2010-01-05 15:18:20

விவிலியத் தேடல்:


RealAudioMP3
சனவரி 4 திங்களன்று துபாயில் உலகத்திலேயே மிக உயரமான கட்டிடம் திறக்கப்பட்டது. 2600 அடி உயரமான இந்தக் கட்டிடம் இதுவரை உலகிலேயே அதிக உயரமாய்க் கருதப்பட்ட Taipei 101 கட்டிடத்தைவிட ஏறக்குறைய 1000 அடி கூடுதலான உயரம் கொண்டது. கடந்த 20 ஆண்டுகளாய் உலகின் மிக உயரமான கட்டிடங்கள் ஆசியாவிலும், அரபு நாடுகளிலும் அதிகம் கட்டப்பட்டுள்ளன. மலேசியாவின் Petronas கோபுரம், Shanghaiயில் உலக வர்த்தக மையம், Taipei 101 இப்போது Burj Dubai என்ற இந்தக் கட்டிடம்.
கட்டிடங்களைப் பற்றிய ஆராய்ச்சி இப்போது ஏன்? காரணம் உள்ளது. அதுவும் உயரமான, மிக, மிக உயரமான கட்டிடங்களைப் பற்றி இன்று நான் சிந்திப்பதற்கு, திங்களன்று வாசித்த Burj Dubai கட்டிடம் ஒரு காரணம். வேறு ஒரு காரணமும் உண்டு.
2001ம் ஆண்டு செப். 11 இரண்டு விமானங்களால் தாக்கப்பட்ட நியூயார்க் வர்த்தக மையங்களின் இரு கோபுரங்களை நாம் மறந்திருக்க வாய்ப்பில்லை. 110 மாடிகளைக் கொண்ட அந்த கோபுரங்களின் 106வது மாடியில் அமைந்திருந்த ஒரு உணவகத்திற்கான விளம்பரம் இப்படி வந்திருந்தது. At night, please don't touch the stars! இரவில் தயவு செய்து விண்மீன்களைத் தொடாதீர்கள். விண்மீன்கள் தொட்டுவிடும் தூரத்தில் இருப்பது போலவும், அவைகளுக்குப் பக்கத்தில் நாம் அமர்ந்திருப்பதைப் போலவும் ஒரு உணர்வை ஏற்படுத்த இந்த விளம்பர வரிகள். அந்த வர்த்தக மையங்களின் உயரத்தைச் சொல்லாமல் சொல்லும் விளம்பரம் இது.
பொதுவாகவே, விளம்பரங்களைப் பற்றி நாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பல கனவுகளை உள்ளத்தில் விதைத்து, ஏக்கங்களை உண்டாக்குவதுதான் விளம்பரங்களின் முக்கிய வேலை. விண்மீன்களைத் தொடக்கூடும் என்பதும் அப்படி ஒரு கனவு, கற்பனைதான். அடிப்படையில் மனித குலத்திற்கு இந்த வேட்கை, ஏக்கம் ஆழ்மனதில் குடிகொண்டுள்ளது. வானத்தைத் தொட்டு விட வேண்டும்.
பறக்கும் முயற்சிகள், ராக்கெட் முயற்சிகள் என்று விண்வெளியை வெல்வதற்கு நாம் மேற்கொண்ட முயற்சிகள் ஆயிரமாயிரம். பூமியில் காலூன்றி, அதே நேரம் விண்ணைத் தொடும் முயற்சிகளின் ஒரு பகுதியாகத் தான் நம் அடுக்கு மாடி கட்டிடங்களைப் பார்க்க வேண்டும். மனித குலம் பாபேல் கோபுரம் கட்டும்போதே இதுபோன்ற முயற்சிகளை ஆரம்பித்தது. தொடக்க நூலில் இந்த முயற்சி பற்றி சொல்லப்பட்டுள்ள வரிகள் இவை.

