2010-01-16 13:21:50

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3
அன்பு உள்ளங்களே, இந்த ஞாயிறு சிந்தனையின் போது, உங்கள் அனைவரையும் கானாவூர் திருமணத்தில் கலந்து கொள்ள அழைக்கிறேன். 
கானாவூரில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாய் திருமணத்திற்கானப் பல ஏற்பாடுகளைச் செய்வதற்கு ஏற்கனவே அங்கிருந்தார்.  திருமண நாளன்றும் இயேசுவின் தாய் நடந்த வைபவங்களில் கலந்துகொள்வதை விட, வந்திருந்தவர்களின் தேவைகளை நிறைவு செய்வதிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்தார். எனவேதான், திருமணப் பந்தியில் இரசம் தீர்ந்து வருவதை அவர் கவனித்தார். இவை சென்ற விவிலியத் தேடலில் நாம் சிந்தித்தவைகள். அது கானாவூர் திருமணம், பாகம் ஒன்று.
இன்று, கானாவூர் திருமணம் பாகம் இரண்டு. 
கல்யாண பந்தி மும்முரமாக நடந்துகொண்டிருந்தது. இயேசுவும் சீடர்களும் பந்தியில் அமர்ந்திருந்தனர். இயேசு அந்தத் திருமணத்தில் கலந்து கொண்டதைப் பற்றி முதலில் நம் சிந்தனைகள்.
திருமணங்கள் என்றால், மக்கள் கூடும் இடம். மக்கள் இருக்கும் இடமே, இறைவன் இருக்கும் இடம். அதனால், இயேசு அந்த திருமணத்தில் கலந்து கொண்டார். தன்னுடைய படைப்பின் சிகரமாய் மனிதர்களை இறைவன் படைத்த போதே, மக்களோடு தான் வாழ விழைந்ததை இறைவன் அழுத்தம் திருத்தமாய், ஆணித்தரமாய் சொல்லிவிட்டார். உறவுக்கு ஒரு இலக்கணமாகத்தானே, அந்த இறைவன் மூவொரு கடவுளாக இருக்கிறார். திருமணம் என்பது மனித உறவுகளிலேயே மிக நெருக்கமான, அழகான இலக்கணமாயிற்றே. அந்த இலக்கணத்தில் தன் இறை முத்திரையைப் பதிக்க மூவொரு கடவுளின் இறைமகன் அந்தத் திருமணத்தில் கொண்டது பொருத்தமான செயல்தானே. இதைப்பற்றி என் கேள்வி எழுப்ப வேண்டும்? உறவுகளை வலுப்படுத்தும் சந்தர்ப்பம் எதுவாக இருந்தாலும், கடவுள் அவைகளைத் தவற விட மாட்டார் என்பதைச் சொல்லாமல் சொல்லும் வண்ணம் இயேசு அந்த திருமணத்தில் கலந்து கொண்டார்.
செயல்திறம், வேகம் இவைகளை மையமாக, முக்கியமாகக் கருதும் நம் இன்றைய தலைமுறையினர் வேறொரு கேள்வியை எழுப்பலாம். உலகத்தை மீட்க வந்த இறைமகனுக்கு இருக்கப்போவதோ மூன்றாண்டுகள். அந்த மூன்றாண்டுகளிலும் மறையுரை நிகழ்த்தி, புதுமைகள் செய்து மக்களை மீட்பதற்கு பதிலாக... இப்படி கல்யாணம், விழாக்கள் என்று நேரத்தைச் செலவழிக்கலாமா?
