2010-01-02 15:09:02

அயர்லாந்து கர்தினால் காஹல் டாலி இறைபதம் அடைந்ததையொட்டி திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபங்கள்


சன.02,2010 அயர்லாந்தின் முன்னாள் கத்தோலிக்க பிதாப்பிதா கர்தினால் காஹல் டாலி இறைபதம் அடைந்ததையொட்டி தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கும் இரங்கல் தந்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இரண்டு அயர்லாந்துகளும் ஒன்றிணைவதற்கு கடுமையாய் உழைத்த கர்தினால் டாலி, தனது 92 வது வயதில் இவ்வியாழன் மாலை பெல்பாஸ்ட்டில் உயிர் துறந்தார். இதனையொட்டி அயர்லாந்து தலத்திருச்சபையின் தலைவர் கர்தினால் ஜான் பாப்பிஸ்ட் பிராடிக்கு இரங்கல் செய்தி அனுப்பிய திருத்தந்தை, இக்கர்தினாலின் பிரிவால் வருந்தும் அவரின் குடும்பத்தினருக்கானத் தனது ஒருமைப்பாட்டையும், செபத்தையும் தெரிவித்துள்ளார்.

கர்தினால் டாலி, குருவாக, ஆயராக, அயர்லாந்து திருச்சபைத் தலைவராக என அகிலத் திருச்சபைக்கும் தலத்திருச்சபைக்கும் ஆற்றியுள்ள அரும் சேவைகளுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை. இன்னும், வடஅயர்லாந்தில் நீதியையும் அமைதியையும் நிலைநாட்ட அவர் எடுத்துக் கொண்ட கடும் முயற்சிகளையும் பாராட்டியுள்ளார்.

மேலும், பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், அயர்லாந்தின் தற்போதைய கத்தோலிக்கப் பிதாப்பிதா கர்தினால் ஜான் பிராடி, பிபிசி உட்பட பலர் தங்களது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர். அத்துடன், அமைதி, கிறிஸ்தவ ஒன்றிப்பு, மக்களிடையே நல்லிணக்கம் போன்றவற்றிக்கான அவரது சேவைகளையும் பாராட்டியுள்ளனர்.

இறையியல் வல்லுனரும் இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கத்தில் பங்கெடுத்தவருமான மறைந்த கர்தினால் டாலி, 1990ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி அயர்லாந்தின் பிதாப்பிதா மற்றும் அர்மாஹின் பேராயராகப் பணியைத் தொடங்கினார். தனது 79வது வயதில் 1996ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார்.








All the contents on this site are copyrighted ©.