞ்ஞாயிறன்று திருத்தந்தை, உரோம் யூதமதத் தொழுகைக்கூடத்திற்குச் செல்வதை மிகவும் ஆவலுடன் வரவேற்பதாக அத்தொழுகைக்கூடத் தலைவர் ரபி Riccardo Di Segni கூறியுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.