அதுதான் இயேசுவின் அழகு. நமக்கும் இயேசுவுக்கும் உள்ள ஒரு முக்கிய வேறுபாடு. முன்பு ஒரு முறை சொன்னதை மீண்டும் நினைவு படுத்துகிறேன். இயேசு வாழ்ந்தது 33 ஆண்டுகள். அதில் 30 ஆண்டுகள் எதையும் பிரமாதமாகச் செய்ததாகத் தெரியவில்லை. ஒரு எளிய குடும்பத்தில் தன்னையே கரைத்துக் கொண்டார் அந்த இறைமகன். சாதாரண, எளிய, அன்றாட வாழ்வில் இறைவனைக் காண முடியும் என்னும் உண்மையை இயேசு இதைவிட அழகாகச் சொல்லியிருக்க முடியாது. தினசரி வாழ்வில் இறைவனைக் காண முடியும் என்பதை ஒரு பெரிய மறையுரையில் சொல்லாமல், வாழ்ந்தே காட்டினார் இயேசு.
சொல்லும் வார்த்தைகளைவிட, வாழும் வாழ்க்கையே சிறந்த மறையுரையாகும். இதற்கு ஒரு எடுத்துக்காட்டு, அசிசியின்  புனித பிரான்சிஸ் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம். ஒரு முறை அவர் தன் நண்பர்களிடம், "வாருங்கள் நாம் ஊருக்குள் சென்று போதித்துவிட்டு வருவோம்." என்று அவர்களை அழைத்துச் சென்றார். நண்பர்களும் ஆர்வமாய் கிளம்பினார்கள். பிரான்சிஸூம், நண்பர்களும் மெளனமாக அந்த ஊரை ஒரு முறைச் சுற்றிவிட்டு திரும்பினர். "போதிக்கலாம் என்று சொல்லிவிட்டு, ஒன்றும் பேசாமல் திரும்பிவிட்டீர்களே." என்று நண்பர்கள் கேட்டபோது, "இல்லையே, நாம் இப்போது போதித்துவிட்டுதானே வந்தோம்." என்றார் பிரான்சிஸ். வாய் வார்த்தைகளால் போதிப்பது ஒரு வகை. வாழ்க்கையால், நடத்தையால் போதிப்பது மற்றொரு வகை. இயேசு வாழ்ந்த ஒவ்வொரு நாளும் மற்றவருக்கு போதனைகளாகவே இருந்தன. இந்த கண்ணோட்டத்தில் பார்த்தால், அவர் அந்த திருமணத்தில் பங்கேற்றதும் ஒரு போதனைதான். இயேசு அந்த திருமணத்தில் கலந்து கொண்டதை இன்னும் பல கோணங்களில் சிந்திக்கலாம். இப்போதைக்கு இவை போதும் என்று நினைக்கிறேன்.
சீடர்களுடன் கல்யாண பந்தியில் அமர்ந்திருந்த இயேசுவிடம் தேவதாய் வருகிறார். தாழ்ந்த குரலில் ஏதோ சொல்கிறார். இயேசுவும் பதிலுக்கு ஏதோ சொல்கிறார். அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்பதை யோவான் நற்செய்தி இவ்வாறு கூறுகிறது. 
யோவான் 2: 3-4 
இயேசுவின் தாய் அவரை நோக்கி, “திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது” என்றார். இயேசு அவரிடம், “அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே” என்றார்.

இந்த உரையாடலிலிருந்து நாம் கற்றுக் கொள்ளக்கூடிய, கற்றுக் கொள்ளவேண்டிய சில பாடங்கள் உள்ளன. நமக்கு ஏதாவது ஒரு பொருள் தேவை என்றால், நம் தேவையை எடுத்துச் சொல்லி, பொருட்களை வாங்குவோம், அல்லது பெறுவோம். அதற்கு பதில் நம்மிடம் ஒரு பொருள் இல்லை என்று மட்டும் சொன்னால், அந்தப் பொருள் நமக்கு வரும் என்பது நிச்சயமில்லை. ஒரு சின்ன கற்பனை:
ஒரு மளிகைக் கடைக்குப் போகிறோம். அங்கே, கடைக்காரரிடம், "எனக்கு ஒரு கிலோ அரிசி, கால்  கிலோ சக்கரை குடுங்க." என்போம். இதுதான் வழக்கம். அதற்குப் பதிலாக, "கடைக்காரரே, எங்க வீட்டுல அரிசி இல்ல. சக்கரை இல்ல.." என்று மட்டும் நாம் சொன்னால், கடைக்காரர் நம்மை ஏற இறங்கப் பார்ப்பார்.