தொடக்கநூல் (ஆதியாகமம்) 11 1-9
அப்பொழுது உலகம் முழுவதிலும் ஒரே மொழியும் ஒரே விதமான சொற்களும் இருந்தன. மக்கள் கிழக்கிலிருந்து புறப்பட்டு வந்து சினயார் நாட்டில் சமவெளி ஒன்றைக் கண்டு, அங்கே குடியேறினர். அப்பொழுது அவர்கள், ஒருவரை ஒருவர் நோக்கி, ″ ″ வாருங்கள், நாம் செங்கற்கள் அறுத்து அவற்றை நன்றாகச் சுடுவோம்″ ″ என்றனர். அவர்கள் செங்கல்லைக் கல்லாகவும் கீலைக் காரையாகவும் பயன்படுத்தினர். பின், அவர்கள் ″ ″ வாருங்கள், உலகம் முழுவதும் நாம் சிதறுண்டு போகாதபடி வானளாவிய கோபுரம் கொண்ட நகர் ஒன்றை நமக்காகக் கட்டி எழுப்பி, நமது பெயரை நிலை நாட்டுவோம்″ ″ என்றனர். மானிடர் கட்டிக்கொண்டிருந்த நகரையும் கோபுரத்தையும் காண்பதற்கு ஆண்டவர் கீழே இறங்கி வந்தார். அப்பொழுது ஆண்டவர், ″ ″ இதோ! மக்கள் ஒன்றாக இருக்கின்றனர். அவர்கள் எல்லோரும் ஒரே மொழி பேசுகின்றனர். அவர்கள் செய்யவிருப்பதன் தொடக்கமே இது! அவர்கள் திட்டமிட்டுச் செய்யவிருப்பது எதையும் இனித்தடுத்து நிறுத்த முடியாது. வாருங்கள், நாம் கீழே போய் அங்கே ஒருவர் மற்றவரின் பேச்சைப் புரிந்து கொள்ள முடியாதபடி, அவர்கள் மொழியில் குழப்பத்தை உண்டாக்குவோம்″ ″ என்றார். ஆண்டவர் அவர்களை அங்கிருந்து உலகம் முழுவதிலும் சிதறுண்டுபோகச் செய்ததால் அவர்கள் நகரைத் தொடர்ந்து கட்டுவதைக் கைவிட்டனர். ஆகவே அது ″ ″ பாபேல்″ ″ என்று வழங்கப்பட்டது. ஏனெனில் அங்கே ஆண்டவர் உலகெங்கும் வழங்கி வந்த மொழியில் குழப்பத்தை உண்டாக்கினார். அங்கிருந்து அவர்களை ஆண்டவர் உலகம் முழுவதிலும் சிதறுண்டு போகச் செய்தார்.

இன்றும் இந்த முயற்சி தொடர்கிறது. பூமியில் உறுதியாக நிற்க வேண்டும், அதே நேரம் மேகங்களில் சவாரி செய்து கொண்டு, விண்மீன்களைத் தொட்டு விளையாடிக்கொண்டு, நிலவின் ஒளியில் சாப்பிட்டுக் கொண்டு... மனித குலத்தின் கற்பனைகளுக்கும், கனவுகளுக்கும் வேலிகள் போடுவது கஷ்டம்.
ஒரு கோணத்தில் இருந்து பார்க்கும் போது, இந்தக் கற்பனைகள், கனவுகள் தாம் மனித குலத்தை இதுவரைப் பல அழிவுகளிலிருந்து பாதுகாத்திருக்கின்றன. பல அழிவுகளுக்கு நாம் உட்பட்ட போது நம்மை மீட்டு கொண்டு வந்திருக்கின்றன. முன்னேற்றங்களைத் தந்திருக்கின்றன.
இந்த கனவுகள், கற்பனைகள் எல்லாமே கட்டிடங்களையும், கோபுரங்களையும் மட்டும் எழுப்பவில்லை. மனிதர்களையும் கட்டி எழுப்பியுள்ளன. அந்தச் சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளவே இன்றைய விவிலியத் தேடல். சென்ற ஞாயிறு சிந்தனையில் "விண்மீன்களின் ஒளியில் நடந்தனர் இந்த ஞானிகள்" என்ற ஒரு சிந்தனையைப் பகிர்ந்துகொண்டோம். அந்த சிந்தனையின் இறுதியில்:
"உண்மையான   விண்மீன்களைப் பார்த்ததால், அந்த விண்மீன் காட்டிய பாதையில் சென்றதால் தங்கள் வாழ்க்கைப் பாதையையே மாற்றிய ஞானிகளைப் போல் எத்தனையோ நல்ல உள்ளங்கள் தங்களையும், உலகத்தையும் மாற்றியிருக்கிறார்கள். அவர்களைப் பற்றி தொடர்ந்து சிந்திப்போம்.” என்று முடித்தேன். அந்த தொடர் சிந்தனை முயற்சிதான் இது.
