2009-12-28 16:53:56

2009 - கடந்து வந்த பாதைத் தடங்கள்


டிச.28,2009 அன்பர்களே, 2009ம் ஆண்டு நிறைவடைய இருக்கின்றது. இவ்வேளையில் கடந்து வந்த பாதை எப்படி என்று அரசியல் தலைவர்கள் முதல் சமான்ய மனிதன் வரை திரும்பிப் பார்க்கின்றனர். உலக அரங்கில், தனிப்பட்ட நாடுகளில், குடும்பங்களில், தனிமனிதர்களில் பல சாதனைகளும் வீழ்ச்சிகளும் இடம் பெற்றிருக்கின்றன. ஏன் நீங்கள்கூட உங்கள் வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை எதிர்நோக்கியிருப்பீர்கள். கத்தோலிக்கத் திருச்சபையை நோக்கினால் புனித பவுல் ஆண்டு நிறைவடைந்து குருக்கள் ஆண்டு நடந்து வருகின்றது. திருத்தந்தை 16ம் பெனடிக்ட், புனித பூமிக்கும் ஆப்ரிக்காவுக்கும் திருப்பயணங்களை மேற்கொண்டுள்ளார். ஆப்ரிக்காவுக்கான இரண்டாவது சிறப்பு ஆயர் மாமன்றம் நடந்துள்ளது. திருத்தந்தை, அமெரிக்க அதிபர் ஒபாமாவை முதன்முறையாகச் சந்தித்துள்ளார். இருநூறுக்கும் மேற்பட்ட, உயர் பணியில் இருப்போர் மற்றும் உயர்மட்ட குழுக்களைச் சந்தித்துள்ளார். முன்னூருக்கும் அதிகமான ஆயர்களுடன் உரையாடியுள்ளார். ஐம்பதுக்கு அதிகமான ஆடம்பரத் திருவழிபாடுகளை நிகழ்த்தியிருக்கிறார். பத்து புதிய புனிதர்கள் திருச்சபைக்குக் கிடைத்துள்ளார்கள்.

இந்தியாவை நோக்கினால், முதன்முறையாகத் தமிழர் ஒருவர், ஏ.ஆர்.ரஹ்மான், இரண்டு ஆஸ்கார் விருதுகளைப் பெற்றிருக்கிறார். விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் என்ற தமிழர், உலகின் உயரிய விருதான நொபெல் பரிசை வென்றிருக்கிறார். காயத்ரி என்ற தமிழ்ப்பெண், தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் ஜூனியர் புலியாகியிருக்கிறார். 2009ல் மட்டும் காயத்ரியின் கையில் மொத்தமாக 15 தங்கப் பதக்கங்கள். சகாயம் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி, பணியில் கடமையும் தூய்மையும் நிறைந்த கலெக்டர் என்ற பாராட்டைப் பெற்றிருக்கிறார். இந்திய நீதித் துறை வரலாற்றில் பார்வை அற்ற முதல் நீதிபதியான டி.சக்கரவர்த்தி, 'சாதிப்பதற்கு ஊனம் ஒரு தடையல்ல' என்பதை இன்னொரு முறை அழுத்தமாக நிரூபித்திருக்கிறார். இவ்வாறு 2009ம் ஆண்டில் சாதனைகளும் பல நம்பிக்கைகளும் தொடர்கின்றன.

அன்புள்ளங்களே, நம் அண்டை நாடான இலங்கையில் என்ன நடந்தது என்பதை உலகமே அறியும். முள்வேலிக் கம்பிகளுக்கு வெளியில் மக்கள் நடமாடத் தொடங்கியிருக்கின்றனர். ஜனவரியில் ஜனாதிபதித் தேர்தல். இந்நிலையில் அந்நாட்டின் மன்னார் மறைமாவட்ட குருகுல அதிபர் அருள்திரு விக்டர் மரியசூசை அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம்.

இலங்கைத் தமிழர் கடந்து வந்த பாதை மிகவும் கரடுமுரடானது. பட்ட வேதனைகள் துன்ப துயரங்கள் எண்ணிலடங்காதவை. ஆயினும் நம்பிக்கையில் புதிய ஆண்டில் தடம் பதிக்கத் தயாராகி வருகின்றனர். இந்த இவர்களின் நம்பிக்கை இவர்களை புதிய பாதையில் நடத்திச் செல்லும் என்று நாம் நம்புவோம்.

பொதுவாக நம் வாழ்க்கையை அலசும் போது, இன்று நாம் என்னதான் உயர்ந்த நிலையில் இருந்தாலும், நாம் கடந்து வந்த பாதையினையும், நாம் உயர்ந்த நிலைக்கு வருவதற்கு உதவியவர்களையும் மறந்து விடக்கூடாது. நாம் கடந்து வந்த பாதை சரியாக இருப்பின் இனிக் கடக்கப் போகும் பாதையும் சரியாக அமையும். அதே சமயம் கடந்து வந்த பாதை சரியாக இல்லாமல் இருந்தால் அதைச் சீரமைப்பதுதான் நல்ல மனிதனுக்கு அழகு. எனவே 2009ம் ஆண்டின் அனுபவங்கள் புதிய ஆண்டின் ஏற்றத்திற்குப் படிக்கற்களாக அமையட்டும். இறைவனின் துணையோடு நல்ல விழுமியங்களை வாழ்க்கையின் அணிகலன்களாகக் கொள்வோம். இலட்சங்களைவிட்டு விட்டு இலட்சியங்களை வாழ்வாக்குவோம்.

சீடன் ஒருவன் குருவிடம் கேட்டான், "எல்லாப் பாதைகளும் இறையாட்சிக்குத்தான் போய்ச் சேரும். ஆனால், ஒரு குறிப்பிட்ட பாதை, முக்தியின் வாசலுக்கே நேரடியாக அழைத்துச் செல்லும் என்று சொன்னீர்களே, அந்தப் பாதை எங்கே துவங்குகிறது?" என்று. அதற்கு குரு, சீடன் நின்ற இடத்தைச் சுட்டிக்காட்டி, "இங்கே" என்றார். ஆம். இருக்கும் இடத்தை விட்டு நாம் புறப்படத் தயாராக இல்லை. முதல் அடி எடுத்துவைத்தால்தான், அடுத்த அடி, அதற்கடுத்த அடி என்று ஒரு பயணம் நிகழும். இருக்கும் இடத்தைவிட்டு ஓரடிகூட நகரத் தயாராக இல்லாதவருக்கு, ஆன்மிகப் பயணம் மட்டுமல்ல, அடுத்த தெருவுக்கான பயணம்கூட நேராது. ஆதலால் தங்கு தடையின்றி பயணத்தைத் தொடருவோம்.





 








All the contents on this site are copyrighted ©.