மரியா அந்தத் திருமண வீட்டில் எழுந்த தேவையைச் சொல்லிய விதம் இப்படித்தான் இருந்தது. மகனிடம் சென்று, "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது." என்றார். பல இறை வல்லுனர்கள் மரியாவின் இந்தக் கூற்றை அழகான ஒரு செபம் என்று கூறுகின்றனர். இரசம் தீர்ந்துவிட்டது என்பது சாதாரண, அன்றாட வாழ்வில் சொல்லப்படும் ஒரு எதார்த்தமான கூற்று. அதை எப்படி செபம் என்று சொல்வது என்று ஒரு சிலர் தயங்கலாம். ஆம், அன்பு உள்ளங்களே, இது ஒரு அழகிய செபம். இயேசு சொல்லித்தந்த ‘வானகத்திலுள்ள எங்கள் தந்தையே’ என்ற செபத்தைப் பார்த்தால், இந்த தயக்கம் தீரும். பெரும் இறையியல், மெய்யியல் தத்துவங்களெல்லாம் இந்த செபத்தில் கிடையாது. அங்கு இயேசு சொல்லித்தரும் விண்ணப்பங்கள் எல்லாமே, அன்றாட வாழ்வுக்கானவை. எங்கள் அனுதின உணவைத் தாரும், மன்னிக்கும் மனதைத் தந்தருளும், தீமைகளிலிருந்து எங்களைக் காத்தருளும். செபம் என்றதும், இது வேண்டும், அது வேண்டும் என்ற நீண்ட பட்டியல் ஒன்று நம் உள்ளத்தில் விரியும். இல்லையா? அதற்கு பதில், இறைவன் முன் அமர்ந்து, நம் வாழ்வின் உண்மைகளை எளிய வார்த்தைகளில் சொல்வதும் செபம். கடவுளிடம் நீண்ட பட்டியல்களை அனுப்புவதற்கு பதில், உள்ளத்தைத் திறந்து வைப்பது, உண்மைகளைச் சொல்வது இவை இன்னும் அழகான செபங்கள். இந்த செபத்தைச் சொல்வது அவ்வளவு எளிதல்ல. இப்படி ஒரு செபத்தைச் சொல்வதற்கு ஆழ்ந்த நம்பிக்கை வேண்டும். நமது தேவைகளை நம்மை விட அந்த நல்ல தேவன் நன்கு அறிவார் அவரிடம் உள்ள குறையைச் சொன்னால் போதும் என்று எண்ணுவதற்கு நிறைவான நம்பிக்கை வேண்டும்.
மீண்டும் அந்த மளிகைக் கடை உதாரணத்திற்கே செல்வோம். மளிகைக் கடைக்கு பொருட்கள் வாங்க வீட்டுத்தலைவன் வந்திருக்கிறார். அவர் அங்கு வருவதற்கு முன்னால், வீட்டில் என்ன நடந்திருக்கும்? நம் கற்பனையில் கொஞ்சம் பிளாஷ் பேக் (Flash Back) போவோம். அவர் கடைக்கு வருவதற்கு முன், வீட்டில் ஒரு செய்தித்தாளைப் படித்தபடி அமர்ந்திருக்கிறார். வீட்டுத் தலைவி காப்பி கலக்க சமையலறைக்குள் செல்கிறார். சர்க்கரை தீர்ந்துவிட்டதைப் பார்க்கிறார். அங்கிருந்தபடியே, "என்னங்க, சக்கர தீந்துடுச்சுங்க" என்கிறார். இதன் பொருள் என்ன? தயவு செய்து செய்தித்தாளை கீழே வைத்துவிட்டு, கடைக்குப் போய், சர்க்கரை வாங்கி வாருங்கள் என்பதுதானே? அவர் சட்டையை மாட்டிக்கொண்டிருக்கும் போது, "ஆங்... சொல்ல மறந்துட்டேன். அரிசியும் தீந்துடுச்சுங்க" என்று சொல்கிறார் வீட்டுத் தலைவி. தலைவன் இந்தத் தேவைகளுக்கு என்ன செய்வார் என்று தலைவிக்குத் தெரியும். அந்த நம்பிக்கையில் சொல்லப்பட்ட உண்மைகள். மரியாவும் இப்படி ஒரு உண்மையை இயேசுவுக்கு முன்னால் வைக்கிறார் - "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது." இயேசு புதுமைகள் செய்வாரா என்பதெல்லாம் சரியாகத் தெரியாவிட்டாலும், தன் மகன் பிரச்சனைகளைச் சமாளிப்பார் என்ற நம்பிக்கை அந்தத் தாயை இயேசுவிடம் கொண்டு சேர்த்தது.