தங்களையும், உலகத்தையும் மாற்றியவர்கள் என்று நினைக்கும்போது, நம் மனங்களில் கட்டாயம் ஓர் சிலரது பெயர்கள், உருவங்கள் பதிவாகும். பளிச்சிடும். மகாத்மா காந்தி, மதர் தெரசா, நெல்சன் மண்டேலா, மார்டின் லூத்தர் கிங் என்று பலரது பெயர்கள் வந்து போகும். வரலாற்றில் இப்படி இடம் பெறாமல் ஆனால், மக்கள் பலரது உள்ளங்களில் இடம் பெற்று அவர்களது வாழ்வை மாற்றிய ஆயிரமாயிரம் சிறு விண்மீன்களை நினைத்துப் பார்க்கும் ஒரு முயற்சி இது.
நான் இன்று உங்களுடன் பகிர விழைவது 32 வயதான Tai Lihua என்ற பெண்ணைப் பற்றி. சீனாவில் Hubei மாநிலத்தில் 1976ல் பிறந்தவர் Tai Lihua. இவருக்கு 2 வயது நடக்கும் போது, காய்ச்சல் வந்தது. அப்போது தவறுதலாகக் கொடுக்கப்பட்ட ஓர் ஊசியால், கேட்கும் திறனை இழந்தார். இவர் உலகம் மௌனமானது.
நடனம் ஆடுவதில் மிகவும் ஆர்வம் கொண்ட இவர் ஏழாம் வயதில் செவித்திறன் பேச்சுத் திறன் இழந்தோர் பள்ளியில் சேர்ந்தார். அங்கு ஒரு நடன ஆசிரியர் நடன வகுப்புகள் நடத்தும் போது தன் கால்களால் தரை அதிரும்படி தாளமிடுவார். அவரது கால்கள் அனுப்பிய தாள அதிர்வுகள் அங்கிருந்த Tai Lihuaவின் உடலில் பரவியது. அந்த அதிர்வுகளை உள்வாங்கி அவர் நடனமாட ஆரம்பித்தார்.
நடனக்கலையில் இவர் தேர்ந்ததும், இவரைப் போல செவித்திறனையும், பேசும் திறனையும் இழந்து அதே நேரம் நடனமாடும் கனவு, ஆர்வம் (வெறி) இவைகளை இழக்காமல் வாழ்ந்து வந்த பலரை இணைத்து நடனக் குழுவொன்றை ஆரம்பித்தார். My Dream (என் கனவு) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் குழுவில் 200க்கும் அதிகமான கலைஞர்கள் உள்ளனர். உடலால் குறையுள்ள, அங்கங்களை இழந்த இந்தக் கலைஞர்கள் உலகப் புகழ்பெற்ற ஒரு கலைக் குழுவாக இன்று திகழ்கின்றனர்.
2008ம் ஆண்டு பெய்ஜிங்கில் ஒலிம்பிக் போட்டி நடந்த போது இந்தக் குழுவினர் அளித்த நிகழ்ச்சி அகில உலக பார்வையாளர்களை மெய் மறக்கச் செய்தது. புத்தரின் 1000 கைகள் என்ற இவர்களது நடனத்தை வீடியோவில் பார்த்தேன். அசந்து போனேன். அவ்வளவு துல்லியமாக, அழகாக, கச்சிதமாக, தாளம் தப்பாமல் அவர்கள் ஆடினர். அதைவிட பெரிய ஆச்சரியம் எனக்குக் காத்திருந்தது. அந்த நடனத்துக்கான இசையையோ, தாளத்தையோ அவர்களால் கொஞ்சமும் கேட்க முடியாது என்று அறிந்தபோது என் மனதில் ஏகப்பட்ட பிரமிப்பு.
இந்த நடனக் குழுவைப் பற்றிய இந்த பிரமிப்பு அந்த நடனங்களோடு நின்றுவிடவில்லை. அதையும் தாண்டி, இந்தக் குழுவினர் சென்ற இடங்களிலெல்லாம் மக்கள் மத்தியில் நம்பிக்கையை, நல்லெண்ணங்களை விதைத்துள்ளனரே, அந்தச் செய்திகளைக் கேட்கும் போதும் இந்த பிரமிப்பு பல மடங்காகியது.
