2010-01-01 14:34:14

2010ஆம் ஆண்டின் முதல் நாள் திருப்பலி நிகழ்த்தி மறையுரை வழங்கினார் திருத்தந்தை 16ஆம் பெனெடிக்ட்


சன.01,2010 ஆண்டின் முதல் நாள் வெள்ளியன்று பகல் 10 மணிக்கு வத்திக்கானில் புனித பேதுரு பேராலயத்தில் திருப்பலி நிகழ்த்தி மறையுரை வழங்கினார் திருத்தந்தை 16ஆம் பெனெடிக்ட். அப்போது, அங்கு கூடியிருந்த அனைவரையும் வாழ்த்தி, ஆண்டின் முதல் நாளான இன்று இறைவனின் தாயான மரியாவின் திருநாளையும், உலக சமாதான நாளையும் கொண்டாடும் அருளையும், மகிழ்வையும் நாம் பெற்றுள்ளோம் என்று கூறினார்.
“ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!” என்ற எண்ணிக்கை நூலின் கருத்தை மையமாகக் கொண்டு தன் மறையுரையை ஆரம்பித்தார் திருத்தந்தை. இறைவனின் திருமுகம் வரலாற்றில் பல வழிகளில் வெளியாகி இறுதியில் இறைமகன் கிறிஸ்துவில் முழுமையாக வெளியானது எனவும், இறைவனின் முகத்தையும், மனிதரின் முகத்தையும் தியானிக்க இன்றைய இறைவாக்கு நம்மை அழைக்கும் நேரத்தில் உலகத்தின் முகத்தையும் அங்கு நிலவும் சமாதானத்தையும் நாம் நினைக்கக் கடமைப்பட்டிருக்கிறோம் என்றும் கூறினார் பாப்பிறை.நாம் கொண்டாடும் 43வது உலக சமாதான நாளுக்கு தன் சிறப்பு செய்தியாக  "உலக படைப்பைக் காப்பாற்றுவதே, உலக சமாதானத்தை வளர்க்கும் சிறந்த வழி. படைப்பைப் பல வழிகளிலும் அழித்து விட்டு கடவுளின் முகத்தைத் தேடுவது வீணான முயற்சி. எனவே படைப்பையும், மனிதர்களையும் பேணி காக்கும் போது, இறைவனின் முகத்தை நாம் தொடர்ந்து தெளிவாகக் காண முடியும்." என்று திருத்தந்தை கூறினார். கிறிஸ்துமஸ் காலத்தில் நமது அலங்காரங்களில் இடம்பெறும் கிறிஸ்துமஸ் மரங்களையும், மற்றும் மலர்களையும் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, இந்த அலங்காரங்கள் வழியாக இயற்கையும், மனிதமும், இறைமையும் இந்த விழாவில் இணைவதையும், கிறிஸ்து பிறப்பால் மனுக்குலமும், இயற்கைச் சூழலும் மீண்டும் புத்துயிர் பெறுவதையும் நினைவுபடுத்தினார் திருத்தந்தை.







All the contents on this site are copyrighted ©.