2010-01-08 12:25:03

நாளும் ஒரு நல்லெண்ணம் -முதுமை பெருமையே


கணவனும் மனைவியும் தனிமையில் அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தார்கள். மனைவி சொன்னாள், 'உங்க அம்மாவுக்கு வயசாகிவிட்டால், புத்தி பேதலித்து விடும் போல. நொய், நொய் என்று எப்போதும் குறைக் கூறிக்கொண்டேயிருக்கிறார்கள்' என்று. கணவன் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, பின்னர் வாய் விட்டுச் சிரித்தான். மனைவிக்கோ கோபம். கணவன் சொன்னான், 'கோபப்டாதே. உன்னை நினைத்துச் சிரிக்கவில்லை. ஓர் 25ஆண்டுகளுக்குப் பின், நம் மகனிடம் அவன் மனைவி இதையேத்தான் சொல்லிக்கொண்டிருப்பாள் என்பதை நினைக்கும்போது சிரிப்பை அடக்க முடியவில்லை' என்று.

முதுமை என்பது பிறப்பிலிருந்தே துவங்குகின்றது. ஒவ்வொருக் காலக்கட்டத்திலும் முதுமை நிகழ்வு ஏற்படுகிறது. ஆனால் நாமோ, உடல் இயக்கங்களின் ஒத்துழையாமையை முதுமை என்கிறோம். முதுமை என்றால் என்னவென்று கேட்டால் அனுபவப்பெட்டகம் என்று கூறலாம். எரிந்து ஒளி கொடுத்ததன் சாட்சியாய் கீழே உருகி பரந்து கிடக்கும் மெழுகு தான் முதுமை. காலம் தன் வரிகளை அவர்களின் முகங்களில் விட்டுச் சென்றிருக்கலாம். அந்த அனுபவ வரிகளுடன் நம்மை வாரி அணைக்கக் காத்திருப்பதே முதுமை. முதியோர்க்குத் தேவை அனுதாபங்களல்ல, அரவணைப்பும் அவர்களைப் புரிந்து கொண்டு அவர்களை அவர்களாகவே வாழ விடுவதும்.








All the contents on this site are copyrighted ©.