2010-01-08 15:26:54

ஈராக்கில் கிறிஸ்தவர்கள் மனம் சோர்ந்து நாட்டை விட்டு வெளியேறுவதற்குத் தயாராகி வருகிறார்கள்- பேராயர் சாக்கோ


சன.08,2010 ஈராக்கில் தங்களது நிலைமை மேம்படுத்தப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்த கிறிஸ்தவர்கள், அதில் மனம் சோர்ந்து நாட்டை விட்டு வெளியேறுவதற்குத் தயாராகி வருகிறார்கள் என்று அந்நாட்டு பேராயர் ஒருவர் கூறினார்.

கிறிஸ்தவர்களின் நிலைமை குறித்து, Aid to the Church in Need என்ற அமைப்பின் பிரிட்டன் கிளையிடம் பேசிய கிர்குக் பேராயர் லூயிஸ் சாக்கோ, வடஈராக்கில் அடைக்கலம் தேடியுள்ள பல கிறிஸ்தவர்கள் நாட்டை விட்டு முற்றிலுமாக வெளியேறுவதற்குத் தீர்மானித்துள்ளனர் என்று தெரிவித்தார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தலைமையிலான கூட்டணிப் படைகள் ஈராக்கில் செயல்படத் துவங்கி ஏறத்தாழ ஏழு ஆண்டுகள் ஆகியும், கிறிஸ்தவர்கள் தங்களின் சொந்த தென் பகுதிக்குச் செல்ல இயலாமல் இன்னும் இருக்கும் சூழ்நிலையை எதிர் நோக்குகின்றனர் என்று பேராயர் மேலும் கூறினார்.

குர்திஸ்தானில் மக்களுக்கானப் பாதுகாப்பு நன்றாக இருந்தாலும், குர்த் அரசால் உருவாக்கப்பட்ட புதிய கிராமங்களில் வேலைவாய்ப்புகள் இல்லை, பிற வசதிகளும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

Aid to the Church in Need என்ற பிறரன்பு அமைப்பின் கணிப்புப்படி, ஈராக்கில் 1987ம் ஆண்டு 14 இலட்சமாக இருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை, தற்சமயம் சுமார் மூன்று இலட்சமாகக் குறைந்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.