2009-12-30 15:43:33

திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம்


டிச.30,2009 அன்புள்ளங்களே, 2009ம் ஆண்டுக்குப் பிரியா விடை கொடுத்து 2010ம் ஆண்டை வரவேற்க நம்மையே தயாரித்து வருகிறோம். இந்தப் புத்தாண்டை உரோமையில் கொண்டாட வந்திருக்கும், மற்றும்பிற பயணிகளில் பலர் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் பொது மறைபோதகத்தைக் கேட்பதற்காக இப்புதன் காலை பாப்பிறை ஆறாம் பவுல் மண்டபத்தில் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு, 12ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற இறையியல் வல்லுனர் பீட்டர் லொம்பார்ட் பற்றி எடுத்துச் சொன்னார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

RealAudioMP3 திருத்தந்தை ஆங்கிலத்தில் ஆற்றிய உரையை நம் தாய்மொழியில் தருகின்றோம்.

அன்புச் சகோதர சகோதரிகளே, மத்திய காலக் கிறிஸ்தவக் கலாச்சாரம் பற்றிய நம் மறைக்கல்வியில் இன்று, 12ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற இறையியல் வல்லுனர் பீட்டர் லொம்பார்ட் குறித்து நோக்குவோம். பீட்டர், பாரிசின் நோத்ருதாம் புகழ்வாய்ந்த பள்ளியில் பேராசிரியராகப் பணியாற்றி பாரிசின் ஆயராக இறந்தார். “கூற்றுகள்” என்ற இவரின் மிகவும் பிரபல்யமான ஏடு, தொடக்ககாலத் திருச்சபைத்தந்தையர் எழுத்துக்களிலிருந்து சேகரிக்கப்பட்ட நான்கு நூல்களின் தொகுப்பாகும். இது இறையியல் கற்பிப்பதற்கு கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளது. “கூற்றுகள்” என்ற இவரின் ஏடு, பல நூற்றாண்டுகளாக இறையியலுக்குத் தரமான முன்னுரையாக அமைந்திருந்தது. புனிதர்கள் பெரிய ஆல்பர்ட், பொனவெந்தூர், தாமஸ் அக்குய்னாஸ் போன்ற பெரும் வல்லுனர்களின் எண்ணங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. கத்தோலிக்க விசுவாசத்தின் இத்தகைய தரவுகள் திருச்சபைக்குத் தேவைப்படுகின்றன. இதிலுள்ள விசுவாசத்தின் ஒவ்வொரு தனிப்பட்ட கூறும், கடவுளின் வெளிப்படுத்தப்பட்ட உண்மையின் ஒன்றிப்பையும் அவரின் மீட்பளிக்கும் திட்டத்தின் மகத்துவத்தையும் பிரதிபலிக்கின்றது. இவ்வாறு பீட்டர் லொம்பார்டின் எழுத்துப் பணி, இக்காலத்திற்குத் தேவையாக இருக்கிறது. கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்வி ஏட்டிற்கும் இது உதவியிருக்கிறது. திருவருளின் வெளிப்படையான அடையாளமும் காரணமுமாக இருக்கும் திருவருட்சாதனம் பற்றிய பீட்டரின் விளக்கமும், திருவருட்சாதனங்களின் ஏழு எண்கள் குறித்த அவரின் போதனையும் இந்தத் “கூற்றுகள்” ஏடு வழங்கியுள்ள மிக முக்கியமானவைகளில் ஒன்றாகும். இந்தக் குருக்களின் ஆண்டில், திருவருட்சாதனங்களின் திருப்பணியாளர்களாகிய குருக்களும் அனைத்து விசுவாசிகளும், நமது விசுவாசத்தின் அழகையும் இணக்கத்தையும் போற்றுவதில் வளரவும், திருவருட்சாதன வாழ்வை வளர்க்கவும், இதன் மூலம் கிறிஸ்துவோடும் திருச்சபையோடும் ஐக்கியத்தில் வளரவும் ஊக்கப்படுத்துகிறேன்.

RealAudioMP3 இவ்வாறு இப்புதன் மறைபோதகத்தை நிறைவு செய்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், புதிதாகப் பிறந்துள்ள நம் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் மகிழ்ச்சியும் அமைதியும் திருப்பயணிகள் அனைவரையும் நிறைக்கட்டும் என்று வாழ்த்தி தமது அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.

RealAudioMP3All the contents on this site are copyrighted ©.