2010-01-09 16:48:51

திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவைத் தலைவர் காப்டிக் கிறிஸ்தவர்களுடன் ஒருமைப்பாட்டுணர்வு


சன.09,2010:எகிப்தில் காப்டிக் ரீதி கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் அன்று தாக்கப்பட்டதையடுத்து அக்கிறிஸ்தவர்களுடனான ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளார் திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவைத் தலைவர் கர்தினால் வால்ட்டர் காஸ்பர்.

காப்டிக் ரீதி ஆர்த்தாடாக்ஸ் பிதாப்பிதா மூன்றாம் ஷெனுடாவுக்கு (Shenouda) தனது ஆதரவைத் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ள கர்தினால் காஸ்பர், அடக்குமுறைகளுக்கு மத்தியில் அனைத்துக் கிறிஸ்தவர்களும் ஒன்றிணைய வேண்டும் மற்றும் கிறிஸ்து மட்டுமே அருளக்கூடிய அமைதியை ஒன்றிணைந்து தேட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அலெக்ஸாண்டிரியன் நாட்காட்டியைப் பயன்படுத்தும் காப்டிக் கிறிஸ்தவர்கள் சனவரி 7ம் தேதி கிறிஸ்துமசை சிறப்பி்க்கின்றனர்.

இதன்படி தென்எகிப்தின் நாஹ் ஹம்மாடி நகரிலுள்ள கன்னிமரியா ஆலயத்தில் இவ்வியாழனன்று கிறிஸ்துமஸ் பெருவிழா திருப்பலி முடித்து விசுவாசிகள் வெளியே வந்த போது இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் கொல்லப்பட்டனர்.

இரண்டு வாகனங்களை ஓட்டி வந்த மூன்று இளைஞர்கள் இவ்வன்முறையை நடத்தியுள்ளனர் என்று ஊடகங்கள் அறிவித்துள்ளன.

மேலும், இது குறித்துப் பேசிய நாஹ் ஹம்மாடி காப்டிக் ஆயர் அன்பா கிரோலோஸ், தனக்குப் பலமுறை கொலைமிரட்டல்கள் வந்ததாகவும் இந்தத் தாக்குதலில் தான் குறிவைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

கடந்த நவம்பரில் ஒரு கிறிஸ்தவர், முஸ்லீம் சிறுமி ஒருத்தியை பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுத்தினார் என்ற குற்றச்சாட்டு எழுந்ததிலிருந்து அந்நகரில் இரு சமயத்தவர்க்கிடையே பதட்டநிலைகள் இருந்து வருகின்றன என்றும் ஆயர் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.