2010-01-13 15:04:01

நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள ஹெயிட்டி மக்களுக்குத் தன் அனுதாபத்தைத் தெரிவித்தார் திருத்தந்தை


சன.13,2010 கரிபியன் நாடான ஹெயிட்டியில் நில நடுக்கத்தில் இறந்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை 16ஆம் பெனெடிக்ட். ஹெயிட்டியில் இச்செவ்வாய் மாலை 7.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட ஒரு நிமிட நில நடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் மடிந்திருக்கலாம் என்று செய்திக்குறிப்புகள் கூறுகின்றன. இந்த நில நடுக்கத்தைத் தொடர்ந்து, ரிக்டர் அளவில் 5.5, 5.9 என  இரு நில அதிர்வுகளும் ஏற்பட்டதென கூறப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் தலைமைச் செயலகம், அரசுத் தலைவர் மாளிகை உட்பட பல முக்கிய கட்டிடங்கள் இந்த நிலநடுக்கத்தில் பெரும் சேதம் அடைந்துள்ளன. ஐக்கிய நாடுகளின் தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வந்த பலர் இன்னும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர் என்றும், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன என்றும் ஊடகங்கள் கூறுகின்றன. இங்கு ஏற்பட்டுள்ள உயிர்சேதம் குறித்த முழுவிவரங்களை அறிவதற்கு இன்னும் ஓரிரு நாட்கள் ஆகலாம் எனவும், இங்கு ஏற்பட்டுள்ள பொருட்சேதம் பல ஆயிரம் கோடி டாலர்களைத் தாண்டும் எனவும் செய்திக்குறிப்புகள் மேலும் கூறுகின்றன. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலேயே மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள ஹெயிட்டியில் 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட பல்வேறு இயற்கையழிவுகளில் ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர். இந்த நாட்டில் 80 விழுக்காட்டினர் கத்தோலிக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.