2010-01-16 13:18:07

அமெரிக்க ஐக்கிய நாட்டில் தங்கியுள்ள ஹெய்ட்டி நாட்டவர் தொடர்ந்து தங்கலாம் என்ற அதிபர் பராக் ஒபாமா அறிவிப்பிற்கு அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் ஆதரவு


சன.16,2010 ஹெய்ட்டியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை முன்னிட்டு, தற்போது அமெரிக்க ஐக்கிய நாட்டில் தங்கியுள்ள ஹெய்ட்டி நாட்டவர், அடுத்த 18 மாதங்களுக்கு அந்நாட்டில் தொடர்ந்து தங்கலாம் என்று அதிபர் பராக் ஒபாமா அறிவித்திருப்பதற்கு அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
ஒபாமாவின் இந்நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் பிரான்சிஸ் ஜார்ஜ், தற்போது அமெரிக்க ஐக்கிய நாட்டில் தங்கியுள்ள ஹெய்ட்டி நாட்டவர் அங்கேயே தங்குவதன் மூலம் ஹெய்ட்டியிலுள்ள தங்கள் உறவுகளுக்கு உதவ முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் வாழும் ஹெய்ட்டி நாட்டவர் 2007ம் ஆண்டில் 183 கோடி டாலரைத் தங்கள் தாயகத்திற்கு அனுப்பியிருப்பதாகவும், இது அந்நாட்டின் மொத்த உற்பத்தியில் ஏறத்தாழ 35 விழுக்காடு எனவும் அமெரிக்க வளர்ச்சி வங்கி வெளியிட்ட அறிக்கையையும் கர்தினால் தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.ஹெய்ட்டிக்கென, ஒபாமா 10 கோடி டாலரையும், பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன் 60 இலட்சம் பவுண்டுகளையும் உலக நிதியக பொறுப்பாளர்கள் 10 கோடி டாலரையும் அளிப்பதாக அறிவித்துள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.