ஒரு முறை இந்த நடனக் குழு சீனாவில் மத்திய சிறைச் சாலையில் கலை நிகழ்ச்சிகளை முடித்த பின், Tai Lihua கைதிகளைச் சந்தித்து பேசினார் தன் சைகை மொழியால். அவர் சொன்னது இதுதான்: "கைதிகளாகிய உங்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சியை நடத்துவது பற்றி நாங்கள் முதலில் பயந்தோம், தயங்கினோம். ஆனால், இன்று உங்களைச் சந்தித்து பேசும் போது, பல விதங்களில் நாம் ஒரே மாதிரியாக இருப்பதை உணர்கிறேன். நாங்கள் உடலளவில் ஊனமுற்றவர்கள். நீங்கள் மனதளவில் ஊனமுற்றவர்கள்." என்று அவர் சொன்னதைக் கேட்ட கைதிகள் கண் கலங்கி நின்றனர்.
போலந்து நாட்டில் அந்த நாட்டு அரசுத் தலைவர் உட்பட பல உயர் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற ஒரு மாபெரும் நிகழ்ச்சிக்குப் பின், கலைஞர்கள் உள்ளே சென்று உடைகளை மாற்ற ஆரம்பித்துவிட்டனர். அப்போது நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தவர்கள் கலைஞர்களை மீண்டும் மேடைக்கு வரும்படி அழைத்தனர். அந்த அரங்கம் எழுப்பிய கரவோலியையும் கேட்க இயலாதவர்கள் என்பதால், கரவொலியை உணராமல் வந்துவிட்டதாக சொல்லி அவர்களிடம் Tai Lihua மன்னிப்பு கேட்ட போது, அந்த அரங்கத்தில் இருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீர் மல்கியது.
இப்படி பல செய்திகள். கலை நிகழ்ச்சிகள் வழியாகவும், அந்த நிகழ்ச்சிகளைத் தாண்டியும் Tai Lihuaவும் அவரது குழுவும் உலகில் பல கோடி மக்களின் மனங்களைத் தொட்டு, அவர்களில் நம்பிக்கையை வளர்த்து வருகின்றனர்.
Tai Lihuaவைப் போல் உடலால் குறைவுபட்ட போதிலும், உள்ளத்தில் நம்பிக்கை குறைவுபடாமல் சாதனைகள் புரிந்த இசை மேதை பீத்தோவன் கவிஞர் ஜான் மில்டன் என்று பலரை உலகம் பாராட்டுவது நமக்குத் தெரிந்த வரலாறுதான்.

My Dream (என் கனவு) என்ற இந்தக் குழுவைப் பாராட்டும் போது பலரும் சொல்லும் ஒரு வாக்கியம் இது: A special art star of mankind and image ambassador for 600 million people with disabilities in the world. "உலகில் இன்று உடல் ஊனத்துடன் வாழும் 60 கோடிக்கும் மேலான மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் இந்தக் கலைக்குழு." என்று சொல்வார்கள். இந்தக் குழுவினர் இந்த சனவரி 10ஆம் தேதி சென்னை, நேரு விளையாட்டரங்கத்தில் மாலை 6 மணி அளவில் தங்கள் கலை நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார்கள் என்றும், அந்த நிகழ்ச்சியின்  மூலம் வசூலாகும் தொகை தூய இருதய நிலையத்தில் உள்ள தொழுநோயாளிகளின் பணிக்கென வழங்கப்படும் என்றும் செய்தியில் வாசித்தேன்.

விண்மீனைத் தொடர்ந்து, இறைவனைக் கண்ட ஞானிகளின் பயணம் பல நூற்றாண்டுகளாய் பலரிடம் இறைதாகத்தை உண்டாக்கியது என்று ஞாயிறன்று கூறினேன். இந்த ஞானிகளின் கதை வேறு பல கற்பனைக் கதைகளுக்கு வித்திட்டுள்ளது. அவைகளில் ஒன்று Henry Van Dyke எழுதிய "The Other Wise Man" மற்றுமொரு ஞானி என்ற கதையும் ஒன்று. இந்தக் கதையில் வரும் ஞானியின் பெயர் Artaban. மற்ற மூன்று ஞானிகளைப் போல் விண்மீனைக் கண்டு பயணம் ஆரம்பிக்கத் துடித்தார் Artaban. ஆனால், தான் சந்திக்கச் செல்லும் அந்த மன்னனுக்கு பரிசுகள் ஏந்திச் செல்ல நினைத்தார். தன் சொத்துக்கள் அனைத்தையும் விற்று விலையுயர்ந்த மாணிக்கம், வைரம், முத்து ஆகியவற்றை வாங்கிக் கொண்டார். இதனால், அவரது பயணம் கொஞ்சம் தாமதமானது. பாலை நிலத்தை முடிந்தவரை வேகமாகக் கடந்துகொண்டிருந்த போது, நோயுற்று சாகும் நிலையிலிருந்த ஒரு யூதர் பாலைவனத்தில் மயங்கிக் கிடந்ததைப் பார்த்தார். நோயாளியை விட்டுவிட்டுச் செல்ல நினைத்தார். ஆனால் மனம் இடம் தரவில்லை. தன்னிடம் இருந்த மாணிக்கத்தை விற்று, அந்தப் பணத்தைக் கொண்டு நோயாளியைக் கவனித்தார். தன் பயணத்திற்கும் தேவையானவைகளை வாங்கிக்கொண்டார்.
