2010-01-04 15:59:41

நாளொரு நல்லெண்ணம்


சன.04,2010 ஒருசமயம் புகழ் பெற்ற அறிஞர் லீ, “யாஓஷன்” என்ற ஜென் குருவைச் சந்திப்பதற்காக அக்குருவின் மடத்திற்குச் சென்றார். அவர் மடத்தை அடைந்த போது, அந்தக் குரு ஏதோ சுலோகங்களை உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தார். நெடுநேரம் லீ அங்கு நின்று கொண்டிருந்தும் குரு அவரைக் கவனித்ததாகத் தெரியவில்லை. என்ன இது? இவரைப் பற்றி என்னவெல்லாம் கேள்விப்பட்டேன். இங்கு நிலைமை வேறு விதமாக இருக்கிறது. திரும்பிப் போய்விடலாம் என்று நினைத்து வந்த வழியே நடக்க ஆரம்பித்தார் லீ. அப்போது லீ என்ற குரல் கேட்டுத் திரும்பினார். லீ, நீ காதுகளை மட்டும்தான் நம்புகிறாய். கண்களை நம்பவில்லையா? என்றார் குரு. தன்மன ஓட்டத்தை இந்தக் குரு எவ்வாறு புரிந்து வைத்திருக்கிறார் என்று நினைத்து லீ அதிர்ச்சியடைந்தார். என்னை மன்னிக்க வேண்டும். பொறுமையில்லாமல் திரும்பிப் போக முயன்று விட்டேன். சுவாமி, தாவோ என்றால் என்ன என்று கேட்டார் லீ. அதற்கு குரு, நீலவானத்தில் நீந்தும் மேகங்கள். சீசாவிலுள்ள தண்ணீர் என்றார். ஞானம் பெற்றார் அறிஞர் லீ.

“யாஓஷன்” என்ற அந்தக் குரு, மேகம்தான் தண்ணீராகிறதா, அல்லது தண்ணீர்தான் மேகமாகிறதா என்று வீண் விவாதம் செய்து குழப்பிக் கொள்ளாதே. மேகத்தைக் காணும் போது அதைப் பார்த்து ரசி. தண்ணீராக இருக்கும் போது அதை எடுத்துக் குடி. இயற்கையை உள்ளபடியே ஏற்றுக் கொள் என்று சொன்னார்.








All the contents on this site are copyrighted ©.