2010-01-14 14:50:30

தமிழர் திருநாள், தமிழர் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


சன.14,2010 RealAudioMP3 தைப்பொங்கல் முடிந்து மாட்டுப்பொங்கல் விழாவுக்குத் தயாராகி வரும் உலகத் தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் வத்திக்கான் வானொலி தமது இனிய நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது. புதிய எண்ணங்கள், புதிய நண்பர்கள், புதிய முயற்சிகள், புதிய நம்பிக்கைகள், புதிய திட்டங்கள் போன்ற அனைத்தையும் சேர்த்து புதிய ஆண்டு, புது வாழ்வாகப் பொங்கட்டும்! புதிய ஆண்டில் மனித மனங்கள் பொங்கட்டும்.

இன்றைய ஒலிபரப்பில் நாளும் ஒரு நல்லெண்ணம், வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை, நேயர்களின் தமிழ்ப் புத்தாண்டு-பொங்கல் பண்டிகை தொலைபேசி வழி வாழ்த்துக்கள் மற்றும் செய்திகள் இடம் பெறுகின்றன.

அன்புள்ளங்களே, நன்றியின் நன்னாள். ஆம். நெல்லுக்கும் உழவர்க்கும் மடிதரும் நிலம்

உயிர்தரும் நீர் மூச்சுதரும் காற்று ஒளிதரும் சூரியன் மழைதரும் ஆகாயம் என்ற ஐம்பூதங்களுக்கும் நன்றியோடு விழா எடுக்கும் பொன்னாள்

வரப்புகளில் விளையாடி வயலுக்குள் வாழ்ந்து வளர்ந்த நெற்கதிர்களை வெண்மணி அரிசியாக்கி புத்தம்புதுப் பானையில் பாலும் சர்க்கரையும் பாகும் பருப்புமிட்டுப் பொங்கி

மஞ்சளும் இஞ்சியும் கரும்பும் கற்கண்டும் கூட்டி நிலத்தை முத்தமிட்டுச் சூரியனை வாழ்த்தி உழவர்தம் உயிர் நெகிழும் பொங்கல்நாள்.

அன்பர்களே, இந்தியாவில் குடியரசுத் தலைவர், சபாநாயகர், தமிழகத்தில் புதிய டிஜிபி, தலைமைச் செயலர் உட்பட பெண் தலைவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தலைநகரான வாஷிங்டனில் தற்போது இருக்கும் வெளிநாட்டு தூதர்களில் இந்திய தூதர் மீரா சங்கர் உட்பட 25 பேர் பெண்கள். இந்த நல்லநாளுக்கென நல்வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்ள இந்தச் செவ்வாயன்று எம்மைத் தொலைபேசியில் முதலில் அழைத்தவர்கள் இரண்டு பெண் நேயர்கள். அழைத்த மூவருள் இருவர் இதுவரை கடிதம் மூலம் நம்மோடு தொடர்பு கொள்ளாது, அதேசமயம் தினமும் நம் நிகழ்ச்சிகளைக் கேட்பவர்கள்.

அனைத்து தமிழர்களும் சிறந்து வாழ உங்களுக்கும். உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மகிழ்ச்சியும் அன்பும் மற்றும் எல்லா வளங்களும் பொங்கல் போல் என்றும் பொங்கட்டும் என மின் அஞ்சல்வழியாகவும்

மெட்டாலா எஸ்.பாஸ்கர், பேளுக்குறிச்சி கே.செந்தில், ஊத்துக்களி க.ராகம் பழனியப்பன், முணுகப்பட்டு பி.கண்ணன்சேகர், சவேரியார்பாளையம் எட்வின் தீபக், சென்னை அடைக்கலராசா, அன்பின்மடல் நவராஜன் சென்னை இயேசு சபை அருள்தந்தை விக்டர் எட்வின், ஜெர்மனி கபிரியேல் வேதநாயகம் போன்றோர் எமக்கு நல்வாழ்த்துக்களை அனுப்பியிருக்கிறார்கள். இன்னும் உங்களது வாழ்த்துக்கள் கடிதங்கள்வழி வந்து கொண்டிருக்கின்றன என்பதில் சந்தேகமே இல்லை.

மெட்டாலா எஸ்.பாஸ்கர், அவரது குரலிலே மின்அஞ்சலில் வாழ்த்தை அனுப்பியிருந்தார்.

இந்தத் தமிழ் புத்தாண்டில் உலகெங்கும் வாழும் தமிழர் அனைவரது வாழ்விலும் ஆனந்தம் பெருகட்டும்! அமைதி தவழட்டும்! செல்வம் செழிக்கட்டும்! என நாங்களும் வாழ்த்துகிறோம்








All the contents on this site are copyrighted ©.