அவர் பெத்லகேம் வந்தபோது, மற்ற மூன்று ஞானிகளும் மீண்டும் தங்கள் நாட்டுக்குப் போய்விட்டதை அறிந்தார். அதைவிட பெரும் ஏமாற்றம்... குழந்தை இயேசுவை அவரது பெற்றோர் எகிப்துக்குக் கொண்டு சென்றுவிட்டனர் என்ற செய்திதான். பயணத்தைத் தொடர நினைக்கும் போது, ஏரோதின் படைவீரர்கள் அங்குள்ள குழந்தைகளைக் கொல்வதற்கு வருவதைப் பார்த்தார். தன்னிடம் இருந்த வைரத்தை அவர்களுக்கு சன்மானமாகக் கொடுத்து, குழந்தைகளைக் காப்பாற்றினார்.
இவ்வாறு, Artaban 33 ஆண்டுகள் தனது மன்னனைத் தேடி இறுதியில் எருசலேம் வந்தார். அங்கு இயேசுவை ஏற்கனவே சிலுவையில் அறைவதற்கு கல்வாரிக்குக் கொண்டு சென்று விட்டனர் என்று கேள்விப்பட்டார். தன் கையிலிருக்கும் விலையுயர்ந்த முத்தை அந்த வீரர்களிடம் கொடுத்து இயேசுவை மீட்டு விடலாம் என்று கல்வாரி நோக்கி விரைந்தார். போகும் வழியில் போர்வீரர்களிடம் சிக்கிக் கொண்ட ஒரு பெண்ணை விடுவிக்க அந்த முத்தையும் கொடுத்தார்.
அந்த நேரத்தில், அந்த பகல் நேரத்தில், திடீரென இருள் சூழ்ந்தது. நிலநடுக்கம் ஏற்பட்டது. Artaban தலையில் அடிபட்டு கீழே விழுந்தார். அவருக்கு மட்டும் கேட்கும் விதமாக: "இந்தச் சிறியவர்களுள் ஒருவருக்கு நீர் இதைச் செய்யும் போது, எனக்கேச் செய்தீர்." என்ற குரல் கேட்டது. இக்குரலைக் கேட்டதும், Artaban தான் தேடி வந்த அரசனைக் கண்டு கொண்ட திருப்தியோடு கண்களை மூடினார்.
மனதுக்கு நிறைவைத்தரும் ஒரு கதை. விண்மீனைக் கண்டு பயணம் புறப்பட்டவர்களேல்லாம் கடவுளை நேரில் கண்டனரா? இல்லையே. எத்தனையோ பேர், கடவுளை நேரில் காணாத போதும், அந்தக் கடவுளின் நியதிகளை வாழ்நாள் முழுவதும் பின்பற்றி, அவர்களே பலரை வழிநடத்தும் வின்மீண்களாயினர் என்பதை Artaban புரிய வைக்கிறார். நடனம் என்ற ஆழ்ந்த தாகத்தின் வழியாய் உள்ளத்தில் தோன்றிய ஒரு விண்மீனைத் தான் தொடர்ந்து, மற்றவர்களுக்கும் அந்த விண்மீனைக் காட்டி வழிநடத்திய Tai Lihuaவும், விண்மீனைத் தொடர்ந்து போயும் இறுதிவரை இறைவனைப் பார்க்காமல், இறைவனின் மறு சாயலாய் வாழ்ந்த Artabanம் மக்களின் மனங்களில் பல அடுக்கு மாளிகையாய் கோபுரங்களை எழுப்பியுள்ளனர். துபாயில் கட்டப்பட்டுள்ள அந்த அடுக்கு மாடியைவிட அதிகம் மதிப்புடைய இந்த கோபுரங்கள் எல்லா நாடுகளிலும் எல்லாருடைய மனங்களிலும் எழுப்பப்படவேண்டுமென இறைவனை வேண்டுவோம்.







All the contents on this site are copyrighted ©.