இதற்கு இயேசு தரும் பதில்: "அம்மா, இதைப் பற்றி நாம் என்ன செய்ய முடியும்? என் நேரம் இன்னும் வரவில்லையே." தன் தாயைக் கொஞ்சம் கடிந்து கொள்வதைப்போல் உள்ளது இந்த வாக்கியங்கள். முதல் வாக்கியம் முற்றிலும் புரிந்து கொள்ளக்கூடிய வாக்கியம். "அம்மா, இது அவங்க வீட்டுக் கல்யாணம். இதையெல்லாம் அவங்க முன்னாலேயே யோசிச்சிருக்கணும். இப்ப வந்து திடீர்னு இரசம் தீர்ந்துடுச்சுன்னு சொன்னா, நாம் என்ன செய்ய முடியும்?" நியாயமான கேள்வி.
"உன் கேள்வியின் நியாயம் எனக்குப் புரிகிறது மகனே. ஆனால், நியாய, அநியாயம் பார்க்க இப்போது நேரமில்லை. அவசரமானத் தேவை. நிறைவு செய்ய வேண்டும்." என்று மனதுக்குள் தன் அன்னை எண்ணியதை இயேசு உணர்ந்திருக்க வேண்டும். தன்னுடைய அடுத்த எண்ணத்தைச் சொல்கிறார்: "என் நேரம் இன்னும் வரவில்லையே".
இயேசு கூறிய 'நேரம் வரவில்லை' என்பதை மரியா உணர்ந்தாரா என்பது நிச்சயமில்லை. முன்பு ஒரு முறை 12 வயது சிறுவனாய் இயேசுவைக் கோவிலில் மரியா மீண்டும் கண்டபோதும், சிறுவன் இயேசு என் தந்தையின் பணிகளில் நான் ஈடுபடவேண்டுமென உங்களுக்குத் தெரியாதா என்று சொன்னார். அப்ப்டோதும் மரியாவுக்கு முழுவதும் விளங்கவில்லை. ஆனால், அவற்றைத் தன் மனதில் சிந்தித்தபடியே வீடு திரும்பினார். இப்போதும் இயேசுவின் கூற்று சரிவரப் புரியவில்லை. ஆனால், தன் மகன் இந்தப் பிரச்சனைக்கு எப்படியாவது ஒரு தீர்வு காண்பார் என்பதில் அந்தத் தாய்க்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தது. எனவே அவர் பணியாளரை நோக்கி, “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்.” என்றார். மரியன்னைச் சொன்னதைக் கேட்டு பணியாளர்கள் இயேசு சொன்னதை எல்லாம், அதற்கு மேலும் செய்தனர்.  இயேசு சொல்வதையெல்லாம் நாம் செய்தால், தண்ணீர் இரசமாய் மாறியதைப் போல், நமது வாழ்வும் பல வகைகளில் மாறும். வரும் விவிலியத் தேடலில்  இந்தப் புதுமையைத் தொடர்ந்து சிந்திப்போம்.







All the contents on this site are copyrighted ©.