2010-01-12 16:22:03

திருத்தந்தையின் யூதமதத் தொழுகைக்கூடத்திற்கானத் திருப்பயணம் பல்சமய உரையாடலுக்கு உதவும்-எருசலேம் பிதாப்பிதா


சன.12,2010 வரும் ஞாயாறன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் உரோம் நகரின் யூதமதத் தொழுகைக் கூடத்தைச் சந்திக்கச் செல்லும் போது அவருடன் எருசலேம் இலத்தீன் ரீதி பிதாப்பிதாவும் புனித பூமியின் சில தலத்திருச்சபை அதிகாரிகளும் உடன் செல்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தந்தையுடன் உரோம் யூதமதத் தொழுகைக்கூடத்திற்கு இஸ்ரயேலுக்கான திருப்பீடப் பிரதிநிதி பேராயர் அந்தோணியோ பிரான்கோ மற்றும் தானும் கலந்து கொள்ளும் இப்பயணம் இஸ்ரயேல் மக்களில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தி இருமதங்களுக்கிடையேயான உறவுக்கு உதவும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார் எருசலேம் இலத்தீன் ரீதி பிதாப்பிதா பாவ்டு த்வால்.

யூதமதத் தொழுகைக்கூடத்தைக் கத்தோலிக்கத் தலைவர்கள் தரிசிக்கச் செல்வது வருங்காலத் தலைமுறையினரின் மனநிலையில் நல்லதொரு மாற்றத்தைக் கொணரும் என்றார் இஸ்ரயேலின் எபிரேய மொழி பேசும் கத்தோலிக்களுக்கான குரு டேவிட் நியுஹவுஸ்.

வரும் ஞாயாறன்று உரோம் யூதமதத் தொழுகைக் கூடத்தைச் சந்திக்கச் செல்லும் திருத்தந்தை, ஏற்கனவே 2005ம் வருடம் ஜெர்மனியின் கொலோன் யூதத் தொழுகைக்கூடத்திற்கும், 2008ம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியுயார்க் யூதத் தொழுகைக்கூடத்திற்கும் சென்று தரிசித்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.