2010-01-11 15:05:24

அரசுத்தூதுவர்களுக்கான திருத்தந்தையின் உரை.


ஜனவரி 11, 2010. படைப்பனைத்தும் காக்கப்படுவது நீதி மற்றும் அமைதியை பாதுகாப்பதற்கான முக்கியக்கூறு என இத்திங்களன்று வத்திக்கானில், திருப்பீடப்பிரதிநிதிகளை சந்தித்த வைபவத்தில் உரையாற்றினார் பாப்பிறை.

ஒவ்வோர் ஆண்டின் துவக்கத்திலும் திருப்பீடத்திற்கான பல்வேறு நாடுகளின் அரசுத் தூதுவர்களை திருப்பீடத்தில் சந்தித்து வழ்த்துக்களை பகிர்ந்துகொள்ளும் திருத்தந்தை, இவ்வாண்டு இயற்கையைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து அவர்களுக்கு உரையாற்றினார்.

கடவுள் மறுப்பு கொள்கை என்பது மனித சுதந்திரத்திற்கு இடையூறாக உள்ளது மட்டுமல்ல, இயற்கையை மதிக்காத நிலைக்கும் இட்டுச்செல்கிறது எனவும் கூறிய திருத்தந்தை, இன்றைய மனிதகுலம் எதிர்நோக்கும் பெரும்பிரச்னைகளுள், இயற்கைச் சூழல் அழிவு என்பதும் முக்கியமானதாக நோக்கப்படவேண்டும் என்றார்.

ஆப்ரிக்க நாடுகளில் உள்நாட்டு மோதல்கள், தென்அமெரிக்காவின் சில நாடுகள் மற்றும் ஆப்கானிஸ்தானில் போதைப்பொருள் பயிரிடுதல், உலக நாடுகள் ஆயுதங்களுக்கென பெருமளவு செலவழித்தல், மக்கள் பெருமெண்ணிக்கையில் நாடுகளை விட்டு வெளியேறுதல், மத்திய கிழக்கு நாடுகள், பாகிஸ்தான், எகிப்து ஆகிய நாடுகளில் கிறிஸ்தவர்களின் நிலை, அண்மைக்காலங்களில் பிலிப்பீன்ஸ், வியட்நாம், லாவோஸ், கம்போடியா, தைவான், இந்தோனேசியா ஆகியவைகளின் இயற்கைப்பேரிடர்கள், பாலஸ்தீனியர்களின் நிலை போன்றவைகளையும் எடுத்தியம்பிய திருத்தந்தை, கொலம்பியா-ஈக்வடோர், க்ரோவாசியா-ஸ்லோவானியா, அர்மீனியா- துருக்கி, ஆகிய நாடுகளிடையே ஏற்பட்டுள்ள இணக்க நிலைகளையும் பாராட்டினார்.

தற்போது திருப்பீடம் உலகின் 178 நாடுகளுடன் முழு அரசியல் உறவைக் கொண்டுள்ளது. திருத்தந்தை 16ம் பெனடிக்டின் காலத்தில் மோந்தேனேக்ரோ, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், போட்ஸ்வானா, ரஷ்யா ஆகியவை திருப்பீடத்துடன் அரசியல் உறவை உருவாக்கியுள்ளன.








All the contents on this site are copyrighted ©.