2010-01-04 15:55:45

திருத்தந்தை- 2010ம் ஆண்டில் குறைந்தது நான்கு வெளிநாட்டுத் திருப்பயணங்கள்


சன.04,2010 மால்ட்டா, போர்த்துக்கல், சைப்ரஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு என, இந்த 2010ம் ஆண்டில் குறைந்தது நான்கு திருத்தந்தையின் வெளிநாட்டுத் திருப்பயணங்கள் இடம் பெறும் அவரது ஆண்டுத் திட்டத்தில் குறிக்கப்ப்டடுள்ளது.

ஏப்ரலில் மால்ட்டாவுக்கும், மே மாதத்தில் பாத்திமாவுக்கும் செப்டம்பரில் பிரிட்டனுக்கும் செல்வதற்குத் திட்டமிட்டுள்ள திருத்தந்தை, ஜூனில் அவர் சைபரசுக்குச் செல்லும் போது மத்திய கிழக்குப் பகுதி ஆயர் மன்றத்தில் விவாதிப்பதற்கான வரைவு தொகுப்பை வெளியிடுவார் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த ஆயர் மாமன்றம் வத்திக்கானில் அக்டோபர் 10-24 வரை நடைபெறும்.

புனித பவுல் மால்ட்டாவில் கரை சேர்ந்ததன் 1950ம் வருடத்தை முன்னிட்டு அந்நாட்டிற்குத் திருத்தந்தை திருப்பயணம் மேற்கொள்வார் என்றும், இவ்வாண்டில் இத்தாலியில் மேற்கொள்ளும் நான்கு பயணங்களில் அவர் தூரின் நகருக்குச் செல்லும் போது இறந்த இயேசுவின் உடலைப் போர்த்தியிருந்ததாக நம்பப்படும் சவத்துணியைப் பார்வையிடுவார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

திருத்தந்தையர் 12ம் பத்திநாதர், இரண்டாம் ஜான் பவுல் ஆகியோரின் வீரத்துவமான பண்புகளைத் திருத்தந்தை அங்கீகரித்து, அவர்களை இறையடியார்கள் என்ற நிலைக்கு உயர்த்தியுள்ளார். இதனால் இவர்கள், குறிப்பாக திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் இவ்வாண்டில் முத்திப்பேறு பெற்றவர் என அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பை செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.

மேலும், இவ்வாண்டில் விவிலியம் பற்றிய திருமடல் ஒன்றையும், நாசரேத்தூர் இயேசு என்ற தமது நூலின் இரண்டாவது பாகத்தையும் திருத்தந்தை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பும் இருக்கின்றது.

2010ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி சர்வதேச குருக்கள் ஆண்டு நிறைவுறுவதை முன்னிட்டு ஜூன் 9 முதல் 11 வரை உரோமையில் நடைபெறும் உலக குருக்கள் மாநாட்டை நிறைவு செய்யும் திருப்பலியைத் திருத்தந்தை நிகழ்த்துவார் என்றும் திருப்பீடம் அறிவித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.