2010-01-14 15:25:25

உரோம் மற்றும் லாட்சியோ மாகாண நிர்வாகிகளை வத்திக்கானில் சந்தித்தார் திருத்தந்தை


சன.14,2010 ஒரு சமூகத்தின் அரசியல், அறநெறி மற்றும் அதன் ஆன்மீக வளர்ச்சியின் மையமாக இருக்கும் மனிதனின் ஒருங்கிணைந்த நலம், அரசு நிர்வாகத்தில் இருப்போரின் முதன்மையான கரிசனையாக இருக்க வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
உரோம் மாநகராட்சி மேயர் ஜானி அலெமானோ, லாட்சியோ மாகாண உதவித் தலைவர் இன்னும் பிற உரோம் மற்றும் லாட்சியோ மாகாண நிர்வாகிகளை இவ்வியாழனன்று வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, உலகளாவிய பொருளாதார நெருக்கடி உரோம் மற்றும் லாட்சியோ மாகாணத்தையும் பாதித்துள்ள வேளை, இது முன்னேற்றத்திற்கான யுக்திகளை மீண்டும் சிந்திப்பதற்கு வாய்ப்பை வழங்கியுள்ளது என்று கூறினார்.
நீதியும் சகோதரத்துவ இணக்கமும் நிறைந்த வாழ்வை ஊக்குவிக்கும் நோக்கத்தில் சமூகத்தில் மிகவும் நலிந்தவர்கள் மற்றும் ஓரங்கட்டப்பட்டோரைப் பாதுகாப்பதற்கு இத்தலைவர்கள் எடுத்துவரும் முயற்சிகளைப் பாராட்டிய திருத்தந்தை, மனித வளர்ச்சி பற்றி தமது “காரித்தாஸ் இன் வெரித்தாத்தே” (Caritas in Veritate) திருமடலில் சொல்லப்பட்டிருப்பதையும் குறிப்பிட்டார்.
புதிய தலைமுறைகளின் கல்வி குறித்து அரசோடு சேர்ந்து திருச்சபையும் கரிசனையாக இருக்கின்றது என்றும் இளையோரின் உடனடித் தேவைகளை நிறைவேற்றுவதில் திருச்சபை பல ஆண்டுகளாகத் தனது ஒத்துழைப்பை நல்கி வருகின்றது என்றும் அவர் கூறினார்.உலக நோயாளிகள் மற்றும் துன்புறுவோர் பற்றியும் பேசிய திருத்தந்தை, உரோம் மற்றும் லாட்சியோ மாகாணப் பகுதியில் பல நலவாழ்வு வசதிகள் இருப்பது குறித்தும் இவை சமூகத்திற்கு முக்கிய பணிகளை ஆற்றி வருவது குறித்தும் குறிப்பிட்டார்.







All the contents on this site are copyrighted ©.